யாருக்கும் பயன்படாத 16 மருத்துவ  காலியிடங்கள்..  அன்புமணி ராமதாஸ் வேதனை!

Oct 13, 2023,03:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட 16 எம்.பி.பி.எஸ் இடங்கள்  நான்கு கட்ட கலாந்தாய்வுக்குப் பிறகும் நிரப்பப்படாத நிலையில்,  அவை யாருக்கும் பயன்படாமல் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. இதற்குக் காரணம் தேசிய மருத்துவ ஆணையம் கடைபிடித்து வரும் தவறான மாணவர் சேர்க்கைக் கொள்கை தான்  என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்ட 16 எம்.பி.பி.எஸ் இடங்கள்  நான்கு கட்ட கலாந்தாய்வுக்குப் பிறகும் நிரப்பப்படாத நிலையில்,  அவை யாருக்கும் பயன்படாமல் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 3 இடங்கள்,  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 17 இடங்கள் ஆகியவையும் நிரப்பப்படாமல் வீணாகியுள்ளன. இதற்குக் காரணம் தேசிய மருத்துவ ஆணையம் கடைபிடித்து வரும் தவறான மாணவர் சேர்க்கைக் கொள்கை தான்.


2020-21ஆம் ஆண்டு வரை அகில இந்திய  தொகுப்புக்கு வழங்கப்பட்ட  இடங்களை நிரப்ப மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு இரு கட்ட கலந்தாய்வுகளை மட்டுமே நடத்தும். அந்தக் கலந்தாய்வுகளில்  நிரப்பப்பட்டவை தவிர மீதமுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மீண்டும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த இடங்களுக்கு மாநில அளவில் கடுமையான போட்டி இருக்கும் என்பதால்,  அவற்றை தமிழக அரசின் மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு மிகவும் எளிதாக நிரப்பி விடும்.


ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வுகளுக்கு பதிலாக கூடுதலாக இரு கலந்தாய்வுகளைச் சேர்த்து மொத்தம் 4 கட்ட கலந்தாய்வுகளை  மத்திய அரசு நடத்துகிறது.  நான்காவது கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தாலும் கூட அவை யாருக்கும் பயன்படாது; அவை காலியாகவே இருக்கும். இது தான் இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலுக்கு  காரணம் ஆகும்.


மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 2 இடங்கள், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 2 இடங்கள் உள்ளிட்ட நிரப்பப்படாத  16 இடங்களும் மாநில ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டால், அதில் சேருவதற்கு  ஏராளமான தகுதியுடைய மாணவர்கள் தயாராக உள்ளனர்.  ஆனால், அந்த இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்க மத்திய அரசு மறுப்பதும்,  மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதும் தான்  சிக்கலுக்கு காரணம் ஆகும்.


தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 16 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழகத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களைப் போலவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி  இந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். 1980-களின் தொடக்கத்தில்  பல மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தான் அகில இந்திய ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தேவை இல்லை. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்