இறைவனே எழுதிய திருவாசகம்!

Oct 02, 2025,03:06 PM IST

- திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர்


திருவாசகம் பிறந்த வரலாற்றை அறிவோமா?


தில்லையில் ஞானக்கூத்தனாகிய சிவபெருமான் தன் பொற்கரம் வருந்த எழுதியருளிய உலகின் ஒரே அருள்ஞானநூல் என்பது தெய்வத்தமிழாகிய திருவாசகம் ஒன்றே.


இறைவன் சிவபெருமான் ஒருகாலத்தில் மணிவாசகப் பெருமானை, தற்போது தில்லைக்காளி கோயில் அருகில் உள்ள மணிவாசகரின் பர்ணசாலையில் சந்திக்க செல்கிறார்.


ஐயா! வணக்கம். நான் இந்த ஊரை சேர்ந்தவன். உங்களுடைய பாடல்களை பலமுறை கேட்டு மகிழ்ந்து எல்லையில்லா ஆனந்தத்தில் பரவசம் அடைந்திருக்கிறேன். ஆகையால் அப்பாடல்களை  பாராயணம் செய்ய விரும்புவதால், பனை ஓலையில் எழுதிக் கொள்ள வேண்டி தங்களை தேடி அலைந்தேன். தாங்கள் இங்கே இருப்பதாக அறிந்து தற்போது வந்தேன்.


அப்பாடல்களை தாங்கள் சொன்னால், நான் எழுதி கொள்கிறேன் என்றார் சிவ அந்தணராக வந்த இறைவன். குரல் வந்த திசை நோக்கி மாணிக்கவாசகர் திரும்புகிறார். 


வந்த அந்தணருக்கு களையான முகமும், ஒளி பொருந்திய கண்களுமாக இருந்தது. பார்த்தவுடன் அனைவரையும் கவரும் முகம் கொண்ட அவரால், உள்ளன்புடன் வைக்கப்பட்ட கோரிக்கையை, மாணிக்கவாசகரால் தவிர்க்க இயலவில்லை. தன்னை அறியாமல் அதற்கு சம்மதம் தெரிவித்து பாடல்களை சொல்ல தயாரானார். அதை எழுத அந்தணர் வடிவில் வந்த இறைவனும் ஆயத்தமானார்.




தன்னைத் தேடி வந்திருப்பவர், அடியார்களிடம் திருவிளையாடல் நடத்துவதில் பேரின்பம் கொண்ட ஈசன்தான் என்பதை  மாணிக்கவாசகர் என்று போற்றப்படும் திருவாதவூரார் உணரவில்லை. தன்னிலை மறந்து அவர் பாடல்களை சொல்லிய வேகத்திலேயே, அவை பனை ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட அதிசயம் அங்கே நிறைவேறி முடிந்தது.


திருவாசகம் முழுவதும் எழுதியாகி விட்டது. அதன் பின்னர், திருச்சிற்றம்பலத்தின் மேல் திருக்கோவை பதிகம் ஒன்று வேண்டும் என்று அந்தணர்  வேண்டுகிறார். தன்னை அறியாத நிலையில் மாணிக்கவாசகர் அதையும் பாடி முடிக்கிறார். எழுதி முடித்தவுடன் அந்தணராக வந்த இறைவன் மறைந்து விடுகிறார்.


மாணிக்கவாசகருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தணர்  வடிவில் வந்த இறைவன் , ஓலைச் சுவடிகளை தில்லை அம்பலமான சிதம்பரத்தின் கருவறை வாசல்படியில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்.


மறுநாள் காலை சிதம்பரம் நடராஜருக்கான அன்றாட பூஜைகளை செய்ய வந்த அர்ச்சகர், நுழைவு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடியை பார்த்தார். அதை கைகளில் எடுத்து கவனித்தபோது, திருவாதவூரார் சொல்லச் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது. 


பூட்டப்பட்ட கோயிலின் கருவறை வாசலில் இந்த ஓலைச் சுவடியை வைத்தது யார்?’ என்று திகைத்தார், குழம்பினார். அவரால் எவ்வித முடிவுக்கும் வர இயலாமல், மேற்கொண்டு விவரங்களை அறிய, தில்லை வாழ் மூவாயிரமவர் சபையில் ஓலைச் சுவடியை சமர்ப்பித்தார்.


சபையினருக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன. "ஓலைச் சுவடியை வைத்தது யார்? இறைவனா? அல்லது வேறு யாராவதா? கையெழுத்தாக அழகிய சிற்றம்பலமுடையான் என்று இருப்பதால் சிவபெருமானே இதை வைத்ததாக எடுத்துக்கொள்ளலாமா? என்றெல்லாம் பல கேள்விகள் அவர்களுக்குள்.


