- நவீன் ஸ்ரீதர்.வி
கடந்த வாரத் தொடரில் பாண்டிய பேரரசியான தடாதகை, உலகின் 56 தேசங்களையும் வென்று மிகப்பெரிய பாண்டிய பேரரசை நிறுவி கயல்கொடி பதித்து, உலகின் தலைநகராய் மதுரையை மாற்றிய நிகழ்வைப்பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அவள் தேவர்களை எதிர்த்து படை எடுத்ததைப் பற்றி இத்தொடரில் சிந்திப்போம்.
உலகம் முழுவதையும் தன் காலடிக்கீழ் கொண்டு வந்தாலும் தேவலோகத்தையும் தன்வசம் கொண்டு வர திட்டமிட்டாள் தடாதகை.இது ஒரு புறமிருக்க தன் மகள் தடாதகை பார் முழுவதுக்கும் அரசியாய் திகழ்ந்தாலும் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே..அவளோ போர் புரிவதிலேயே முனைப்பாக இருக்கிறாளே என்று அன்னை காஞ்சனமாலை வருந்துகிறார். மற்ற தேசத்து மன்னர்களையும் தனக்கு அடிபணிய வைத்துவிட்டாள், எனில் அவளது மனதை கொள்ளை கொள்ளும் மணாளன் தான் யாரோ என்பது அவரது கவலை.ஆனால் யாருக்கும் கிடைக்காத மாபெரும் பேரு தனக்கு எதிர்காலத்தில் கிடைக்கவிருப்பதை காஞ்சனமாலை அப்போது அறிந்திருக்கவில்லை...
அதுவரை மண்ணுலகும் வானுலகும் காணாப் புதுமையான ஒரு போருக்கான தொடக்கம் அப்போது ஆரம்பித்திருந்தது. ஆம்! மண்ணுலகின் பாண்டிய தேசம் விண்ணுலகின் தேவர்களை எதிர்த்து போர் தொடுக்க ஆயத்தமானது. இங்கே ஒரு சந்தேகம் பலருக்கும் வரலாம். பூமியில் உள்ள மனிதர்கள் எப்படி வானில் உள்ள தேவர்களை எதிர்கொள்வது?வானில் எப்படி இங்குள்ள மனிதர்களால் பறக்க முடியும்? அங்கே தான் பலரும் அறியாத சூட்சுமம் ஒன்று உள்ளது. அது தான் "அஷ்டமா சித்திகள்"..அஷ்ட என்றால் எட்டு;எட்டு விதமான உயரிய அரிய சித்திகளே அஷ்டமா சித்திகள் ஆகும்..இந்த சித்திகளில் கைதேர்ந்தவர்களே சித்தர்கள்..ராமாயண காலம் முதலே இது பயன்பாட்டில் உள்ளது. சரி அந்த எட்டு சித்திகள் தான் என்ன?

1. அணிமா : அணுவைப் போலத் தன் உடம்பைச் சிறிதாக்கும் ஆற்றல்.
2. மகிமா : மலையைப் போலத் தன் உடம்பைப் பெரிதாக்கும் ஆற்றல்.
3. லகிமா: பஞ்சைப் போல உடலை மிகவும் எடையற்றதாக மாற்றிக் காற்றில் மிதக்கும் ஆற்றல்.
4. கரிமா: மலையைப் போல உடம்பை அசைக்க முடியாத அளவிற்கு பளுவாக மாற்றும் ஆற்றல்.
5. பிராப்த்தி: விரும்பிய இடத்திற்கு எளிதில் செல்லும் ஆற்றல்.
6. பிரகாமியம்: நினைத்த காரியங்களை உடனே நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல்.
7. ஈசத்துவம்: பஞ்ச பூதங்கள் மற்றும் இயற்கையைத் தன் கட்டுப்பாட்டில் இயக்கும் ஆற்றல்.
8. வசித்துவம்: சகல உயிர்களையும், உலகப் பொருட்களையும் தன் வசப்படுத்தும் ஆற்றல்.
இவை தான் அட்டமா சித்திகள். இந்த சித்திகளில் கை தேர்ந்தவர்கள் தான் சித்தர்கள், எனும்போது அந்த சித்தர்களில் மேன்மையான தலைவராகத் திகழும் அகத்தியரே பாண்டியர்களின் குல குருவாக உள்ளாரே! அதற்கும் மேலாக எந்த பராசக்தி இந்த சித்தகளுக்கும் அதிபதியாக உள்ளாளோ அவளே இங்கு தடாதகை என்னும் அரசியாக இருக்கிறாளே! பின்னர் வேறு என்ன வேண்டும் இவைகளை அடைய?! பராசக்தியான தடாதகையின் அருளால், வாணுலகில் போரிட உதவும் சித்திகளை பாண்டிய படைகள் கற்றுத்தேறுகின்றனர். அவர்கள் தான் எவ்வளவு பெரிய பேற்றினை பெற்றவர்கள்! ஆதிபராசக்தி தானே நேரில் தினமும் காட்சி தந்தும்,அவளின் கீழ் பணி புரிந்தும், அவள் அருளால் சித்திகள் கைவரப்பெற்றும் வாழும் காலத்திலேயே மண்ணும் விண்ணும் கண்டவர்களானார்களன்றோ!
போர் முரசு அதிர வானுலகம் நோக்கி மீன்கொடி ஏந்திப் பாண்டியப் படையுடன் விண்ணுலகம் செல்கிறாள் தடாதகை.
