மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

Sep 08, 2025,06:29 PM IST

சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு புதிய தமிழகம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இரு தலித் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசுகையில், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என்று கூறியிருந்தார்.


இதற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது அவர் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்து பேசியது அவசியமற்றது.! 


தேர்தல் நேரத்தில் இதுபோன்ற விஷயத்தை பேச வேண்டியதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினால் ஆரோக்கியமாக இருக்கும். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி பேசினால் இரு சமூகத்தில் உள்ள நல்ல உறவுகளை முறியடிக்கும் நோக்கத்தோடு பேசுவது ஆரோக்கியமற்றது. எனவே, மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த "சின்ன உடைப்பு கிராம மக்கள்" இம்மண்ணின் பூர்வக்குடி மக்களான "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் அப்பகுதியில் வாழுகின்ற அவர்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையும் மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார்’ அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பது தான்.


தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 2018 ஜனவரி 23, அன்று மதுரை அவனியாபுரம் பேருந்துநிலையம், மந்தை திடலில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம நடத்தியுள்ளோம்.


இக்கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் மக்கள் இன்று வரையிலும் போராடி வருகின்றனர். எனவே,தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இதுபோன்ற பிரச்சாரங்களை மேற்கொள்வது தங்களின் அரசியல் பயணத்திற்கு ஆபத்தானது. கடந்த காலங்களில் அம்மையார் இருக்கும் போது மதுரை விமான நிலையம் பற்றி எங்காவது பேசியது உண்டா? எனவே, தங்களின் அரசியல் பயணத்தில் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டுமே தவிர, குறுகிய எண்ணத்தில் இருப்பது ஆபத்தானது.


எடப்பாடி பழனிசாமி அவர்களே, ஒருவரின் சொந்த நிலத்தை அரசின் பயன்பாட்டிற்கு வழங்குபோது, அவரின் விருப்படி பெயர் வைக்கலாம், ஆனால் ஒரு கிராமம் & ஒரே சமூகமாக இருந்தால் அந்த சமூக மக்கள் விரும்பும் பெயர்கள் சுட்டுவது தான் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவரும், தீண்டாமை ஒழிப்புக்காக முனைப்போடு பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி.வே.இமானுவேல் சேகரன் அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதே பொருத்தமானது என்று அவர் கூறியுள்ளார்.


புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி


புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:


மதுரை விமான நிலையம் - சின்ன உடைப்பு என்ற முழுக்க முழுக்க தேவேந்திர குல வேளாளர்கள் வாழ்ந்துவரும் கிராம மக்களின் நிலங்களிலேயே அமைந்துள்ளது.


ஆங்கிலேயர் காலத்தில் ராணுவப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையம், பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்திற்காக அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டது. விமான நிலையம் தொடங்கப்பட்டபோதும், விரிவாக்கம் செய்யப்பட்டபோதும் தேவேந்திர குல வேளாளர்களின் நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கே ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. பலர் தானமாகவும் நிலங்களை வழங்கியுள்ளனர்.


பொதுவாக, இதுபோன்ற தங்களது சொந்த நிலங்களை அரசு பயன்பாட்டிற்கு வழங்கும்போது, தனி நபர்களாக இருந்தால் அவர்கள் விரும்பும் குடும்பப் பெயர்களும், ஒரு கிராமம் அல்லது ஒரு சமுதாயமாக இருந்தால் அந்த சமுதாயம் விரும்பும் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்படுவது நடைமுறையாக உள்ளது. அதன் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் மனித உரிமையை மீட்கவும், தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தும், தமிழ் மண்ணிற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த ”தியாகி இமானுவேல் சேகரனார்” அவர்களின் பெயரை ”மதுரை விமான நிலையத்திற்கு” சூட்டுவதே சாலப் பொருத்தமானதாகும். மேலும், அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், ராணுவ வீரரும், எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத அப்பழுக்கற்ற மாமனிதரும் ஆவார்.


எனவேதான், மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த சின்ன உடைப்பு மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் வாழுகின்ற இம்மண்ணின் மூத்த வேளாண் தமிழ்க் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களின் ஒருமித்த கருத்தும் ”மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு ’தியாகி இமானுவேல் சேகரனார்’ அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பதாகும்.


இந்தப் கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மதுரையை மையமாகக் கொண்டு பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன; 2011 முதல் 2016 வரையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்துள்ளேன். மேலும், மதுரை விமான நிலையத்திற்குப் பெயரிடுவது குறித்துப் பேச்சு எழும்போதெல்லாம், எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, ’பத்தரை மாற்றுத் தங்கம்’ தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயரையே அனைத்துத் தரப்பினரும் முன்மொழிந்துள்ளனர்.


இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ஒட்டுமொத்த மக்களின் நலன் சார்ந்து பேசாமல், தேர்தல் நேரத்தில் பேச வேண்டியதை விடுத்து, குறுகிய எண்ணத்தோடு ஒருதலைப்பட்சமாக மதுரை விமான நிலையத்திற்குப் பெயர் சூட்டுவது குறித்துப் பேசியுள்ளார். அம்மையார் ஜெயலலிதா அவர்களே தன் ஆட்சிக் காலத்தில் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு அவசியமற்றது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களைச் சரி செய்வதை விட்டுவிட்டு, வேறொன்றில் கால் வைக்க முயன்றால், எடப்பாடி அவர்களின் அரசியல் வாழ்விற்கு "உள்ளதும் போச்சடா நொள்ளக் கண்ணா" என்ற சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்