பட்டாவும் பாசமும் (சிறுகதை)

Oct 27, 2025,04:22 PM IST

- எம். கே. திருப்பதி


வட்டாட்சியர் அலுவலகம்,எந்த சலனமும் இல்லாமல் சுணக்கம் காட்டியது. ஒரு பியூன்,சில ஊழியர்களை தவிர உருப்படியாய் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. அதற்கான காலமும் கனிந்திருக்கவில்லை.  பொன்னுச்சாமிக்கு அது அவசியமும் இல்லை! அவருக்கு பட்டா மாறுதல் வேண்டும்.அது ஒன்றுதான் இப்போது பிரதானம்.


காலை கருக்கலுக்கு முன், முதல் பஸ் பிடித்து டவுனுக்கு வந்து விட்டார். அனுதினமும் வட்டாட்சியர் அலுவலகம் வந்து போவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. விதியின் வலியை கைகள்,அவரை வீதியில் வீசியது .  70 வயது உரம் ஏறிய கட்டை. வாலிப வயதின் முறுக்கு இப்போது, காய வைத்த கருவாடு மாதிரி வற்றி போயிருந்தது!


ஒடுங்கிய கன்னம், துருத்திய பல், ஈர்க்கு குச்சியாய் ஆகிப்போன கை கால்கள்!  இருக்கிறதா இல்லையா என்பது மாதிரியான ஒரு எய்த்துப் போன உடம்பு.  மகன் மகள் என்று எல்லோரும் கடைசி காலத்தில் கைவிட, கட்டிக் கொண்டவளும் சமீபத்தில் காலமாகி போயிருந்தாள்!


உழைத்து உழைத்து சம்பாதித்த ஒவ்வொரு நிலமும் பாசங்களுக்காக பகிர்ந்து அளிக்கப்பட, அப்பா வழிவந்த 40 சென்ட் இடம் மட்டும், மீந்து போன பழைய கஞ்சியாய் மிச்சம் இருக்கிறது!  பாசப் பிள்ளைகள் அதையும் பங்கு போடத்தான் முட்டி மோதியது. ஆனால் அங்கு சட்டம் வந்து குறுக்கிட்டது.


அந்த நிலம் UDR க்கு முன்னால் பதியப்பட்ட நிலம்! பொன்னுச்சாமி அப்பா பெயருக்கே இன்னும் பட்டம் மாறி இருக்க வில்லை.  அப்புறம் எப்படி அது பொன்னுச்சாமிக்கு பாத்தியம் ஆகும்? அதை சாத்தியமாகத்தான் அவர் சதா,அலைந்து கொண்டிருந்தார்.




புதிதாய் கட்டப்பட்டிருந்த அந்த வட்டாட்சியர் அலுவலகம்,ஒரு புது மணப்பெண் போல் வனப்பு காட்டியது.  இரண்டு அடுக்கு கட்டிடம். பார்த்த மாத்திரமே சொல்லிவிடலாம் அரசு கஜானாவை பதம் பார்த்திருக்கும் என்று! தாலுக் ஆபீஸ் தவிர அங்கு வேறு சில அலுவலகங்களும் இயங்கிக் கொண்டு இருந்தது. காம்பவுண்ட் சுவரின் நான்கு உட்புறங்களிலும், இள மரங்கள் தலை காட்டிக் கொண்டு, கொஞ்சம் போல் அநியாயத்துக்கு நிழலை காட்டியது! இப்போது கொஞ்சம் கொஞ்சம் மனிதத் தலைகள், தென்படத் தொடங்கியிருந்தது.


இப்போது நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு நேர் எதிரில் ஒரு காரிடார் தெரிகிறதல்லவா...  அதில் கொஞ்ச தூரம் நடந்தால், இடதுபுறம் திரும்பும். அதுதான் வட்டாட்சியர் அலுவலகம். பெரிய ஹால் மாதிரி இருந்தது. நாற்காலிகளும் மேஜைகளும் பேப்பர் கட்டுகளும் பரவி கிடக்கும் அந்த அறையில் தான் பொன்னுச்சாமி  புது கதவு ஓரம் கைகட்டி, ஒரு கம்பு குச்சி போல நின்றிருந்தார் 


வாயில் வெற்றிலை மாதிரி ஏதோ ஒரு சமாச்சாரத்தை குதப்பி, யோகி பாபு வடிவத்தில் வலம் வந்த பியூன் பாண்டுரங்கம் பொன்னுச்சாமியை பார்த்து சொன்னார். " பாருங்க பெரியவரே! உங்க காலத்துல தங்கம் நூறு ரூபா. இன்னைக்கு ஒரு லட்சம். இது உங்க காலமில்லங்க. ரொம்பவே மாறிப்போச்சு  "


" ஐயா! நீங்க ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்தத, பத்திரம் பண்ணி,பதிவு பண்ண காலமெல்லாம் மலையேறி போச்சு."


