சுகாசினி என்ற பெண் ஆளுமை (அருமை மிகு இந்திய முகங்கள்)

Sep 27, 2025,02:19 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


தென்னிந்திய திரையுலகில் பன்முகத் திறமை கொண்டு,  சிறந்து விளங்குபவர்  நடிகை சுகாசினி மணிரத்தினம்.


சுகாசினி மணிரத்தினம் தென்னிந்திய திரை உலகில் பல்துறைகளிலும் தடம் பதித்த சிறந்த ஆளுமை மிகுந்த பெண்.  குடும்ப தலைவி, நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் ,எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகர்  மற்றும் சமூக ஆர்வலர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர் ,தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும்  சிறந்த நடிகையாக  100-க்கும்   மேற்பட்ட படங்களில்,  பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து , அத்துறையில் தனது முத்திரையை பதித்தவர். 


40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் நீடித்துள்ள இவர், தனது குடும்பத்தினையும் நன்கு வழி நடத்தி, எந்தவித தேவையற்ற விமர்சனங்களுக்கும் ஆட்படாமல்,  அத்துறையில்  இன்று வரை நீடித்து , சிறந்த நடிகைக்கான பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தவர். சுகாசினி அவர்களை ஒரு சிறந்த  வலுவான, பல்துறை ஆளுமை பொருந்திய, இந்திய முகமாக அறிமுகப்படுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். 


பிரபல நடிகர் சாருஹாசனின் மகளாக 1961 -ல்  அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்  பிறந்தவர் சுகாசினி.  மேலும் நடிகர் கமலஹாசனின் அண்ணன் மகள் ஆவார்.  மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒளிப்பதிவு துறையில் பட்டம் பெற்ற முதல் பெண் இவர்தான்.




1980 ஆம் ஆண்டு இயக்குனர் மகேந்திரனின் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்தின் மூலம் நடிகையாக  முதலில் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில விருதை வென்றார். தொடர்ந்து நல்ல குணசித்திர வேடங்களில்  மட்டும் நடித்து சினிமா துறையில், ஒரு நல்ல குணசித்திர நடிகை என்று ஒரு முத்திரையை பதித்தவர்.1980கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் , இன்றும் குணச்சித்திர வேடங்களிலும், பல  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் .


நடிப்பை தாண்டி சுகாசினி ஒரு இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார் .1995 ஆம் ஆண்டு  “இந்திரா” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .மேலும் தனது கணவர் மணிரத்தினத்துடன் இணைந்து, 1997 ஆம் ஆண்டு “மெட்ராஸ் டாக்கீஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  கணவர் மணிரத்தினம் இயக்கிய சில படங்களுக்கு வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் . 2010ஆம் ஆண்டு “நாம் அறக்கட்டளை” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி ,பின்தங்கிய நிலையில் உள்ள விதவைகள்  மற்றும் கணவரால் கைவிடப்பட்ட ஒற்றைப் பெண்களை ,தொழில் முனைவோராக மாற்றுவதற்கும், அவர்களுக்கு வாழ்வாதாரம் தேடித் தருவதற்கும் பாடுபட்டு வருகிறார் .


சுகாசினி பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:


சுகாசினி தனது கலைப்பயணத்தில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ஐந்து பிலிம் பேர் விருதுகள், ரெண்டு கேரள மாநில விருதுகள், ரெண்டு தமிழ்நாடு மாநில விருதுகள் மற்றும் ரெண்டு நந்தி விருதுகள் உட்பட ,  பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார் .


சுகாசினி தனது தனித்துவமான நடிப்பால் , குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ,பாலைவனச்சோலை, சிந்து பைரவி” போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்புத் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். குறிப்பாக 1985 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “சிந்து பைரவி” திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான “தங்கத்தாமரை” தேசிய விருதை பெற்று தந்தது . இது அவரது கலை பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல் கல்லாக அமைந்தது .