இறுதியாக தில்லைவாழ் அந்தணர்களின் சபைத் தலைவர், இறைவனை பிரார்த்தித்துவிட்டு, ஓலைச்சுவடியை பிரித்து படிக்கத் தொடங்கினார். அதில் சிவபெருமானை பாட்டுடை தலைவனாகக் கொண்ட ‘திருவாசகம்’ மற்றும்  ‘திருக்கோவை பதிகம்’ ஆகியவை இருந்தன. பாடலின் மூலம் எழுந்த உணர்வுகள், அனைவரது மனதையும் உருக்கி விட்ட அதிசயம் அங்கே நிறைவேறியது. அதன் காரணமாக, பாடல்களுக்கான மூல விளக்கத்தை அறிந்து கொள்ள அனைவரும் விரும்பினர்.


பாடல்களின் அடியில் ‘திருவாதவூரார் சொல்லச் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு, இதுபற்றி திருவாதவூராரையே சந்தித்து கேட்பது  என்று சபையில் முடிவானது.


தன்னைத் தேடி வந்திருக்கும் தில்லைவாழ் மூவாயிரவர் சபையினரிடம், “இந்த அடியவனை நாடி அனைவரும் வந்துள்ள காரணம் என்ன?” என்றார் திருவாதவூரார்.


கோயில் கருவறை முன்பு ஓலைச்சுவடி இருந்தது முதல், அதைப் படித்தது வரை கூறி சபையின் தலைவர், “பாடலின் நயம் புரிந்தது. ஆனால் முழுவதுமாக அர்த்தம் விளங்கவில்லை. சுவடியின் அடியில் திருவாதவூரார் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையோன் எழுதியது என்ற குறிப்பும் உள்ளது. ஆகையால் தான் தங்களை சந்தித்து தக்க விளக்கம் பெற வந்துள்ளோம்” என்றார்.


திருவாதவூராரின் உடல் முழுவதும் ஒரு கணம் அதிர்ந்தது. சுதாரித்துக்கொண்ட அவர், “அந்த ஓலைச்சுவடியை நான் பார்க்கலாமா என்றார்!


பணிவுடன் கேட்ட அவரது கைகளில் தரப்பட்ட ஓலைச்சுவடியை கண்டதும், கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. பிறந்த குழந்தையை கையில் தாங்கும் அன்னையைப் போல, பரவசத்துடன் ஓலைச்சுவடியை கைகளில் தாங்கினார். உள்ளம் நிறைய அதனை தடவியபடி ஒவ்வொரு சுவடியாக பார்த்தார். பாடலின் அடியில் இருந்த ‘அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்ற வார்த்தையை கண்டு கண்ணீர் பெருக்கு இன்னும் அதிகமானது. அதை மீண்டும் மீண்டும் கண்களில் ஒற்றியவாறே இறைவனின் திருவிளையாடலை எண்ணி உள்ளம் பூரித்து நின்றார்.


சிவபெருமானின் கரங்களால் எழுதப்பட்ட தமிழை படிக்க, அவரது இரண்டு கண்கள் போதவில்லை. “இறைவா.. உன்னை எப்படி போற்றுவேன். இந்த அடியவன் சொன்னதை உனது திருக்கரங்களால் எழுதக் கூடிய பாக்கியம் பெற, எந்த பிறவியில் தவம் செய்தேனோ? இப்பிறவியில் அது வாய்த்தது” என்று பலவாறாக உணர்வுகளை வெளிப்படுத்திய திருவாதவூராரை, கூடியிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


அப்போது திருவாதவூராரின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒளியில் தோன்றிய இறைவன், “திருவாதவூராரே! நீ என்னுடைய பாதத்தை அடையும் காலம் வந்துவிட்டது. சிற்றம்பலம் நோக்கி வந்து எனது பாதத்தில் புகுவீராக..” என்று கூறி மறைந்தார்.


தன்னிலை மறந்து நின்றவர், நினைவு வந்தவராக சபையினரைப் பார்த்துச் சொன்னார், “ஐயா.. இந்த பாடல்களுக்கான அர்த்தத்தை நான் சிற்றம்பலத்தின் சன்னிதியில் தெரிவிக்கலாமா? என்றார்‌.


அனைவரும் அதை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர். திருவாதவூரார் முன்னே செல்ல, மூவாயிரமவர் சபை அவரை பின் தொடர்ந்தது.


தில்லை சிற்றம்பலத்திற்கு சென்று நின்ற திருவாதவூரார் கருவறையை சுட்டிக் காட்டி, இந்த பொன்னம்பலத்தானே இந்த அனைத்து பாட்டுகளுக்கும் பொருள் ஆவான்” என்று கூறியவாறே, இறைவனின் பாதத்தை நோக்கி சென்று ஒளி வடிவமாக கலந்து விட்டார். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள இந்த விஷயம் மிகத் தெளிவாகச் சொல்கிறது, திருவாசகத்தின் பொருள் இறைவன்தான் என்று. அதுமட்டுமல்ல இதற்கான ஆதாரம் திருவாசகத்தின் இரண்டாம் அதிகமான கீர்த்தித் திருவகவலில் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாசகத்தின் பொருள் மட்டும் தான் அல்ல,  மாணிக்கவாசகர் சொல்ல தன் கைப்பட எழுதியது என்பதற்கு ஆதாரத்தையும் இறைவன் நமக்கு கீர்த்தித் திருவகவல் மூலமாக கொடுத்திருக்கிறார். கீர்த்தித் திருவகவலின் 26 - 28ம் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக் 26

