திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம்.. இன்று தீர்த்தவாரி.. குவிந்த பக்தர்கள்

Sep 23, 2026,02:24 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


2026 ஆம் ஆண்டிற்கான ஏழுமலையான்  திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருடாந்திர சலகட்லா பிரம்மோற்சவம் செப்டம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  செப்டம்பர் 23ஆம் தேதி புதன்கிழமை (இன்று) வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதத்தில் இவ்விழா ஒன்பது நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


திருமலை முழுவதும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் கண்கவர் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளாக் காட்சியாக, பூலோக வைகுண்டமாக திகழ்கிறது. ஏராளமான பக்தர்கள் தினமும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


இன்று செப்டம்பர் 23ஆம் தேதி சக்கரஸ்நானம் (chakra Snanam ) தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


மேலும் நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


பிரம்மோற்சவம் என்றால் என்ன?




பொருள் :பிரம்மன் நடத்திய உற்சவம்( விழா) என்பதே பிரம்மோற்சவம் எனப்படுகிறது. பிரம்மதேவன் பெருமாளுக்கு பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட விழாவே பிரம்மோற்சவ விழாவாகும். பிரம்மோற்சவ விழாவை பற்றிய புராண கதையை பார்ப்போம்.


புராணக்கதை :


பூலோக அவதாரம் :

 

ஒரு சமயம் நாரதருக்கு மனதில்  மும்மூர்த்திகளில் யாருக்காக முனிவர்கள் யாகம் செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த மூவரில் யாகத்தை ஏற்றுக் கொள்ளும் சாந்தமான மூர்த்தி யார்? என முனிவர்களிடம் கேள்வி எழுப்பினார் நாரதர். எனவே   பிருகு  முனிவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்பதை அறிய விண்ணுலகம் சென்று பிரம்மாவையும், சிவனையும் சோதித்து அவர்களே சிறந்தவர்கள் என அறிந்து வைகுந்தம் சென்றார்.முனிவர்  வந்ததை கவனிக்காமல் நித்திரையில்இருந்த மகாவிஷ்ணுவை  முனிவர் மார்பில் எட்டி உதைத்தார்.ஆனாலும் மகாவிஷ்ணு பொறுமையாக, "என்னை உதைத்ததால் தங்கள் கால்கள் வலிக்குமே "என்று கவலையுடன் கேட்டார். 


முனிவர் தன்னுடைய செயலுக்காக மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். திருமாலும் அவரை மன்னித்தார். முனிவர்கள் செய்யும் "யாக    அவிர்பாகத்தைப் பெற சிறந்த மூர்த்தி மகாவிஷ்ணுவே 'என்று பிருகு  முனிவர் தீர்ப்பளித்தார்.ஆனால் மகாவிஷ்ணுவின் திரு மார்பில் வீற்றிருக்கும் திருமகளுக்கு முனிவர், மகாவிஷ்ணு இருவர் மீதும் கடும் கோபம் வந்தது.திருமகள் மகாவிஷ்ணுவை உங்கள் மார்பில் நான் குடியிருக்கிறேன் உங்களை நெஞ்சில் உதைத்தது என்னை உதைத்தது போல் ஆகும். நீங்கள் அவரை தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்களே? என்று கேட்டார். ஒரு நல்ல காரியத்தை நிறைவேற்றவே முனிவர் இதுபோல் நடந்து கொண்டுள்ளார் என பதில் கூறினார் நாராயணன். ஆனாலும் மகாலட்சுமி அந்த சமாதானத்தை ஏற்காமல் கோபித்துக் கொண்டு பூலோகம் சென்று விட்டார் 


லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீனிவாசனாக அவதரித்து திருமலை சேஷாசல மலையில் ஒரு புற்றில்  தவம் செய்தார். திருமாலின் திருவருளால் பிரம்மதேவன் பூலோகத்தில் விஷ்ணுவிற்காக ஒரு பெரிய திருவிழாவை தொடங்கினார். பிரம்மனே முன் நின்று நடத்தியதால் இது "பிரம்மோற்சவம் "என பெயர் பெற்றது.இந்த விழாவில் கருடன் மூலமாக அனைத்து வானுலக தேவர்களும், ரிஷிகளும் அழைக்கப்பட்டனர். இந்த விழா பொதுவாக 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த பிரம்மாண்டமான பிரம்மோற்சவ விழாவை காண ஒன்பது நாட்களும் மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. எங்கு நோக்கினும் மக்கள் அங்கும் இங்குமாக "கோவிந்தா! கோவிந்தா!"  ஏடு கொண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா! கோவிந்தா!" என்ற கோஷம் எதிரொலிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா  வரும் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.


மேலும் இதுபோன்ற  சுவாரஸ்யமான  ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்