" இப்போ எல்லாத்துக்கும் ப்ராப்பர்  டாக்குமெண்ட் வேணும் ஐயா! உங்க அப்பா அந்த நிலத்தை 1970 க்கு முன்னால வாங்கியிருக்கிறார். அவர் பெயரிலேயே இன்னும் பட்டா மாறல... அப்புறம் எப்படி உங்க பேருக்கு மாத்தி கொடுப்பாங்க அய்யா கொஞ்சம் புரிஞ்சி பேசுங்க... "


" நீங்க ஒன்னு பண்ணுங்க. முதல்ல உங்க அப்பாவோட டெத் சர்டிபிகேட் வாங்குங்க.. அப்புறம் உங்க அப்பா யாருகிட்ட அந்த இடத்தை வாங்கினாரோ அவரோட வாரிசுங்க கிட்ட நீங்க ஒரு என்ஓசி VAO  மூலமாக வாங்குங்க... "


" அப்படி பண்ணிட்டீங்கன்னா உங்க பேருக்கு ஈசியா பட்டாவை மாத்தி போடலாம்.. "


" நான் சொல்றதை கேட்காம நீங்க அடம் புடிச்சீங்கன்னா...நீங்க இங்க எப்ப வந்தாலும், நான் இதே பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கும்.இது தவிர எங்கிட்ட வேற விடையும் இல்லை... "


 இது பொன்னுச்சாமிக்கு ஒன்னும் புதிதில்லை. தினம் தினம் கேட்டு புளித்துப் போன வார்த்தைகள். இந்த முறை அவர் வந்தது நாட்டாமை பார்த்து விட வேண்டும் என்பதற்காக. ஆம்... பாகனோடு மோதுவதை விட யானையோடு மோதிவிடலாம் என்று முடிவெடுத்து விட்டார்.  எண்ணித் துணிக கருமம் ' என்பதைப் போல எண்ணத்தில் உறுதி கொண்டார்!


" அது இல்ல தம்பி, தாசில்தார் அய்யாவை ஒருவாட்டி பார்த்துட்டு போயிடலாம்னு.. "


" அப்பு... நீங்க எங்கள சிக்கல்ல மாட்டி விட்டுவிடுவீங்க போல. பேசாம இடத்தை காலி பண்ணுங்க பெருசு... "


பியூன் பாண்டுரங்கம் பெரியவரை கடிந்து கொண்டு இருக்கும்போதே அந்த தாசில்தார், வேகமான நடையோடும் முகத்தில் டென்ஷனும் காணப்பட வந்து கொண்டிருந்தார்! அவர் யங் மேனாக இருந்தார். ஃபார்மல் சர்ட், இன்டேக் சகிதம் தோற்றத்தில் நீட்நெஸ் காட்டினார்.


 குரூப் 2 எழுதி, பிறகு ப்ரோமோஷனில் தாசில்தார் ஆனவராம். இங்கு வந்து இரண்டு மாதம் ஆகி இருந்தது. பக்கத்து மாவட்டத்துக்கு,பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  அவரைப் பார்த்ததும் பியூன் எச்சில் விழுங்கி, பார்வையில் பவ்யம் காட்டினார்.


" என்ன பாண்டுரங்கம்? "


" அது வந்து சார்.. UDR கேசு.. சொன்னா ஐயாவுக்கு புரிய மாட்டேங்குது..!"


" என்னவாம்? "


 பியூன் முழு விவரமும் சொல்ல.. 


" பத்திரம் எல்லாம் சரி பார்த்தாச்சா? "  என்றார் தாசில்தார்.


