- சுதா திருநாராயணன்
ஹாலோவீன் என்பது வருடா வருடம் அக்டோபர் 31 அன்று அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விப்பதாகக் கருதி அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படும் விழாவாகும். அந்த வகையில் இன்று அமெரிக்காவில் ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுகிறது.
அடிப்படையாக கிருத்துவர்களின் புனித நாளான அனைத்து துறவியர் தினமாக இருந்தாலும் இன்று இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.. அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மாக்கள் இந்த நாளில் பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது.
இதற்கான கொண்டாட்டங்கள் ஒரு மாதம் முன்னரே துவங்கி விடுகின்றன. அக்டோபர் 31 அன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பேய்கள், ஆவிகள், எலும்புக்கூடுகள் மற்றும் பல்வேறு திகில் கதாப்பாத்திரங்களின் மாறுவேடங்களை அணிந்துகொண்டு மக்களை போலியாக பயமுறுத்துவார்கள்.
டிரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat) - அக்டோபர் 31ஆம் தேதி அன்று சிறுவர்களும் சிறுமிகளும் இரவில் எல்லோர் வீட்டிற்கும் சென்று, "ப்ளே அ ட்ரிக்" என்று கேட்டும் சொல்லியும் மிட்டாய்களையும் சாக்லேட்டுகளையும் கேட்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நிறைய சாக்லெட்டுகளையும் மிட்டாய்களையும் அள்ளி அள்ளி வரும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

பரங்கி விளக்குகள் (Jack-o'-lantern)- பரங்கிக்காய்களில் துளையிட்டு, உள்ளே மின்சார தீபம் ஏற்றி வித்தியாசமான முக அமைப்புகளை உருவாக்கி வீடுகளுக்கு முன் வைத்திருப்பார்கள்.
ஆரஞ்சு மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் இந்த கொண்டாட்ட விழாவிற்கு முக்கியமாகக் கருதப்படுகின்றன. அப்படி ஒரு புதிர் கொண்டாட்டத்திற்கு நானும் என் மகளும் சென்றோம். மிகப்பெரிய தேகப் பயிற்சி கூடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் 28 $ டிக்கெட். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2646 .
நாங்கள் உள்ளே நுழையும் போதே பயங்கர மேக்கப் மற்றும் ஆடையுடன் ஒருவர் எங்களை வழிமறித்து பயமுறுத்தினார். சிரித்துக் கொண்டே நகர்ந்து சென்றோம். ஏனென்றால் அப்போது அங்கு விளக்கு வெளிச்சம் இருந்தது. அதற்குப் பிறகு தான் உண்மையான திகில் ஆரம்பித்தது.
டிக்கெட்டை காண்பித்து விட்டு உள்ளே செல்லும் பொழுது எங்கள் கையில் ஒரு டார்ச் கொடுத்தனர். எங்களை எதிர்கொள்ளும் மனிதர்கள் மீது டார்ச் வெளிச்சத்தை அடிக்கக் கூடாது, எங்கள் முகத்தின் மீதும் டார்ச் வெளிச்சம் அடித்து காண்பிக்க கூடாது என்று கண்டிப்பாக கூறினர். புகைப்படம் எடுக்கவே கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டனர். அதனால் எங்கள் மொபைலையும் வாங்கி வைத்து விட்டனர்.
பின்னர் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். கும்மிருட்டு. நான் என் மகளின் கையை இறுக பிடித்துக் கொண்டேன். தரையில் டார்ச் வெளிச்சம் அடித்து வழி காண்பித்துக் கொண்டே அவள் முன்னே சென்றாள்.
தடதட டண்டண் என்ற டிரம்ஸ் சத்தமும் வீல் வீல் என்ற கூச்சலும் காதைப் பிளந்தது. ஆனால் சுவாரஸ்யமாகவும் இருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வலதோ இடதோ பின்னாலோ எப்படியோ ஒருவர் பயங்கரமான முக ஒப்பனைகளுடன் வந்து கைகளை ஆட்டி ஹோ என்று கத்தி நம்மை பயமுறுத்துவார். தூக்கி வாரி போடும்.
