தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

Sep 27, 2026,11:13 AM IST

- சு.தா.அறிவழகன்


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் நாள் உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது. "சுற்றுலா" என்பது வெறும் பொழுதுபோக்கோ அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும் பயணமோ மட்டுமல்ல; அது மனித மனங்களை விரிவுபடுத்தும் ஒரு பேரனுபவம். எல்லைகளைத் தாண்டி, கலாச்சாரங்களை இணைத்து, பொருளாதாரத்திற்கு வலிமை சேர்க்கும் ஆற்றல் சுற்றுலாவுக்கு மட்டுமே உண்டு.


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சுற்றுலாத்துறை முக்கியத் தூணாகத் திகழ்கிறது. விருந்தோம்பல், போக்குவரத்து, உணவு, உள்ளூர் கைவினைப் பொருட்கள் எனப் பலதரப்பட்ட துறைகளுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதாரத்தையும் சுற்றுலா நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்குகிறது. வளர்ந்து வரும் நாடுகளில், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதன்மைத் துறையாக இது விளங்குகிறது.


ஆனால் அதையெல்லாம் தாண்டி, சுற்றுலா மனிதனுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமானது. அன்றாடப் பணிச்சுமையிலிருந்தும் இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்தும் மனிதனுக்கு விடுதலை அளித்து மன அமைதியைத் தருகிறது சுற்றுலா.


ஒரே மாதிரியான சூழலை விட்டு வெளியே வந்து பிற சூழல்களைக் காணும்போது, வேறுபட்ட கலாச்சாரங்கள், மொழி, உணவுமுறை, வாழ்க்கை முறைகளை நேரில் காணும்போது, மனிதனிடம் இருந்த குறுகிய எண்ணங்கள் மறைந்து, சகிப்புத்தன்மையும் உலகளாவிய புரிதலும் வளர்கிறது. நாலு விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். உலகை அறிய முடியும்.


புதிய மனிதர்களைச் சந்திப்பதும், புதிய சூழல்களைக் கையாள்வதும் ஒருவரது ஆளுமையையும் தன்னம்பிக்கையையும் உயர்த்துகிறது. 


சுற்றுலாவை நாம் வெறும் நுகர்வோராக அணுகக் கூடாது; பொறுப்புணர்வுள்ள பயணிகளாக அணுக வேண்டும்.




செல்லும் இடங்களின் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தாமலும், நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை எறியாமலும் தூய்மையைப் பேண வேண்டும். உள்ளூர் மக்களிடம் பொருட்கள் வாங்குவதும், அங்குள்ள உணவுகளை உண்பதும் அந்த ஊரின் வாழ்வாதாரத்திற்கு உதவும்.


நாம் செல்லும் இடங்களின் உள்ளூர் பண்பாடு, வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மை மற்றும் பழக்கவழக்கங்களை மதித்து நடக்க வேண்டும். முடிந்த அளவு அந்த கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முழுமையாக உணர்ந்து அதை உய்த்து அனுபவிக்க முயல வேண்டும்.


இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும்.. நமது மாநிலத்தை விட்டு வேறு ஒரு மாநிலத்திற்கு சுற்றுலா செல்லும்போது அங்கும் போய் நம்ம ஊரு சாப்பாடு கிடைக்குமா என்று சிலர் தேடுவார்கள். அது தவறு. மாறாக, அந்த உள்ளூரின் சிறப்பு உணவு எதுவோ அதை சாப்பிட ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் அந்த ஊரின், மாநிலத்தின் உணவுச் சிறப்பை, பாரம்பரியத்தை நுகரும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.


"வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தத்துவத்தின் நேர்வடிவம் இந்தியச் சுற்றுலா. பனிசூழ்ந்த இமயமலை முதல் அமைதியான கேரளக் காயல்கள் வரை, ராஜஸ்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் முதல் வாரணாசியின் ஆன்மீக வீதிகள் வரை இந்தியா அள்ள அள்ளக் குறையாத வரலாற்று மற்றும் இயற்கை அதிசயங்களைக் கொண்டுள்ளது. "அதிதி தேவோ பவ" (விருந்தினரே கடவுள்) என்னும் உயரிய பண்பாடே இந்தியச் சுற்றுலாவின் ஆன்மாவாகும்.


இந்தியச் சுற்றுலா வரைபடத்தில் தமிழ்நாட்டிற்குத் தனித்துவமான இடம் உண்டு.


தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரச் சிற்பங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எனத் தமிழர்களின் கட்டடக்கலை மேன்மையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னங்கள்.  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைச்சாரல்களும், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மகாபலிபுரம் போன்ற நீண்ட கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.


உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளும், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளும் தமிழகத்தை ஆசியாவின் முதன்மை மருத்துவச் சுற்றுலா மையமாக மாற்றியுள்ளன.


கொரோனா காலத்தில்தான் மனித உறவுகளின் மகத்துவத்தை மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு உறவையும் அழைத்துப் பேசி மகிழ்ந்தனர். உறவுகளுக்காக அப்போதுதான் மனிதர்களின் மனங்கள் அதிகம் ஏங்கின. அதன் பிறகு அந்த பெருந்தொற்றுக் காலம் முடிந்த பிறகு சுற்றுலா மீண்டும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது. சுற்றுலாவின் மகத்துவமும் நமக்கு மிக மிக சிறப்பாக புரியவும் ஆரம்பித்தது.


சுற்றுலா என்பது உலகை அறிந்துகொள்ளும் ஒரு தேடல். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழனின் தொலைநோக்குப் பார்வையை உலகிற்கு உணர்த்தும் சிறந்த ஊடகம் சுற்றுலா. இந்த உலக சுற்றுலா தினத்தில், இயற்கையையும் பண்பாட்டையும் பாதுகாத்து, பொறுப்புணர்வோடு பயணங்களை மேற்கொள்வோம் என உறுதி ஏற்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்