தனிப்பட்ட வாழ்க்கை 


1988 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினத்தை சுகாசினி திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு ,     மகன்உள்ளார் .திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள், அம்மா ,அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார் .தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலங்களை பேட்டி எடுத்தும், சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.


இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண், அதுவும் சினிமா துறையில் இத்தனை காலம், விமர்சனத்திற்கு ஆட்படாமல், நன்மதிப்புடன்  நீடித்து இருப்பது என்பதே மிகப்பெரிய விஷயம். தனது பெயரை தற்காத்துக் கொள்ள, அவர் எவ்வளவு போராடி இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர முடிகிறது. கணவர் மணிரத்தினம் அவர்களுடன் நல்ல புரிதலோடு, இல்லறம் நடத்தி ,ஒரு சிறந்த தமிழ் பெண்ணாக  இருந்து , சினிமா துறையில் முத்திரை பதித்து ,தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


சுகாசினி  என்ற பெண் ஆளுமை:




இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணாக, சுகாசினி  அவர்களின் பன்முக ஆளுமை மிகவும் குறிப்பிடத்தக்கது. நம்  சமூகத்தில் ஒரு பெண் எவ்வாறெல்லாம்  அலைக்கழிக்கப்படுகிறார்கள். ஆண்களால் எப்படி  ஆளுமைப் படுத்தப்படுகிறார்கள். அதுவும் குறிப்பாக சினிமா துறையில் ஒரு பெண் நல்ல பெயருடன் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், அந்த பெண்,  மற்ற துறைகளில்  சாதிக்கின்ற பெண்களை விட,   மிகப் பெரிய சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். மற்றத்துறை பெண்களை விட சினிமா துறையில் இருக்கும் பெண்களுக்கு ,அவமானங்களும் இழிச்சொற்களும், விமர்சனங்களும், ஏராளமாய்  எளிதாக வந்து சேரும். எல்லாவற்றையும் தாண்டி,  சுகாசினி என்ற பெண், தனி பெரும் ஆளுமையாய் , பன்முகத் திறமை கொண்ட ஆளுமையாய் , நற்பெயருடன் இன்று வரை நிலைத்து இருப்பதே,  அவரின்  தனி ஆளுமை குணமாக நான் கருதுகிறேன்.


உதாரணமாக கவிஞர் வைரமுத்துவின் முன்னேற்றத்திற்காக , அவரின் மனைவி பொன்மணி வைரமுத்து , தனது இலக்கிய திறமைகளை குழி தோண்டி புதைத்துக் கொண்டவர். பொன்மணி வைரமுத்து அவர்கள்  தனது திறமையை, தனது ஆளுமையினை இலக்கியத் துறையில் கூட  வெளிப்படுத்தி,  நிலை நிறுத்திக் கொள்ள முடியாத, ஆணாதிக்க குடும்ப சூழலில், சுகாசினி சவாலான சினிமா துறையில், தன்னையும் மேம்படுத்தி, தனது குடும்பத்தையும் மேம்படுத்தி, கணவர் மணிரத்தினம் அவர்களின்  உயர்வுக்கு உறுதுணையாய் இருந்து, சாதித்து காட்டியுள்ள அவரின் ஆளுமை, இந்திய முகங்களில் ஒன்றாய்,  உண்மையில் போற்றத்தக்தக்கதேயாகும். தனது மனைவியின் ஆளுமையை அடக்கி வைக்காமல், அவரை புரிந்து அவருக்கு வழிகாட்டியாக விளங்கிய அவரின் கணவர் மணிரத்தினம் அவர்களுக்கும், மனம் நெகிழ்ந்த பாராட்டுக்களையும்  உரித்தாக்குகிறேன்.


