சென்னை: பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறிய கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பரப்பிய கட்டுக்கதைகளால்தான் காமராஜரே தோற்றார் என்று அவர் சாடியுள்ளார். தான் கூறிய கருத்துக்களைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா கூறிய கருத்துகளுக்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும்,நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும்.
தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.
எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு.
காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும்.அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோரும் திருச்சி சிவா கருத்துக்கு ரியாக்ட் செய்துள்ளனர்.
திருச்சி சிவா விளக்கம்
இந்த நிலையில் தனது கருத்து குறித்து திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன. நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.
குணாளா! மணாளா! குலக்கொழுந்தே! குடியாத்தம் சென்று வா! வென்று வா! என்று எழுதிய பேரறிஞர் அண்ணா - காமராசரின் மறைவுக்குப் பின் அவருக்கு அனைத்து மரியாதைகளும் செய்ததோடு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு அவர் திருப்பெயரைச் சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியொற்றி, அவர் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.
நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் - கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!
இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் என்று சிவா கூறியுள்ளார்.
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... வானிலை மையம் தகவல்!
திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர்... சீமான் ஆவேசம்!
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு விராட் கோலி விடுத்த வீடியோ அழைப்பே காரணம்.. கர்நாடக அரசு
ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை கேப்டன்தான் துண்டித்தார்.. அமெரிக்க ஊடகம் தகவல்
ஆகஸ்ட் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு!
காமராஜர்.. உயிருடன் இருந்தபோது தொடங்கியது.. திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
காமராஜர் குறித்து பரப்பிய கட்டுக்கதைகள்.. ஜோதிமணி வேதனை.. பெரிதுபடுத்தாதீர்கள்.. திருச்சி சிவா!
வயிறு உப்புசமா இருக்கா?.. இதுக்கு இந்த பழக்க வழக்கங்களே காரணமா இருக்கலாம்!
{{comments.comment}}