சென்னை: திமுகவுடன் சமீப காலமாக மறைமுகமாக மோதலில் ஈடுபட்டு வரும் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று காலையில் போட்ட டிவீட் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு அல்லது ஆட்சியில் பங்கு குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருந்து வருகிறது. இருப்பினும், 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு, கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை மெல்ல எழுப்பத் தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸிலிருந்துதான் பலரும் கிளம்பியுள்ளனர். அதிலும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் சமீபத்திய கருத்துக்கள் திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை கடுமையாக அவர்கள் ஆட்சேபித்தும் வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் அமைப்பு வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் யதார்த்தம் என்று குறிப்பிட்டார். அதில் அவர் முன்வைத்த மிக முக்கியமான கருத்து:
"இனி அதிகாரம் மட்டுமல்ல... அதிகாரப் பகிர்வைப் பற்றியும் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது."
இந்தக் கருத்து, வரும் தேர்தலில் காங்கிரஸ் வெறும் இடங்களைப் பெற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பதோடு நின்றுவிடாமல், அமைச்சரவையிலும் இடம் பெற விரும்புகிறது என்பதைப் பகிரங்கப்படுத்தியது.
மாணிக்கம் தாகூரின் இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதுகுறித்துக் கூறுகையில், கூட்டணி குறித்து ராகுல் காந்தியும் மு.க. ஸ்டாலினும் தான் முடிவு செய்வார்கள். தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஆகாது என்று பதிலடி கொடுத்தார்.
திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா இதுகுறித்து தெரிவிக்கையில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதே கூட்டணியின் நோக்கம் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது யாருக்கு லாபம் அளிக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் பங்கு பெற்று ஏறத்தாழ 58 ஆண்டுகள் ஆகிறது. திமுகவால் வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் கட்சி இன்று அதே திமுகவுடன்தான் கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில், தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவே அதிகாரப் பகிர்வு கோரப்படுவதாக காங்கிரஸ் தரப்பு வாதிடுகிறது.
எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி வருவதாக மாணிக்கம் தாகூர் கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டுகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம் (JMM) - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு வகிப்பது போல, தமிழகத்திலும் ஜனநாயக முறைப்படி அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது மாணிக்கம் தாகூரின் பிடிவாதமான கருத்தாக உள்ளது.
தற்போது இந்தக் கருத்து மோதல் ஓரளவு தணிந்திருந்தாலும், மாணிக்கம் தாகூர் தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், கூட்டணி உடைய வாய்ப்பில்லை என்றும், திமுக ஒரு நீண்டகால நட்பு சக்தி என்றும் கூறி முற்றுப்புள்ளி வைக்கவும் முயன்று வருகிறார். ஆனால், இடப்பகிர்வு பேச்சுவார்த்தையின் போது இந்த "அதிகாரப் பகிர்வு" கோரிக்கை மீண்டும் ஒரு பெரிய புயலைக் கிளப்பும் என்பதில் ஐயமில்லை.
இந்த நிலையில் இன்று காலை ஒரு டிவீட் போட்டுள்ளார் மாணிக்கம் தாகூர். அதில், இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன்.எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..
மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறியுள்ள அவர் கூடவே ஆட்சியில் பங்கு என்ற ஹேஷ்டேகையும் இணைத்துள்ளார்
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த தலைவர்: எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து!
கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே .. உலகில் ஒற்றுமை தழைக்கவே!!!
காணும் பொங்கல் மட்டுமல்ல.. இவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய தினம் இன்று!
பொங்கல் சீர் வரிசை!
காக்காப்பிடி கணுப்பிடி.. உடன் பிறந்தாரின் நன்மைக்காக இருக்கும் நோன்பு!
தலைவர் 173 ஷூட்டிங்...சூப்பர் ஸ்டார் ரஜினியே பகிர்ந்த மாஸ் அப்டேட்
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
காணும் பொங்கல் .. அப்படீன்னா என்ன.. ஏன் இதைக் கொண்டாடுகிறோம்?
{{comments.comment}}