கணவன் மனைவி இருவரும்  சிறந்த ஆளுமை மிக்கவர்களாய்  இருப்பது மிகவும் அரிதான செயல் நமது சமூகத்தில்.. ஆண் தன் ஆளுமையை, திறமையை  பொதுவெளியில் உலகிற்கு  பறைசாற்ற வேண்டுமென்றால்,  அந்த வீட்டுப் பெண் தன் சுயத்தை இழக்க வேண்டும்.  பெண் ஆளுமையாய்   பொது வெளியில் சாதிக்க வேண்டும் என்றால் , அதற்கு தனது  கணவரின் ஒத்துழைப்பு இன்றி,   தனி மனுஷியாய்  போராடி மட்டுமே ,  தனது ஆளுமையை உலகறியச் செய்ய கூடிய  சூழல் உள்ளது.  இதுதான் இந்திய சமூக சூழலாய் இருந்து வருகிறது. இந்திரா காந்தி அம்மையார் கூட , தன் கணவரோடு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.   ஏன் ஜெயலலிதா அம்மையார் கூட குடும்பத்தோடு இருந்திருந்தால்,  இந்த அளவுக்கு ஆளுமையாய் இருந்திருக்க முடியாது.


காரணம் இந்திய சமூக சூழல்  இன்னும் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட  சமூகசூழ்நிலையில்  , குடும்பத்தில் இருந்து கொண்டே,  சுகாசினி மணிரத்தினம் அவர்கள் “ஆணுக்கு முழு ஆடை பெண்ணுக்கு அரைகுறை ஆடை” என விதி வகுத்த சினிமா துறையில் , இன்றளவும்  மதிக்கப்படுகின்ற, போற்றப்படுகின்ற , எந்தவித விமர்சனங்களுக்கும் ஆளாகாத, சிறந்த நடிகையாய் விளங்குவதுடன், அவரின் ஆளுமையை பல விதங்களிலும் உயர்த்திக் கொண்டுள்ளது உண்மையில்   வியக்கத்தக்கது.


பெண்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உத்வேகம் சுகாசினி:




சுகாசினி மணிரத்தினம் ஒரு தலை சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், ஒரு  திரைப்பட இயக்குனராகவும்,  தயாரிப்பாளராகவும்,  சமூக சேவகாரகவும்,  தலைசிறந்த குடும்பத் தலைவியாகவும், தனது பன்முக திறமையை  திறம்பட வெளிப்படுத்தி வருகிறார் .சினிமா மற்றும் சமூகத்திற்கான அவரது பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவரது கலைப் பயணமும்,  சமூக ஈடுபாடும்,  தனிப்பட்ட ஆளுமையும், இளம் கலைஞர்களுக்கும் ,  பெண்களுக்கும் ,சமூக ஆர்வலர்களுக்கும் ஒரு உத்வேகமாக  இருக்கும் என்பதில்  எள்ளளவும் சந்தேகமில்லை .


சினிமா துறையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள சுகாசினி மணிரத்தினம் அவர்கள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் , “சிறந்த ஆளுமை கொண்ட இந்திய முகம்” என்பதில் துளியும் சந்தேகமில்லை.   பெண்கள் எத்துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு சுகாசினி மணிரத்தினம் அவர்கள் ஒரு மேற்கோளாய் திகழ்கிறார்.


கட்டுரையாளர் இரா. கலைச்செல்வியுடன் தொடர்பு கொள்ள:  rksindira@gmail.com


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாக்குறுதி எண் 456.. கொடுத்தது யாரு.. திமுகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. விஜய் பேச்சு

news

அம்மா அம்மான்னு சொல்லிட்டு.. அதிமுகவை அதன் கோட்டையில் வைத்து கடுமையாக விமர்சித்த விஜய்!

news

கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சுகாசினி என்ற பெண் ஆளுமை (அருமை மிகு இந்திய முகங்கள்)

news

நாமக்கல், கரூர்.. இன்று விஜய் செய்யப் போகும் 2 தரமான சம்பவங்கள்.. பரபரப்பில் களம்!

news

வீழ்வேனென்று நினைத்தாயோ! (கவிதை)

news

அதிரடி சரவெடி... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றும் சவரனுக்குரூ.720 உயர்வு!

news

அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

news

இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்