Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!

Aug 28, 2026,05:14 PM IST

- சு.தா.அறிவழகன்


சென்னை: தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியும், இணையத்தின் பரவலும் மனித சமுதாயத்திற்கு அளித்த மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று 'வீட்டிலிருந்தே வேலை அதாவது Work from Home - WFH எனும் புதிய கலாச்சாரம். 


இதை புதிய கலாச்சாரம் என்று கூறி விட முடியாது. இது பல காலமாக இருக்கும் ஒன்றுதான். அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் கட்டுப்பட்டு, கடிகார முள்ளோடு போட்டிபோட்டுக் கொண்டிருந்த உழைப்பு முறை மாறி, இன்று நம் வீட்ட வரவேற்பறையே அமைதியான அலுவலகமாக உருவெடுத்துள்ளது.


உண்மையில் இது ஒரு அருமையான வேலை நடைமுறை என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா தாக்கத்தின்போதுதான் பலருக்கும் இந்த ஒர்க் பிரம் ஹோம் கலாச்சாரத்தின் அருமையே புரிந்தது. 


கடந்த சில ஆண்டுகளில் இந்த வேலை கலாச்சாரம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை, எழுத்து சார்ந்த வேலைகள், வடிவமைப்பு, வாடிக்கையாளர் சேவை போன்ற பல துறைகளில் இது பெரும் வெற்றியைக் கண்டுள்ளது. 


வாழ்க்கை முறை மாற்றம், குடும்பத்திற்கான நேரம், பண சேமிப்பு எனப் பல தளங்களில் இது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.




வீட்டிலிருந்தே பணிபுரிவது ஊழியர்களுக்கு மட்டுமன்றி, நிறுவனங்களுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவருகிறது. நாள்தோறும் அலுவலகம் செல்லTraffic-ல் நேரத்தை விரயம் செய்வதும், வாகனப் புகையில் சிக்குவதும் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரும். வீட்டிலிருந்தே வேலை செய்வதால் இந்த சவால்கள் முற்றிலுமாக நீங்குகின்றன.


பெட்ரோல் செலவு, பொதுப் போக்குவரத்து கட்டணம், நாள்தோறும் வெளியிலும் உண்ணும் உணவுச் செலவு என பெரும்தொகை சேமிக்கப்படுகிறது. பயணத்திற்குச் செலவாகும் 2 முதல் 3 மணி நேரம் மிச்சமாவதால், அதை மற்ற பயனுள்ள காரியங்களுக்குப் பயன்படுத்த முடிகிறது.


குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓட வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல், பணிக்கு நடுவே சிறு இடைவெளிகள் எடுத்துக்கொண்டு, சொந்த வேலைகளையும் கவனித்துக் கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறது.


பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட இது சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதம்.


அலுவலகத்தின் சலசலப்புகள், அடிக்கடி குறுக்கிடும் உரையாடல்கள் இல்லாததால், ஒருவர் தனது வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி அதிக உற்பத்தித்திறனை (Productivity) அதிகரிக்க முடிகிறது.


எந்த ஊரில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும் திறமை இருந்தால் போதும்—உலகளவில் உள்ள சிறந்த நிறுவனங்களில் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற முடியும்.


வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது வெறும் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, அது மனரீதியான நிம்மதியையும் தருகிறது. வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவை உண்பதால் உடல்நலம் மேம்படுகிறது. வேலை நேரத்தை நாமே திறம்பட திட்டமிட்டுக் கொள்ளும்போது மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.


பெண்களுக்குத்தான் இந்த வேலை முறை மிக மிக உபயோகமானது. வெளிப் பயணங்களின் அழுத்தம், நெருக்கடிகள், தேவையில்லாத எரிச்சல்களைத் தவிர்த்து நிம்மதியாகவும், அதேசமயம், ஆபீஸில் இருப்பதை விட அதிக உத்வேகத்துடனும் பெண்கள் பணியாற்ற இந்த ஒர்க் பிரம் ஹோம் நடைமுறை உதவும்.


குறிப்பாகப் மகப்பேறுக்குப் பிறகு வேலையைத் தொடர விரும்புபவர்களுக்கு, இந்த முறை ஒரு மிகப்பெரிய கதவைத் திறந்துவிட்டுள்ளது. தங்களின் தொழில் கனவுகளையும், குடும்பப் பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் அழகாகக் கையாள இது வழிவகை செய்கிறது.




ஆனாலும் பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பும் நடைமுறையை கையில் எடுத்து வருகின்றன. அது பல நெருக்கடிகளையே தரும். குறிப்பாக பெங்களூர், சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களில் ஒர்க் பிரம் ஹோம்தான் மிகச் சிறந்த ஆப்ஷன்.. ஆனால் பல நிறுவனங்கள் அந்த நடைமுறையை ஏன் புறக்கணிக்கின்றன. தர மறுக்கின்றன என்பது ஆச்சரியமானது. 


அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் இல்லாத வேலைகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கட்டாயமாக ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை அரசாங்கமே சட்டம் கொண்டு வந்து கொடுத்தால் கூட நல்லதாக இருக்கும். வேலையும் ஒழுங்காக நடக்கும். தேவையில்லாத பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.


தொழில்நுட்பம் மனிதனை இயந்திரமாக்கிவிட்டதாகக் கூறப்படும் இந்தக் காலத்தில், வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை மனிதனை மீண்டும் தன் குடும்பத்தோடும், தனக்கான சுய விருப்பங்களோடும் பிணைக்கப் பெரிதும் உதவுகிறது. முறையான திட்டமிடுதலும், சுயக் கட்டுப்பாடும் இருந்தால், இந்த 'Work from Home' கலாச்சாரம் நமது வேலை மற்றும் வாழ்க்கைச் சமநிலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.


(கட்டுரையாளர் 25 வருடமாக வெற்றிகரமாக ஒர்க் பிரம் ஹோம் செய்து வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்