" சார்... டெப்டி  தாசில்தார் ஐயா எல்லாத்தையும் பாத்துட்டாங்க சார்.... எல்லாமே சரியாத்தான் சார் இருக்கு  "


" சரி, நீங்க சர்வேயர் சம்பத்துக்குமார், விஏஓ கணேஷ் மூர்த்தி இவங்க ரெண்டு பேர்ட்டையும்,நான் வந்துட்டேன்னு தகவல் சொல்லி, உடனே இங்க ஆபீஸ் வர சொல்லுங்க . "   


" இந்த எம்எல்ஏ தொந்தரவு தாங்கல. இன்னைக்கு அவர் இடத்து பிரச்சினையை முடிச்சு ஆகணும்.. "


" ஆகட்டும் சார்.."  என்று பியூன் விலகிக் கொள்ள...


" ஐயா நீங்கதாயா எனக்கு கடவுள் மாதிரி. என் நிலத்தை எனக்கு பட்டா போட்டு கொடுத்துடுங்க ஐயா..!"


பொன்னுச்சாமி கும்பிடு போடாத குறையாக கெஞ்சினார். அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட தாசில்தார், பியூனை கூப்பிட்டு -- 


" ஐயாவுக்கு ஒரு டீ.. அப்புறம் அரை லிட்டர் ஜூஸ் பாட்டில் ஒன்னு வாங்கிட்டு வாங்க... " என்று பணித்தார்.


 தாசில்தாரின் மேஜை மேல் இருந்த பெயர்பலகை,அவரை சத்தியசீலன் என்றது.


ஒரு உமன் ஹெட் கிளர்க், உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் வைத்தாள். அவர் அதை சட்டை செய்யாமல் பொன்னுச்சாமி பக்கம் திரும்பி கேட்டார்...


" உங்களை இப்போ எல்லோரும் அம்போன்னு விட்டுட்டு போயிட்டாங்க... இப்போ இருக்கிற அந்த இடத்தை வித்து, உங்க கடைசி காலத்தை தள்ள பாக்குறீங்க அப்படித்தானே ஐயா...? "


" ஆமாங்கய்யா ஆமாங்கய்யா.. " என்றார் பொன்னுச்சாமி அப்பாவியாக!


" பாருங்க பெரியவரே, என்ன ஐயான்னு கூப்பிட வேண்டாம். சும்மா தம்பின்னு கூப்பிடுங்க போதும். அங்க ஒரு சென்ட் என்ன விலை போகுது? "


" 3000 போகுது சாமி.. "


" ம்ம்ம்... ஒரு ஒன்னு 20 தேறும்.இது உங்க கடைசி காலம் வச்சு போதுமா பெரியவரே? முதியோர் பென்ஷன் எல்லாம் வந்துட்டு இருக்குதா? "


" பென்ஷன் வருது சாமி. ஏதோ ஒப்புக்கு சப்பு பொலப்புசாமி... "


" கட்டையில போற வரைக்கும் சோறு தண்ணி வேணும் இல்லையா...அதான் சாமி வித்துப்புட்டு வயித்த கழுவலாம்னு இருக்கேன்... காசு முடியும் போது கதையையும் முடிச்சுக்கலாம்னு யோசனை சாமி..!"


" கிரையம் பண்ண போனா, பட்டா பிரச்சினையை கிளப்புறாங்க சாமி... வயிறு நிறைய கஞ்சி குடிச்சு வாரம் ஆகிப்போச்சு..."


"ஒழைச்சு பிழைக்கலாம்னா ஒடம்பு ஒத்துழைக்கல சாமி ..!"


 பொன்னுச்சாமி பொல பொலவென்று கண்ணீர் வடித்தார்! யங்மேன் அவரை ஏற இறங்க பார்த்தார். உடம்பில் சதை இல்லை என்றாலும் சத்தியம், உண்மை உள்ளதை உணர்ந்தார். அதற்குள் பியூன் வந்து டீ கொடுக்க,அதை இரண்டே உறிஞ்சில் காலி பண்ணிய பொன்னுச்சாமியை நோக்கி, தாசில்தார் சத்தியசீலன் பேசினார்.


" பெரியவரே நீங்க இப்ப ஊருக்கு கிளம்புங்க. உங்க பிரச்சினையை நான் பாத்துக்குறேன். கவலைப்பட வேண்டாம். இந்த நூறு ரூபாய செலவுக்கு வச்சுக்கோங்க..!"


" சாமி நீங்க நல்லா இருக்கணும்...!


 சொல்லிவிட்டு பொன்னுச்சாமி பொடி நடையை பொடி பொடியாய் போட்டார்.


" பாண்டுரங்கம் பெரியவர்  ஒரு ஊர் எது? "


" காக்கா பட்டிங்க சார் "


" விஏஒ யாரு?"


