-புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
காந்தி கண்ட கனவு இந்தியா
"தேசத் தந்தை" மகாத்மா காந்தி அவர்கள், ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தருவதை மட்டுமே தன் இலக்காகக் கொள்ளவில்லை. விடுதலைக்குப் பிறகு இந்தியா எத்தகைய பண்பாட்டுச் சிறப்போடும், நன்னெறிகளோடும் இயங்க வேண்டும் என்ற ஒரு பேரொளி மிக்க கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட அந்தப் பொற்கால இந்தியாவை உருவாக்க, நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய முதன்மையானக் கடமைகளையும் வழிகாட்டுதல்களையும் இக்கட்டுரை விளக்குகிறது.
ஒரு நாட்டின் வலிமை என்பது அங்கு வாழும் மக்களின் தனிமனித ஒழுக்கத்திலேயே அடங்கியுள்ளது.
மக்கள் அனைவரும் எந்நிலையிலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும்; சொல்லிலும் செயலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். வன்முறையைத் தவிர்த்து, அகிம்சையையே தன் வாழ்வியல் நெறியாகப் பின்பற்ற வேண்டும். வாழ்வின் எத்தகைய சூழலிலும் நம்பிக்கையுடனும் துணிவுடனும் செயல்பட வேண்டும். அதே வேளையில், அனைவரிடமும் பணிவுடனும் பண்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும்.
சோம்பலை முற்றிலும் தவிர்த்து, சுறுசுறுப்புடனும் மன அமைதியுடனும் தன் கடமைகளை ஆற்ற வேண்டும். சமூகத்தில் அமைதியும் வளர்ச்சியும் நிலவ மனிதர்களிடையே வேற்றுமைகள் மறைய வேண்டும். அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, சமய நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து "நாம் அனைவரும் இந்தியர்" என்ற வலுவான ஒருமைப்பாட்டு உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.

சிறு குடும்பங்களே சமுதாயத்தின் வலிமையான ஆணிவேர் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியாக இந்தியா தன்னிறைவு பெற மகாத்மா காந்தி சுதேசி இயக்கத்தை வலியுறுத்தினார். வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்திராமல், நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.
ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்தைக் குறைத்து, தேவைக்கேற்ற எளிய வாழ்வியலை மேற்காள்ள வேண்டும். ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் ஆயிரம் முறை யோசித்து தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும்; முடிவெடுத்த பின் அதனைத் தயக்கமின்றிச் செயல்படுத்த வேண்டும். ஒரு நல்லரசு அமைய சமுதாயத்தில் இருந்து ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.
எந்தச் சூழலிலும் கையூட்டு (லஞ்சம்) பெறுவதைத் தவிர்க்க வேண்டும். லஞ்சம் கொடுப்பதும் தவறு, லஞ்சம் பெறுவதும் தவறு என்ற மனசாட்சியும் குற்ற உணர்ச்சியும் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழ வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பே நாட்டின் எதிர்காலத்திற்கான அடித்தளமாகும்.
ஒவ்வொருவரும் தன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டால், நம் நாடே தானாகச் சுத்தமாக மாறிவிடும்" என்ற காந்தியச் சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கையோடு எளிதில் மட்கும் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் மற்றும் நம் சுற்றுப்புறச் சூழல் முழுவதையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணி, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது நம் தலையாயக் கடமையாகும். காந்தியடிகள் கனவு கண்ட இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு சார்ந்தது அல்ல; அது மனிதர்களின் பண்பாடு, தூய்மை, நேர்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட ஒரு புனிதமான தேசம். மேற்சொன்ன நன்னெறிகளை நாம் ஒவ்வொருவரும் நமது அன்றாட வாழ்வில் பின்பற்றுவதே, தேசத் தந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும், அவர் கண்ட கனவு இந்தியாவை நனவாக்கும் வழியாகவும் அமையும்.
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)
Short Story: விடுமுறை ஏக்கம்!
பேருந்துப் பயணத்தில்.. எறும்புக் கூட்டம் போல் விரைந்தோடிய மக்கள்!
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
காந்தி ஜெயந்தித் திருவிழா!
மீண்டும் பிறந்து வா மகாத்மாவே!
சுதேசி மற்றும் சுயசார்பு.. முதன்மையான காந்திய சிந்தனைகளில் ஒன்று!
குழந்தைப் பாடல்.. காந்தி தாத்தா!
குட்டிக்கதை.. அழகான பேபி!
Perunthalaivar Kamaraj: இந்தியாவின் கர்ம வீரர்.. பெருந்தலைவருக்கு நவரத்ன அஞ்சலி!
{{comments.comment}}