திகைத்து நின்ற சுந்தர்.. (புது வசந்தம் .. 5)

Oct 28, 2025,05:08 PM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி


தன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்தில் மிதக்கும் நிலவு, நட்சத்திரத்தை தன் நட்பாக பாவித்து அவற்றோடு நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டே உறங்குவது சுகந்திக்கு மிகவும் பிடித்த விஷயம். அன்றும் அப்படித்தான். இரவில் ஏதோ பெயருக்கு சாப்பிட்டவள் மொட்டை மாடி தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்தாள்.


நினைக்க நினைக்க அவளுக்கு அழுகையாக வந்தது.


பாரேன், எல்லாருமாச் சேர்ந்து என்கிட்ட எப்படி எல்லாம் நடிச்சி என்னை ஏமாத்திப் பெண் பார்க்க ஏற்பாடு பண்ணிட்டாங்க. அந்த ஆளை நான் அப்பாவோட பிரெண்டுனு எவ்ளோ நம்பிப் பேசினேன். ஆனால் அவரு என்கிட்ட நல்ல விதமாப்பேசிட்டு இன்னிக்கு அவரோட பையனுக்கே என்னைப் பெண் கேட்டு வந்திருக்காரு. ம்ம் யாரைத்தான் நம்பறதுனு தெரியல பார்த்தியா? இல்ல நான் கேட்கிறேன். ஒரு பொண்ணு என்ன தான் படிச்சு வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிச்சாலும் கூட அவள் கல்யாணம் பண்ணியே ஆகனுமா? அவளுக்கு திருமண வாழ்க்கை பிடிக்கலேன்னாலும் அவளால தன் இஷ்டத்துக்கு தனியாக வாழக்கூடாதா? இல்லை கடைசி வரை ஒரு பொண்ணு ஒரு ஆணை டிபென்ட் பண்ணித்தான் வாழனும்கிறது கட்டாயமா? 


நான் கல்யாணமே வேண்டாம்னு பலதடவை சொல்லிட்டேன். ஆனால் இந்த ஊருல நான் யார்ட்ட பேசினாலும் இவ கேரக்டர் சரியில்லை, அப்படி இப்படினு தப்புத்தப்பா பேசினா அதுக்கு நான் எந்த விதத்தில் பொறுப்பு ஆகமுடியும்? இல்லை நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைனு நிரூபிச்சுக்காட்ட நான் என்ன சீதையா? நெருப்பில் தீக்குளித்து என்னை நிரூபிக்க? முதலில் யார்ட்ட, எதற்காக என்னை நான் நிரூபிக்கனும்? அதுக்கு என்ன அவசியம் வந்தது?  நான் நெருப்பு. அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் நெருங்க முடியாதுனு உனக்கே தெரியும் தானே? என்று தன்னை மறந்து இரவின் மடியில் தனிமையில் நட்சத்திரங்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த சுகந்தி பேச்சு சத்தம் கேட்டவள் சரி நாம அப்புறம் பேசுவோம் என்றவிட்டு நன்கு தூங்குவது போல் பாவனை செய்து படுத்திருந்தாள்.




சற்று நேரத்தில் அவள் அம்மா, பெரியம்மா, மாமா, அத்தை, தங்கை எல்லோரும் மாடிக்கு வந்து படுக்கை விரித்து அமர்ந்தார்கள்.      என்ன அக்கா , சுகந்தி இங்கே வந்து தனியா பயமில்லாமப் படுத்திருக்கா.. கேட்டது லலிதா. இந்த ஊர்ல எந்த பயமும் இல்லை லலிதா. நாங்க வெயில் காலத்தில் பெரும்பாலும் மாடித்தரையில் தண்ணீர் தெளித்து விட்டுத் தரை காய்ந்ததும் இங்க வந்து படுத்து தூங்கறது பழக்கமாகிடுச்சு. நல்லா சிலுசிலுனு காத்து வருது பாரு. ஒரு கொசு கூட வராது. படுத்ததும் நிம்மதியாத் தூங்கலாம். நாங்க யாரும் இங்க வராத நேரத்தில் கூட சுகந்தி மட்டும் தனியா இங்க தூங்குவா என்றாள் பார்வதி.