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்

சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் 28


கூறு - பாதி, உடை - புடவை, மங்கை - பெண், குடநாடு - மேல் நாடு, மிசை - உயர்ந்த, உன்னத,  சதுர் - தந்திரம் சூழ்ச்சி உபாயம், சாத்தாய் - பாடல்,


தமிழ் அகராதிகளின் படி மேற்கண்ட வரிகளின் பொருள்

தன்னில் பாதியாக உள்ள புடவை கட்டிய மங்கையும், தானும் வந்து

மேல் நாட்டைச் சேர்ந்த உயர் குதிரையை கொண்டு

சூழ்ச்சி செய்து, பாடலாய் (திருவாசகமாய்) தான் எழுந்தருளி என்று வருகிறது. மாணிக்கவாசகர் தன் கைப்பட திருவாசகத்தை ஓலைச்சுவடிகளில் எழுதி இருந்தால், இங்கே  கூறு உடை மங்கையும் தானும் என்று எழுதி இருக்க மாட்டார்.


நம்மைப்போன்ற எளியவர்கள், புராணங்களில் சொல்லப்பட்டவை எல்லாம் கதை அல்ல அவைகள் எல்லாம் உண்மை என்பதை புரிந்து கொள்வதற்காகவே இந்த வரிகளில் மிக அழகாக, கூறு உடை மங்கையும் தானும்  என்றும் சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் என்றும் ஆதாரங்களை மறைமுகமாக கொடுத்திருக்கிறார்.


*நமக்கு திருவாசகம் கொடுத்த மாணிக்கவாசகரின் பொற்பாதங்களையும், அதை நமக்காக தன் கைப்பட எழுதிய இறைவன் திருப்பாதங்களையும் வணங்கிப் போற்றி தென்னாடு செய்த தவப்பயன் என்று உளமார மகிழ்வோம்!


அப்படிப்பட்ட உலகப் பரம்பொருளாம் சிவபெருமானே தன் பொற்கரத்தால் எழுதிய   உலகின் ஒரே ஞானநூலாகிய திருவாசகத்தை அவர் சபையிலேயே நின்று தமிழர்களாகிய நாம் பாடுவதற்கு அனுமதி இல்லை என்பதை கேட்டு வெட்கித் தலைகுனிய கூடிய விசயம் தமிழர் சமுதாயத்திற்கு இதைவிட வேறொன்றும் இருக்க முடியாது. தில்லைக் கோயிலைக் கட்டிய இரணியவர்ம மன்னரின் வாரிசுகளான தில்லை ஞானமா நடராஜப் பெருமான் கோயிலின் உரிமையாளரான, பிச்சாவரம் ஜமீனிடம் இருந்து தில்லைக் கோயிலை அபகரித்தவர்களே இன்று எங்கிருந்தோ வந்த இந்த தில்லை தீட்சிதர்கள். இவர்கள் தில்லைக் கோயிலை அபகரித்த காலம் சுமார் 150 ஆண்டுகளுக்குள்.


இப்படி தில்லைக் கோயிலுக்கும், தில்லை தீட்சிதர்களாகிய இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் எள்ளளவும் இல்லாத நிலையை உணராத, மூடத்தமிழர்களாய் நாம் வாழ்ந்து வருவதால், நம் தமிழ் மன்னர்கள் கட்டிய ஆயிரக்கணக்கான கோயிலில், தமிழராகிய நாமே இன்று கருவறை செல்ல அனுமதி இல்லை. வழிபாடு தமிழில் இல்லை. இப்படி நமமைப்பற்றி நாமே உணராததால் பலவற்றை நாம் இழந்து வருகிறோம். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், தமிழ்நாட்டில், நம் தமிழ் மொழிக்கான அனைத்தையும் முற்றிலும் இழந்து நம்மொழிக்கே நாம்போராட வேண்டிய இறுதிக் கட்டத்தில் விளிம்பில் நின்று வருகிறோம்.


இதை எல்லாம் நம்மினமான தன்மானத் தமிழர்கள் உணராதவரை ஒருவிடிவுகாலம் பிறக்காது என்பதே கசப்பான உண்மையாகும்.


இனியாவது தமிழர்களாகிய நாம் இதை எல்லாம் உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்.


(கட்டுரையாளர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர், செந்தமிழ் சிவ அறநெறி சைவசமய புரட்சிப் பேரியக்கத்தின் நிரந்தர நிறுவனத் தலைவர். திருமுறைக் கலைக்களஞ்சியம், தெய்வத்தமிழிசை அறிஞர், சைவசமயப் புரட்சியாளர், திருமுறைப் புரட்சி வேந்தர், சைவத்தமிழ்ச் சுடர்மணி, முனைவர் உள்ளிட்ட பட்டங்கள் பெற்றவர். சிவ.ச. நடராஜ தேசிகர் தொடர்பு கைபேசி எண்கள். 91 9788065610, 9488055610)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்