காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!

Jun 12, 2025,05:57 PM IST

சென்னை: திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி வருகின்ற 14-06-2025 அன்று திருச்செந்தூரில் நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி வருகின்ற 14-06-2025 அன்று திருச்செந்தூரில் நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு,  கூட்டம் நடப்பதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? முதலிலேயே காவல்துறைக்குத் தெரியாதா குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? கூடாதா என்று? அந்த இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாதென்றால் மாற்று இடத்தை முன்பே வழங்கி இருக்கலாமே? அதனை விடுத்து போராட்டம் நடத்தவே அனுமதி மறுப்பது ஏன்? எதனால்? யாருக்குப் பயந்து, யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறை முதலில் வழங்கிய அனுமதியை தற்போது மறுக்கிறது? திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய அறமற்றச்செயல், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குத்  தரம்தாழ்ந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. வெட்கக்கேடு!




தமிழ்நாட்டில் தமிழ் முன்னோர்கள் கட்டிய தமிழர் இறையோன் முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கூட போராட வேண்டி இருப்பதும், அதற்கும்கூட தமிழர் விரோத திமுக அரசு அனுமதி மறுப்பது பெருங்கொடுமையாகும்.


இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் செய்த அளப்பரிய ஈகங்களைத் தனதாக்கி, மொழிப்போர் மூலம் கிடைத்த முகவரியில் ஆட்சி அதிகாரத்தை அடைந்த திமுக அரசு கடந்த 60  ஆண்டுகளில் தமிழ் மொழியை மெல்ல மெல்லச் சிதைத்து அழித்துவிட்டது. 6 முறை திமுக தமிழர் நிலத்தை ஆண்டபிறகும் தமிழ்நாட்டில் இன்றுவரை அன்னைத் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாகவோ, வழக்காட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அதிகார மொழியாகவோ இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த வரலாற்றுப் பெருந்துயராகும்.


‘மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ எனப் புரட்சிப்பாவலர் பாரதிதாசன் வருந்திப்பாடி, 70 ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் வீதிகளில் பெயர்ப்பலகைகூடத் தமிழில் இல்லாதிருப்பது எந்தவொரு இன மக்களுக்கும் நிகழ்ந்திடக்கூடாப் பெருங்கொடுமையாகும். அன்னைத்தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று தமிழ்நாட்டு கோயில்களில் பலகையில் எழுதி அறிவிக்கும் அளவிற்கு தான் அன்னைத்தமிழ் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என்று எழுதியதைத் தவிர, திமுக அரசு அன்னை தமிழின் வளர்ச்சிக்குச் செய்த நன்மை என்ன? தமிழ் வாழ்க என்று அரசு நிறுவனத்தில் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவனங்களைத் தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து கொடுமையும் புரிந்தது திமுக அரசு.


நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி, தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றோம். நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கினை தமிழ் வழியில் நடத்த ஆவன செய்தது.


அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கரூர் பசுபதீசுவரர் ஆலயக் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும்  தமிழ்வழியில் குடமுழுக்கு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு “தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோயில் நிர்வாகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள். அதன் பிறகு, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலின் குடமுழுக்கையும் தமிழில் நடத்த முதலில் திமுக அரசு மறுத்தபோதும், மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு வேறுவழியின்றித் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்பட்டன. அதே நிலைதான் கடந்த 10.02.2025 அன்று கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் குடமுழுக்கு நிகழ்விலும் அரங்கேறியது.


தமிழ்த்தேசிய அமைப்புகளின் அயராத முயற்சியின் விளைவாக தமிழில் குடமுழுக்கு நடத்த உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் அதனைக்கூட திமுக அரசு பின்பற்ற மறுப்பது  தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும், அதிகாரம் அளித்த தமிழ் மக்களுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.


தமிழ்நாட்டில் அன்னைத்தமிழை கோபுரம் ஏற்ற ஒவ்வொரு முறையும் தமிழ்த்தேசியர்கள் வீதியில் இறங்கி போராடி போராடித்தான் உரிமை மீட்க வேண்டுமா? தமிழ், தமிழர் எனச் சொல்லி அதிகாரத்தை அடைந்த திமுக அரசிற்கு அந்த அக்கறை இல்லையா?  உண்மையில் திமுக அரசே தமிழில் குடமுழுக்கை தாமாக முன்வந்து நடத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழ்த்தேசிய அமைப்புகள் பெற்று தந்த நீதிமன்ற உத்தரவையாவது பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு ஆட்சி அதிகாரம் கையில் உள்ள திமிரில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி தமிழர்களைப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளி இருப்பதும், அந்தப் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வசனங்கள் எல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பது மீண்டுமொருமுறை நிறுவப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தற்போது பாஜக முருகனைக் கையிலெடுத்து மதவாத அரசியல் செய்யவிருக்கும் நிலையில்,  அதனை முறியடிக்கும் வகையில் திமுக அரசே தமிழ் இறையோன் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தியிருக்க வேண்டும். ஆனால் முத்தமிழ் முருகன் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்திய திமுக அரசு, தற்போது சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தி, பாஜகவின் பீ டீமாக செயல்பட்டு, பிளவுவாத அரசியலுக்குத் துணைபோவது வெட்கக்கேடானது.


ஆகவே, உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தமிழ் இறையோன் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து தாய்த்தமிழில் நடத்த  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதனை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து நடத்தவிருக்கும் அறப்போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அனுமதியளிக்க மறுக்கும் பட்சத்தில் தமிழ் மொழிக்காகத் தடையை மீறி கூட்டத்தை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்