நெஞ்சு பொறுக்குதில்லை!

Nov 11, 2026,11:12 AM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன் 


என்னுடைய சோகக் கதையைக் கேட்க யாருமே இல்லையா?அத்தனைப் பாவம் பண்ணியிருக்கேனா?

சரி, நானே புலம்பித் தேத்திக்கிறேன்.

என்னை ஒட்டியிருக்கிற சுவராவது கேட்டு என் பாடு புரிஞ்சிக்கட்டும்!


என் முதலாளி ஐயா, நரசிம்மர் பக்தர் போல. சமையல்கட்டும் இல்லை, சாப்பாட்டு அறையுமில்லை, என்னை இரண்டுங்கட்டான் இடத்திலே அவங்க சௌகர்யத்துக்கு நிக்க வச்சுட்டாங்க. என்னை கேட்கலையே!


காலையில் எழுந்தால் முதல் வேலையாக என்னைத் தட்டி, காபிக்கு பால் எடுத்து காபி போட்டு இரண்டு பேரும் ரசிச்சு ருசிச்சு ஊஞ்சலில் உட்கார்ந்து கைபேசியை நோண்டியவண்ணம் இருப்பார்கள். நமக்கு ஒரு வாய் காபி வேணுமான்னு கூட கேட்க மாட்டங்களே!


அப்புறம் சமையல்கார அம்மா வரும். அவங்க வந்துதான் போகவர காய், தயிர் என்று எடுப்பாங்க. ரொம்ப தர்மசங்கடம்.




இன்னிக்கு வந்து ஒரு வாரத்துக்கு சமைத்து வெச்சு போயிடுவாங்க. நேற்று இரவுதான் ஒரு வாரம் முன்னாடி சமைத்த கொழம்பு, கூட்டு, பொரியல், சன்னா மசாலா எல்லாம் காலி பண்ணி எனக்கு மூச்சு விட இடம் கிடைச்சது.


மின்சார கட் அப்பப்ப, ஒரே பழைய நாற்றம்! எப்படித்தான் முழுங்கி விடுகிறார்களோ சாமி!


சாதம் மட்டும் தினம் அந்த அம்மா குக்கர்லே வச்சிடும். மற்றபடி எல்லாம் பழைய சாப்பாடுதான். தேடி அலைஞ்சு,

பெரிய ஷோரூம்லே இருந்து குளிர்சாதனப் பெட்டி வாங்கி நம்மள உள்ளே அடைக்கிறது இந்த ஊசல், அவிசல் எல்லாம்

காப்பாத்தி நாம நாசமாப் போகத்தான்.


மருந்துக் கடைக்காரர் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போயிருக்கார். அநேகமா நான் அங்கே போயிடுவேன். போனால் நிம்மதி. மருந்து, மாத்திரை வைப்பாங்க. நானும் உபயோகமா இருக்க முடியும். 

பார்க்கலாம்.


அப்படி அங்க போகலை என்றால், 'சிவனே' என்று ஓடாம நின்னுடலாமா என்று ஆத்திரமா வரது.


நானோ சிம்பிளி இந்தியன். ஆனா இவங்க வெளிநாட்டு மோகம் இவ்வளவு தூரம் என்று நினைச்சா எனக்கே குளிராம கொதிக்குது!


ஆமா.. நான் யார்னு கண்டுபிடிச்சுட்டீங்களா!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்