தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை

Aug 28, 2026,12:16 PM IST

சென்னை: தொகுதிகளின் பின்னால் பிராக்கெட்டில் தனி என்று போடத் தேவையில்லை.. இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


நாடாளுமன்றத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் முறை இருந்தபோது அதில் ப்ராக்கெட்டில் ரிசர்வ்டு எனக் குறிக்கப்பட்டிருந்தது. அதை நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பின்னர் அது நீக்கப்பட்டது. 


எம்.பியோ எம்.எல்.ஏ வோ ரிசர்வ்டு தொகுதி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே குறிக்கப்பட வேண்டியுள்ளது. மற்ற நேரங்களில் அதைக் குறிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே எல்லா தொகுதிகளையும்போல அதையும் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும். 




எல்லா நேரத்திலும் அந்தத் தொகுதியின் பெயரோடு ப்ராக்கெட்டில் எதையும் குறிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அல்லாத நேரங்களில் ஒருவர் பொதுத் தொகுதியின் பிரதிநிதியா அல்லது தனித் தொகுதியின் பிரதிநிதியா என்பதை அடையாளப்படுத்த வேண்டும் என்ற தேவை கிடையாது. எனவே ப்ராக்கெட்டில் எதையும் குறிப்பிடாமல் இருப்பதே சரி. 


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  இதைப் பரிசீலித்து தொகுதியின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும் ப்ராக்கெட்டில் வேறு எதையும் குறிப்பிட வேண்டாம் என உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தவெக எம்எல்ஏ சிந்து கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதைப் பாராட்டும் வகையில் இந்தக் கோரிக்கைக்கு ரவிக்குமார் வலு சேர்த்து அறிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்