" கார்த்திக் குமார் சார்.. "


" ஓகே.. இந்தப் பெரியவர்ட ஒரு பட்டா மாறுதல் அப்ளிகேஷன் சைன் பண்ணி வாங்கி,  எனக்கு அனுப்ப சொல்லுங்க. நான் பாத்துக்குறேன்...!"


" செஞ்சிடுறேன் சார்... "


 பியூன் விடை பெற, தாசில்தார் வாங்கி வந்த ஜூஸ் பாட்டிலை திறந்து,இரண்டு மடக்கு குடித்து விட்டு யோசனையில் விழுந்தார்!


எப்போதோ யார் யாரோ,எறிந்த அம்புகள் இப்போதும் அவரை சரம் சரமாய் வந்து தாக்கியது!  மூத்தவனும் நடுவனும் பெற்றவனை முறித்து கொண்டு போன பிற்பாடு..  கடைசி மகன் மட்டும் தந்தைக்கு, தாயாக துணையாக நண்பனாக நின்றான்!


சொல்லிக் கொள்ளும் படியாக எந்த விஷயமும் தெரியாத வயசு. படிப்பும் பாசமும் மட்டுமே பிடிமானம் என்ற வாழ்க்கையின் அளவீடு! அண்ணன்கள் இருவரும் அப்பனை புறத்தள்ளியது மட்டுமின்றி, பூமியையும் அள்ளிக் கொண்டு போயிருந்தனர்!


வீட்டையும் காட்டையும் இழந்த தந்தை, கடைசியில் தஞ்சம் அடைந்தது,ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த 10 சென்ட் நிலத்தில்,ஒரு ஓலைக் குடிசையில்!  அப்பா அவனிடம் ஆசைப்பட்டு கேட்டது ஒன்றே ஒன்றுதான்!


' என்னை, என்னோட இந்த மண்ணுலயே பொதச்சுடுப்பா... எனக்கு வேற எதுவும் வேணாம்..!'


காட்டில் நளனின் ஒற்றை ஆடையையும் உருவிக் கொண்டானாம் சனி பகவான்...!  அண்ணன்களின் அதிகாரத்துக்கு முன் இந்த 20 வயது இளைஞனால் எழுந்து நிற்க முடியவில்லை! ஆடி காற்றில் அகப்பட்ட சருகாகிப் போனான்! பத்தோடு பதினொன்றாய் சுடுகாட்டில் சூறையாடப்பட்டார் அப்பா! ஊரை விட்டு ஓடி, படித்துக்கொண்டே பணி செய்து, குரூப் 2 எழுதி, தாசில்தார் ஆகி.... சத்தியசீலன் சம்மட்டி அடி வாங்கிய மாதிரி உறைந்து போயிருந்தார்!


என் வாழ்க்கை என்ன சினிமாவா? பொன்னுச்சாமி என்ன அந்த சினிமாவின் இரண்டாம் பாகமா?  பெற்ற தந்தையின் நிறைவேற விருப்பத்துக்கு விலை கொடுக்க முடியுமா? முடியும் என்று நம்பினார்!


பெற்றால் தான் தந்தையா? மற்றவருக்கு அந்த தகுதி இல்லையா?


பொன்னுச்சாமியை அவர் தந்தையாக ஏற்றார்! பொன்னுச்சாமி வடிவில் அப்பாவின் ஆத்மா அமைதி அடையட்டும்...!


அடுத்த நொடியே பியூனை கூப்பிட்டார் தாசில்தார் சத்தியசீலன்....!


" பாண்டுரங்கம்... டவுனுக்குள்ள அந்த பெரியவர் தங்குவதற்கு ஒரு வீடும், அவர கவனிக்கிறதுக்கு ஒரு ஆயா அம்மாவும் ரெடி பண்ணிடுங்க. பட்டா வேலைய நான் பாத்துக்குறேன்...!"


" அப்புறம்,அவர் இறந்ததுக்கு அப்புறம்அவர, அவரோட இடத்திலேயே பொதச்சிடலாம்...!"


தாசில்தார் சொல்லச் சொல்ல, பியூன் பாண்டுரங்கம் ஒன்றும் புரியாமல் திரு திருவென விழித்தார்!


சம்மட்டி அடி வாங்கிய தாசில்தார் மனம்-- இப்போது, இலவம் பஞ்சாய் காற்றில் பறந்தது..!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்