காடு வா வா வீடு போ போ!

Oct 12, 2026,02:50 PM IST

ராஜஸ்ரீ


(ஒரு முக்கியமான சமாச்சாரம்.. இது மொபைல் போன் வராத காலத்து கதை)


ரவி, ராமு இருவரும் நெருங்கிய பள்ளித் தோழர்கள்.


பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேல் படிப்பிற்காக வேறு வேறு கல்லூரிகளுக்கு சென்று விட்டனர். அதனால் அவர்களிடையே சற்று இடைவெளி ஏற்பட்டது.


பிறகு வேலை நிமித்தம் காரணமாக வேறு வேறு  ஊர்களுக்கு இருவரும் சென்று விட்டதால் அவர்களிடையே தொடர்பு முற்றிலும் போய் விட்டது.


இருவருக்கும் ஒரே சமயத்தில் அவர்கள் படித்த ஊருக்கு வரும் ஒரு  வாய்ப்பு எதேச்சையாக அமைந்தது.


இருவரும் சந்தித்து பழங்கால நினைவுகளை பரிமாறிக் கொண்டார்கள். பிறகு ரவி ராமுவிடம் உன் வாழ்க்கை எப்படி போகிறது? என்று கேட்டான்.


அதற்கு ராமு காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது என்றான்.




அதைக்கேட்ட ரவி என்னடா இப்படி விரக்தியாக பேசுகிறாய்? படிக்கும் காலத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாய். இப்ப என்ன ஆச்சு? குடும்பத்துல ஏதாவது பிரச்சினையா? மனம் விட்டு பேசுடா. ஏதாவது வழி சொல்றேன் என்றான்.


உடனே ராமு சிரித்தவாறு டேய் ரவி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லைடா. விவரமா சொல்றேன் கேளு என்றான்.


ரவியும்  சீக்கிரம்  சொல்டா,  சஸ்பென்சா இருக்கு என்றான்.


ராமு நான் காட்டிலாகாவில் பணி புரிகிறேன். இப்ப ஒரு மாசம் லீவில் வந்திருக்கிறேன். ஆனால் ஏதோ அவசர வேலை வந்து விட்டதால உடனே வரச் சொல்லி தகவல் அனுப்பியிருக்காங்க. அதான் காடு வா வா என்கிறது என்றேன். இப்ப புரிஞ்சுதா? என்று கேட்டான்.


ரவியும் ஓ..இவ்வளவுதானா. சரி, வீடு போ போ என்றாயே. அதுக்கு என்ன சொல்லப்போறே? என்று கேட்டான்.


அதற்கு ராமு என் வீட்டில் என் மனைவி ஆபீசில் கூப்பிட்ட உடனேயே போயிடுங்க. இல்லாட்டி வேலை போய்விடும் என்று என்னை உடனே போகச் சொல்கிறாள். அதைத்தான் வீடு போ போ என்கிறது என்றேன்.


அதைக் கேட்ட ரவி சிரித்தவாறு  இந்த பழமொழிக்கு இப்படியும் ஒரு விளக்கம் இருப்பது வியப்பாக இருக்கிறதே என்றான்.


(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்