ராஜம் மட்டும் ஏதோ சிந்தனை வயப்பட்டவளாக ஏதும் பேசாது அமர்ந்திருந்தாள்.  ராஜம் என்னம்மா முடிவு பண்ணிருக்க? கேட்டார் கிருஷ்ணன். இரு அண்ணே ஒரு நிமிஷம் என்ற ராஜம் சுகந்தியின் அருகில் சென்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தாள். நிலவின் வெளிச்சத்தில் அவளைத்தட்டி எழுப்ப முயன்றாள். அவளிடம் எந்த அசைவும் இல்லை, நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்று உறுதிப்படுத்திக் கொண்ட ராஜம் இப்போ சொல்லு அண்ணே என்றபடி கிருஷ்ணன் அருகில் வந்து அமர்ந்தாள்.


ஏம்மா இப்படி பயப்படறே? 


பயப்படாம என்ன பண்ண முடியும்? இன்னிக்கு மட்டும் இவளைப் பெண் பாரக்க வந்த விஷயம் இவளுக்குத் தெரிஞ்சிருந்தா மௌனராகம் படத்தில் வரும் ரேவதி மாதிரி காணாமல் போயிட்டு எல்லோரும் போனதும் வீட்டுக்கு வந்திருப்பா. இவளைப் பெண் பார்க்க யார் வந்தாலும் இவ காணாமல் போறது வழக்கம் தானே? இன்னிக்கு நாம இவகிட்ட விஷயத்தை முன் கூட்டியே சொல்லாம இருந்தது நல்லதாப் போச்சு. இல்லைனா இன்னிக்கு வந்தவங்களும் இவளைப் பார்க்காமலேயே போயிருப்பாங்க இல்லையா அக்கா என்றாள் லலிதா.


ஆமாம் லலிதா நீ சொல்றது சரிதான் என்றாள் பார்வதி.


அக்கா எனக்கென்னவோ இன்னிக்கு வந்தவங்க நல்ல குடும்பம்னு தோணுது. பையன் வீட்ல இவ யார்கிட்டயும் முகம் கொடுத்துப்பேசல. அந்த மாப்பிளைப்பையன் சுந்தர் இவகிட்ட பேசினப்ப கூட ரொம்பத் திமிரா தான் பதில் சொன்னா. அவங்க வீட்டு ஆளுங்களும் சரி ரொம்ப நல்லவங்களாத் தெரியுராங்க. இவளைப்பத்தி நாம அவங்ககிட்ட முன்கூட்டியே பேசினத வச்சு அவங்களும் இவகிட்ட ரொம்ப டீசெண்டாவே நடந்துக்கிட்டாங்க. அவங்க வீட்ல எல்லாருக்கும் இவளைப் பிடிச்சிருக்குனு நம்மகிட்ட நேராகவே சொல்லிட்டாங்க. இதுக்கு மேல ஏன்க்கா யோசிக்கனும். இவளை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி இந்தக் கல்யாணத்தைப் பேசி முடிச்சிடலாம் அக்கா, என்றவள் கிருஷ்ணனை நோக்கி என்னங்க நான் சொல்றது சரிதானே கேட்டாள் லலிதா.


ஆமாம் ராஜம் எனக்கும் லலிதா சொல்வது தான் சரின்னு தோணுது. அந்த மூர்த்தி அதான் பையனோட அப்பா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் இருக்கார். மாப்பிளைப் பையனும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலைல இருக்கான். நல்ல பையன் மாதிரி தான் தெரியுது. மேற்கொண்டு நாம் நேர்ல போய் விசாரிப்போம். எல்லாம் சரியா இருந்தா கல்யாணத்தைப் பேசி முடிச்சிடலாம். நீ என்னம்மா சொல்றே என்றார் கிருஷ்ணன். 


