மூங்கில் போல் வளைந்திடு..!

May 22, 2026,02:54 PM IST

- முனைவர் கோ லதா


முனைவர் கோ. லதாவின் 3 முத்தான கவிதைகள்..


மே மாதம் இருபத்திரண்டு வந்தது,  

மறுமலர்சி தந்த மாமனிதன் பிறந்தான்.  

வங்கமண் பெற்ற வரமகன் ராயன்,  

ராம மோகன் எனும் ராஜாவும் ஆனான். 


சதியெனும் தீயை சாம்பல் ஆக்கி,  

பெண்ணினம் காக்க பெரிதும் போராடி.  

உடன்கட்டை ஒழித்த உத்தமன் அவனே,  

இந்தியர் நெஞ்சில் இடம்பிடித்தான்.


கல்வியின் வாசல் கன்னியர்கு திறந்தான்,  

அறியாமை இருளை அறிவால் அழித்தான்.  

பத்திரிகை வழியே பகுத்தறிவு ஊட்டி,  

மக்கள் மனதில் மாற்றம் விதைத்தான்.


பிரம்ம சமாஜம் பெரிதாய் நிறுவி,  

சாதி மத வேற்றுமை சாடி ஒழித்தான்.  

ஒரு கடவுள் என்ற ஒருமை பேசி,  

மானுடம் போற்ற மாண்புடன் வாழ்ந்தான்.


மேற்கின் கல்வியும் மெய்மையும் கலந்து,  

கிழக்கின் நெறியை கீர்தியாய் வளர்தான்.  

ஆங்கிலம் அறிந்த அறிஞர் பெருமான்,  

அந்நியர் முன்னும் அஞ்சாது பேசினான்.


இருநூறு ஆண்டு இன்றும் வாழ்கிறான்,  

எண்ணத்தில் நெஞ்சில் ஏற்றம் தருகிறான்.  

மே இருபத்திரண்டு மறவாது போற்றி,  

மகத்தான ராயனை மனதார வணங்கி.


-- 


மூங்கில் போல வளைந்திடு




மூங்கில்போல் வளைந்து முறிவின்றி நில்லு

பூமியில் பணிந்து பொறுமையை கொள்ளு 

புயலின் வேகம் பொருட்டென  கருதாது

துயரம் வந்தாலும் துணிந்து எழுந்திடு


ஆற்றின் ஓரத்தில் அடியைப் பதித்து

நேர்மை வழியில் நெஞ்சம் வைத்திடு

வாட்டம் கண்டாலும் வாழ்க்கை தொடரும்

ஓங்கி வளர்ந்து உயரத்தை தொடுவாய்


பகையை மறந்து பண்பைப் பெருக்கு

இகலை தவிர்த்து இனிமை சேர்ப்பாய்

வறுமை வந்தாலும் வளைந்து கொடுப்பாய்

செல்வம் சேர்ந்தாலும் செருக்கு கொள்ளாதே


உழைப்பே உயர்வு உண்மையை உணர்ந்து

பிழையை நீக்கி பிறருக்கு உதவிடு

மூங்கில் போலே வளைந்து வாழ்ந்தால்

வானம் தொடுவாய் வாகை பெறுவாய்


--


மே 22 தேசிய ஒத்துழைப்பு தினம்


மே மாதம் இருபத்திரண்டு வந்தது,  

ஒத்துழைப்பு நாளென ஓங்கி ஒலிக்குது.  

தனித்து வாழ்தல் தன்மையில் ஆகாது,  

ஒன்றிணைந்து நிற்றல் உலகில் வெற்றி. 


கைகோர்து நிற்க காலம் இதுவே,  

மனமொத்து உழைக்கும் மாண்பு வேண்டுமே.  

பகையை மறந்து பாசம் வளர்தால்,  

இகலில்லா வாழ்வு இனிதாய் மலரும். 


குடும்பம் தொடங்கி குலமெல்லாம் கூடி,  

ஊரும் நாடும் உயர்ந்திட உழைப்போம்.  

சிறியோர் பெரியோர் சேர்ந்திட வேண்டும்,  

நிறைவாய் வாழ நேசம் போதும். 


வேலையில் ஒற்றுமை விளங்கிட வேண்டும்,  

மேலோங்கி நிற்கும் மேன்மை தருமே.  

பள்ளியில் கல்லூரி பாங்காய் இணைந்து,  

நல்லறம் பேணி நாளும் கற்போம். 


இயற்கையை காத்து இணக்கம் கொள்வோம்,  

பயிரை பாதுகாத்து பசுமை சேர்போம்.  

விலங்கும் மனிதனும் வாழ்ந்திட வேண்டி,  

உலக பல்லுயிர் உயர்ந்திட உதவுவோம். 


வன்மம் தவிர்து வளமை பெருக்கி,  

இன்முகம் காட்டி இனிதாய் வாழ்வோம்.  

மே இருபத்திரண்டு மேன்மை நாளில்,  

ஒத்துழைப்பு என்னும் ஒளியை ஏற்போம்.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்