எட்டு தேவர்களை எட்டு திசைகளுக்கு அதிபதியாக சொல்லும் வழக்கம் உண்டு. ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு தேவர் அதிபதியாகத் திகழ்கிறார். அவர்களை "திக் பாலகர்கள்" என்று அழைப்பார்கள். "பாலகம்" என்றால் இவ்விடத்தில் "பாதுகாத்தல்" என்று பொருள். அந்த திக் பாலகர்கள்:
1.இந்திரன்: கிழக்கு திசையின் அதிபதி. தேவர்களின் தலைவர்.
2.அக்னி: தென்கிழக்கு (அக்கினி மூலை) திசையின் அதிபதி.
3.எமன்: தெற்கு திசையின் அதிபதி.
4.நிருதி: தென்மேற்கு (கன்னி மூலை) திசையின் அதிபதி.
5.வருணன்: மேற்கு திசையின் அதிபதி.
6.வாயு: வடமேற்கு (வாயு மூலை) திசையின் அதிபதி.
7.குபேரன்: வடக்கு திசையின் அதிபதி.
8.ஈசானன்: வடகிழக்கு (ஈசானிய மூலை) திசையின் அதிபதி. இவர் ஈசனின் அம்சமாகவும், ருத்திரராகவும் கருதப்படுகிறார்.
அந்த எட்டு தேவர்களை வென்றாலே வானுலகம் வசமாகும். அப்படியாக இந்த எட்டு தேர்களையும் எதிர்த்து படை எடுக்கிறாள் தடாதகை. வருவது பராசக்தியே என்பதை அறிந்து அன்னையை எதிர்க்க துணிவில்லாத தேவர்கள் அவள் பாதத்தில் சரணடைகின்றனர். இவ்வாறாக மொத்த வானுலகும் தடாதகை வசமாகிறது. தேவலோகத்திலும் பாண்டியர்களின் மீன் கொடி பறக்கிறது.
பூவுலகம் மட்டுமல்லாது வானுலகின் தேவலோகத்துக்கும் தலைநகரமானது மாமதுரை! தடாதகையின் பெரும் வீரமானது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நெடிதுயர்ந்து பரவி நின்றது. இதிலும் ஒரு பெரிய ஞானத்தை நாம் கற்கலாம், அதாவது ஆதிபராசக்தி நம் பொருட்டு கருணை கொண்டு தடாதகையாக வந்துள்ளாள், அவளுக்கு சேவை செய்து அவள்மேல் அன்பு கொண்டிருந்த பணியாளர்கள் அனைவருக்கும் மிகவும் அரிதான சித்திகளை தந்து வானுயற பறக்கச் செய்தாள்.
அனைத்து சித்திகளிலும் கைதேர்ந்த வாணுலக தேவர்களும் கூட அவளை எதிர்க்காமல் சரணடைந்தனர், அதன் விளைவாக அமராவதிக்கும் அதிபதியானாள் தடாதகை, அமராவதியின் அரியணையின் மதிப்பு மிக்க தருணங்கள் அது, அதனாலேயே அமராவதியும் மேன்மையடைந்தது. அதேபோல் தான் நாமும் நம் பொருட்டு கருணை கொண்டு இங்கு வந்துள்ள தடாதகையை அன்னை மீனாட்சியை சரணடைந்தால், நமக்கும் உயரிய சித்திகளையும், ஏன் அதைவிடச் சிறந்த முக்தியையுமே தந்தருள்வாள் அவள், வாணுலக தேவர்களும் கூட தங்கள் அகந்தையை விட்டொழித்து அன்னையின் பாதத்தில் சரணாகதி அடைய அமராவதி என்னும் தேவலோகத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து பெருமை தந்தாள்.
அதேபோல் நாமும் நமது அகங்காரங்களை எல்லாம் கைவிட்டு அன்னை தடாதகையின் பாதம் பற்றி சரணடைந்தோமேயானால், நம் இதய சிம்மாசனத்திலும் அமர்ந்து கருணை செய்வாள், இதய சிம்மாசனத்தில் தடாதகை நம்மை ஆட்சி செய்வதே நமது உண்மையான பெருமையும் பேரும் ஆகும்! அன்னையின் பாதத்தே பரிபூரணமாய் சரணடைந்து அவளை இதய சிம்மாசனத்தில் அமர்த்துவோம்!நம் உயிரிலும் உறைந்து முக்தி கொடுப்பாள் அன்னை தடாதகை!...
சரி,இந்த வெற்றி மட்டும் போதுமா? இவை அனைத்துக்கும் மேலாக பிரபஞ்சத்தின் அதிபதியாக தானே சர்வமுமாய் திகழும் சிவபெருமானையே வென்றுவிட்டால்...என்ற எண்ணம் தடாதகையிடம் எழுகிறது. தடாதகை ஈசனை எதிர்கொண்டாளா? யார் வென்றார்? அடுத்த தொடரில் சிந்திப்போம் சிறப்பாக..
மீனாக்ஷீம்!!!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
உலகமெங்கும் மக்கள் பெருகிடும் நாளிது.. உணர்வுடன் நாம் சிந்திக்கும் தருணமிது!
வியட்நாமில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
ஈசனை எதிர்கொண்ட அன்னை தடாதகை.. 9
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்
அன்பான இதயத்திற்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும்!
{{comments.comment}}