எல்லாம் சரி தான் அண்ணே. அந்தப் பையனுக்கு மூத்ததா ரெண்டு அண்ணன்க கல்யாணத்துக்கு இருக்குற போது நம்ம புள்ளய அங்க கொடுத்தா அது நல்லா இருக்குமானு தான் அண்ணே யோசிக்கிறேன்.


ராஜம் நம்ம வீட்ல சுகந்திய வச்சுகிட்டு அவள் தங்கச்சி பாரதிக்கு நாம கல்யாணம் பண்ணலியா? அது மாதிரி தான் அவங்க வீட்ல அந்த ரெண்டு பசங்களுக்கு என்ன பிரச்சனையோ. நேர்ல போய் நாம் விசாரித்து தானே பெண்ணைக் கொடுக்கப் போறோம். அப்புறம் முக்கியமான விஷயம். பையன் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் உத்யோகத்தில் இருக்கான். அவனுக்கு அரசாங்கம் குவாட்டர்ஸ் வீடு எல்லாம் கொடுத்து இருப்பாங்க. நல்லபடியா இந்தக் கல்யாணம் முடிஞ்சா மாப்பிளைப் பையன் அவன் வேலை பார்க்குற இடத்துக்கு நம்ம பெண்ணைக்கூட்டிட்டுப் போய் தனக்குடித்தனம் பண்ணப்போறான். எப்படிப் பார்த்தாலும் இது நல்ல இடம்னு எனக்குத் தோணுது. சுகந்தி தான் என் வீட்டு மருமகள்னு சொல்லிட்டுப் போனாரு அந்த மூர்த்தி. தவிர வலிய வந்த சம்பந்தம் இது. நீ மச்சான் கிட்டப் பேசு. மாப்பிளை பையன் போட்டோவை அவருக்கு அனுப்பு. மச்சான் என்ன சொல்றாருனு பார்ப்போம். அதுக்குள்ள சுகந்தி கிட்ட கொஞ்சம் கொஞ்சமாப் பேசி அவளை இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும் பார்ப்போம். எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம். அதுக்கு மேல ஆண்டவன் விட்டவழி.


சரி எல்லாரும் தூங்குவோமா. காத்து சும்மா சிலுசிலுனு அடிக்குது. தூக்கம் கண்ணைக்கட்டுது என்றவாரே கிருஷ்ணன் கொட்டாவி விட உறக்கம் அவரை ஆட்கொண்டது. அடுத்த சில நிமிடத்தில் அனைவரும் உறங்கிப்போயினர்.


ஆனால் சுகந்தி உறக்கம் தொலைத்தாள். பாரேன் எனக்குக் கல்யாணம் பண்ணி விரட்டி அடிக்கிறதிலேயே குறியாக இருக்காங்க. இவங்ககிட்ட நான் என்ன பேசித் தப்பிக்க முடியும் நீயே சொல்லேன் என்று தனக்குத்தானே பேசியவள் நீண்ட நேரத்திற்குப் பிறகு உறங்கிப் போனாள்.


மறுநாள் சிதம்பரத்தில் தன் வீட்டில் மூர்த்தியிடம் இறைந்து கத்தினான் சுந்தர்.


முடியவே முடியாது அப்பா. எனக்கு அந்தப் பெண்ணை சுத்தமாப் பிடிக்கல. தயவுசெய்து என்னை வற்பறுத்தாதீங்க. உங்களால முடிஞ்சா அம்மாவோட க்ளோஸ் ரிலேஷன் பேபி அக்கா பொண்ணு வித்யாவை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைனா இந்தப் பேச்சை இத்தோடு விடுங்க கண்டிப்பாகப் பேசினான் சுந்தர்.


அந்தப் பொண்ணு சுகந்திய உனக்குப் பிடிக்காமல் போக என்ன காரணம் சொல்லு கேட்டார் மூர்த்தி நிதானமாக.


அப்பா பிடிக்கலேனு சொன்னா விடுங்களேன்.


அதெல்லாம் விடமுடியாது. ஏன் பிடிக்கல காரணம் சொல்லு.