திடீரென்று பார்த்தால் ஃபிளோரஸன்ட் கலரில், அதாவது இருளிலும் ஜொலிக்கும் பச்சை ஆரஞ்சு வண்ணங்களில் கன்னா பின்னாவென்று மேக்கப் செய்து கொண்டு கீழே இருந்து ஒருத்தி அல்லது ஒருவர் தவழ்ந்து வருவாள் அல்லது வருவார்.
அம்புக்குறி இடப்பட்ட பல கதவுகள். மாற்றி மாற்றி தள்ளி தள்ளி திறந்து கொண்டே போக வேண்டும். ஒவ்வொரு கதவிலிருந்தும் ஒரு உருவம் வரும், வினோதமான சிகை அலங்காரம், விசித்திரமான உடைகள். சில இடங்களில் கதவை எப்படி திறப்பது என்று கூட தெரியவில்லை.
திகைப்பூண்டை மிதித்தாற் போல் சில இடங்களில் நாங்கள் அப்படியே ஆணி அடித்தது போல் நின்றோம். உடனேயே பின்னாலிருந்து ஒரு பூதம் வந்து கூச்சலிட்டு எங்களை கிளப்பி விடும். நாங்களும் ஊஊஊ என்று ஊளை இட்டுக் கொண்டே சென்றோம். மற்ற பேய் பூதங்கள் போடும் கூச்சலில் நம் கூச்சல் அடங்கி விடுகிறது.
வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்டு தொங்க விடப்பட்ட பொம்மைப் பிணங்கள் பீதியையும் சிரிப்பையும் ஒருங்கே கிளப்பி விட்டன. திடீரென்று கட்டிலில் இருந்து ஒரு பிணம் எழுந்து உட்கார்ந்து கெக்கே பிக்கே என்று கும்மாளம் இட்டு சிரித்தது. இவை எல்லாம் கால் இருட்டிலும் அரை இருட்டிலும் நடக்கும் நிகழ்ச்சிகள். எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாற்காலியில் அமர்ந்த பிசாசு, சுவற்றில் ஆணியிலிருந்து தொங்கும் பேய், திடீரென்று ஒரு டிரம்மினுள் இருந்து எழுந்து வரும் கொள்ளிவாய் பிசாசு தபக் என்று இன்னொரு ட்ரம்மில் மறைந்து விடுகின்ற மயிர் கூச்செரியும் நிகழ்வுகள் மிகவும் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருந்தன. எனக்கு அவை அச்சமூட்டுபவையாக இல்லை.
பேய் வேஷம் போட்டவர்களை நாமும் தொடக்கூடாது, அவர்களும் நம்மை தொட மாட்டார்கள். மிகவும் சுவாரஸ்யம். வீட்டிற்கு வந்து சிரித்து சிரித்து மகிழ்ந்தோம். பேச்சு பேச்சாதான் இருக்கணும் என்ற வடிவேல் காமெடி மாதிரி!
ஒரு இடத்தில் கூட அசௌகரியமாக அல்லது இடைஞ்சலாக எதுவுமே இல்லை. பார்வையாளர்களுக்கு ஏதேனும் சங்கடமோ விபத்தோ நேர்ந்துவிடுமோ என்று நினைக்கவே தேவையில்லை. பாதுகாப்பு விதிகள் மிகவும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றன. 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. சுமார் இருபதில் இருந்து 25 நிமிட நிகழ்ச்சி தான். சுவாரஸ்யமும் திரில்லும் நிறைந்த நிகழ்ச்சி. நுழைவாயிலில் இருந்த பேய் பொம்மை மற்றும் பேய் வேடம் அணிந்த ஒருவருடன் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
சும்மா சொல்லக் கூடாது.. ச்சும்மா தெறிக்க விட்டுட்டாங்க.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
Good Morning America..Happy halloween day.. ஹாலோவீன் புதிர் பிரமை!
வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!
39 வயதிலேயே சங்கீத கலாநிதி: கர்நாடக இசையின் அசைக்க முடியாத மேதை - செம்மங்குடி!
தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)
{{comments.comment}}