- சுதா திருநாராயணன்
எங்களுக்கு திருமணமாகி 2, 3 மாதங்களில் கோடை விடுமுறை வந்தது. பெங்களூரில் உள்ள என் நாத்தனார்
வீட்டிற்கு செல்ல நானும் என் கணவரும் திட்டமிட்டோம். என் நாத்தனார் என்னை விட பத்து வயது பெரியவர். மிக
அருமையாக சமைப்பார். பட்சணங்கள் செய்வதில் வல்லவர். சமையலில் ஏ பி சி டி கூட ஒழுங்காக தெரிந்து கொள்ளாத நான் ஏதாவது நல்ல பட்சணம் செய்து எடுத்துக் கொண்டு போய் நாத்தனாரை அசத்தலாம் என்று
தீர்மானித்தேன்! என் அம்மா காரட் அல்வா மிக நன்றாக செய்வாள். அதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
என் கணவர் உடனே நான் எள் என்பதற்குள் எண்ணையாக ஒரு கிலோ காரட்டும் அதை வேக வைப்பதற்கு
பாலும் (சுமார் 2 லிட்டர்) வாங்கி வந்தார். காரட்டை அழகாக துருவியும் கொடுத்தார். (அவர் அக்காவிற்காகத் தானே)

துருவிய காரட்டை பாலில் வேகவைத்தேன். இது வரை சரியாகவே வந்தது. சர்க்கரையையும் அதிலேயே
போடலாம் என்று அம்மா சொன்னாற் போல் நினைவு. சுமார் இரண்டு கிலோ (1 கிலோ காரட்டுக்கு 2 கிலோ சக்கரை
என்ற விகிதத்தில்!) சர்க்கரையை கொட்டி கிளற ஆரம்பித்தேன்.
விழுதை அளந்து அதற்கு தகுந்தாற்போல் சர்க்கரை போட வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பித்தது. அளவைப் பார்த்தால் மிக அதிகமாக இருந்தது. நெய்யை ஊற்றினால் சரியாகிவிடும், பாகும் சிறிது கெட்டியாகட்டும் என்று ஸ்டவ் தீயை பெரிதாக வைத்து (அப்போது காஸ் அடுப்பு இல்லை) கை விடாமல் வலிக்க வலிக்க கிளறினேன்.
ஓரங்களில் சர்க்கரை பூத்து வந்தது. உடனே முக்கால் கிலோ நெய்யை அதில் ஊற்றினேன். கை வேறு ரொம்ப வலித்து.
எல்லாம் போதும் என்று முதலில் நினைத்தாலும். நன்றாக கிண்டாவிட்டால் கெட்டுவிடுமோ என்று பயந்து மேலும்
ஒரு மணி நேரம் கிளறினேன். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, சூடு ஆறிய பிறகு மெதுவாக சம்புடத்தில் எடுத்து
வைத்தேன்.
அல்வா ரொம்ப கெட்டியாகவும், தொட்டால் உதிர்ந்து விடும் போல் இருந்தாற்போல் தோன்றியது. எல்லாம் நன்றாகத்தான் இருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். மறுநாள் காரட் அல்வா சகிதம் சென்னை வழியாக பெங்களூருக்கு பயணமானோம்.
சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்றபோது அவர்களுக்கும் கொஞ்சம் அல்வா கொடுக்கலாம் என்று எடுத்தால் அல்வா பொலபொலவென உதிர்ந்தது. வெட்கமாக இருந்ததால் சப்தம் போடாமல் மூடி மீண்டும் பையினுள்ளேயே வைத்து விட்டேன். அன்று மாலை தான் பெங்களூர் பயணம். மதியம் பையை பார்த்த என் கணவர் அலறினார்,
”இங்கே பார் ஒரே எறும்பு”. நான் ஏதும் சொல்வதற்குள் அவ்வளவு அல்வாவையும் பேப்பரில் கொட்டினார். உறவினர் இது என்ன புது வித மிக்சர் என்று கேட்டனர். நான் காதில் விழாதது போல் பாவனை செய்தேன். அல்வாவை பால்கனியில் எடுத்துச் சென்று எறும்பு பட்டாளத்தை ஓட்டிவிட்டு பேப்பரிலேயே அல்வாவை
பொட்டலமாக கட்டினார் என் கணவர்.
நாங்கள் பெங்களூர் போய்ச் சேர்ந்து நாத்தனாரிடம் ஹல்வாவை கொடுத்த போது பேப்பர் எல்லா நெய்யையும் உறிஞ்சி விட்டது. நெய், ஏலக்காய் என்று எந்த மணமும் இல்லாத காய்ந்து, உதிர்ந்த காரட் ஹல்வா மிக்சரை என் நாத்தனார், அவர் கணவர் குழந்தைகள் யாவரும் விரும்பி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
என் நாத்தனார் மகள் எனக்கு நைஸ் ஹல்வா மாமி என்று பெயரிட்டாள். என் கணவர் 40 வருடங்களுக்கு பிறகும் கூறுவார்.
”நன்றாக அல்வா கொடுத்தாய் போ”
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
காரட் ஹல்வா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
Nightmare
தேனமுதுக் குரலே தென்னங் காற்றே!
சேலம் மாநகரில் களைக்கட்டும் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக திருவிழா
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
நேபாள வெள்ளப்பெருக்கு: கைலாஷ் யாத்திரை சென்ற 22 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
{{comments.comment}}