அப்பா எனக்கு வித்யாவைத்தான் பிடிச்சிருக்கு அதான்.


பிச்சுருவேன் ராஸ்கல். நானும் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். வித்யா தான் வேணும்கிற. அந்த நன்றி கெட்ட குடும்பத்தைப்பத்திய பேச்சை எடுத்தே உன்னைப் பிள்ளைனு பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன் சீறிய மூர்த்தி தன்னை சற்று அமைதிப்படுத்திக் கொண்டு சொல்லுடா நேற்று பார்த்த பொண்ணு கிட்ட என்ன குறையக்கண்ட நீ . ம்ம்ம் சொல்லு. நீ என்ன கெஞ்சினாலும் நான் மனசு மாறமாட்டேன். காரணத்தைச் சொல்லுடா மீண்டும் கத்தினார் மூர்த்தி.


அப்பா அந்தப்பொண்ணு என்னைவிட அதிகம் படிச்சிருக்கு. பார்க்கும் போதே ரொம்பத் திமிரான பொண்ணாத் தெரியுது. அந்த ஊர் வேற தூரமா இருக்கு. அப்பா எனக்கு அந்தப் பொண்ணு வேண்டாம்ப்பா ப்ளீஸ் பா கெஞ்சினான் சுந்தர்.


ஏண்டா அந்தப் பெண் சுகந்தியப்பத்தி உனக்கென்னடா தெரியும்? முதல் முதலில் அந்தப் பொண்ணைப் பார்த்தது போலவே தெரியல எனக்கு. பல வருஷமா பார்த்துப் பழகியது போல் அப்பா அப்பானு அவ்வளவு அன்பாப் பழகுற பாசமான பொண்ணுடா. அதுமட்டும் இல்ல. அழகு, படிப்பு, வசதி, திறமைனு சொல்லிட்டே போகலாம். அந்தப் பெண்ணை வேண்டாம்னு சொன்னா உன்னை விடப் பைத்தியக்காரன் வேற யாருமில்லை தெரிஞ்சிக்க. ஏண்டா அந்தப் பொண்ணுகிட்ட நான் அவ அப்பாவோட க்ளோஸ் பிரெண்டுனு என்னை அறிமுகப்படுத்திட்டு மறுநாள் அவளுக்கே தெரியாமல் பெண் பார்க்கப்போனா யாருக்குமே கோபம் வரத்தான் செய்யும். அந்தப் பெண் கோபத்திலும் நியாயம் இருக்கு. அதைப் புரிஞ்சிக்காம அந்தப் பொண்ணைப் பிடிக்கலேனு சொல்ற நீ சுத்த முட்டாள்டா. ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ. அந்தப் பொண்ணு மட்டும் உன்னை வேண்டாம்னு சொல்லுச்சுனு வை. எவனும் உனக்குப் பொண்ணு தர மாட்டான். நல்லா ஞாபகம் வச்சிக்க மகனே. சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை இருந்தா மட்டும் போதாது. உன் தலையைக் கண்ணாடியில் நல்லாப்பாரு. உங்க ஆத்தா பேச்சை நம்பி அந்த வீணாப்போன குடும்பத்தில வித்யாவை உனக்குப் பேசிமுடிப்பேன்னு கனவுகூடக் காணாதே.


சுகந்திக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு சீக்கிரம் சொல்லனும்னு கடவுளை வேண்டிக்க. இந்த வீட்டுல உனக்கு மனைவியா எனக்கு மூத்த மருமகள்னு ஒருத்தி வந்தா அது சுகந்தியாத் தான் இருக்கனும். என்னடா அப்பா இப்படிக் கறாராப் பேசுறாரேனு பார்க்குறியா. உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்ங்கறது மட்டும் தான் என் ஆசை. அப்புறம் உன் இஷ்டம் என்று மூச்சு விடாமல் பேசிவிட்டுக் கடந்து சென்ற தந்தையைப் பார்த்து செய்வதறியாது திகைத்து நின்றான் சுந்தர்!! 


(தொடரும்)


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்