2 தேர்தல் ஆணையர்கள் இல்லை.. நெருக்கடியில் தலைமைத் தேர்தல் ஆணையர்.. அடுத்து என்ன நடக்கும்?

Mar 10, 2024,06:43 PM IST

டெல்லி: தேர்தல் ஆணையம் மிகப் பெரிய நெருக்கடியில் மூழ்கியுள்ளது. விடிஞ்சா கல்யாணம்... பொண்ணைக் காணவில்லை என்றால் எப்படி ஒரு அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுமோ அதற்கு ஈடான பரபரப்பில் நாடு உள்ளது.


டி.என். சேஷன் என்று முன்பு ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் இருந்தார். ஆரம்பத்தில் அவர் தலைமைத் தேர்தல் ஆணையர் எல்லாம் கிடையாது. வெறும் தேர்தல் ஆணையர்தான். காரணம், அவர் இருந்தபோது அவர் மட்டுமே தேர்தல் ஆணையர். அவரது அதிரடியான நடவடிக்கைகள் இந்தக் காலத்து தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.




சேஷன் தேர்தல் ஆணையராக இருந்தபோது,  தேர்தல் நடைமுறைகளில் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தவர். இஷ்டத்திற்கு செயல்பட்டு வந்த கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடிவாளம் போட்டவர். பணத்தை வாரியிறைத்து செலவழிப்பதற்கு ஆப்பு வைத்தவர். வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் அவர் கிடுக்கிப் பிடி போட்டு ஒரு வழி பண்ணி விட்டார். இதனால் அத்தனைக் கட்சிகளும் ஆடிப் போயின.


சேஷன் தேர்தல் ஆணையராக இருந்தபோது மத்தியில் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சேஷனுக்கு கண்டிப்பாக கடிவாளம் போட்டே ஆக வேண்டும் என்று கொந்தளிக்க ஆரம்பித்தன கூட்டணிக் கட்சிகள். இதையடுத்து வேறு வழியின்றி தேர்தல் ஆணையர் பதவியை 3 ஆக அதிகரித்தது காங்கிரஸ் அரசு. அதன்படி கூடுதல் ஆணையர்களாக எம்.எஸ்.கில் மற்றும் கிருஷ்ணமூர்த்தியை மத்திய அரசு நியமித்தது. இதுதொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் தேர்தல் ஆணையர்கள் 3 பேராக தொடர்ந்து வருகின்றனர். 


தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்த சேஷன், தனக்கு இடையூறு செய்வதற்காகவே நியமிக்கப்பட்டஇரண்டு தேர்தல் ஆணையர்களையும் கூட விடவில்லை. அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர்களையும் கலங்கடித்தார். சேஷன் போகும் வரை யாருமே நிம்மதியா தூங்க முடியாத அளவுக்கு உண்டு இல்லை என்று பண்ணி விட்டார். இந்தியாவுக்கு டி.என். சேஷன் போன்ற ஒரு தேர்தல் ஆணையர் ஒருபோதும் கிடைக்க மாட்டார் என்று சுப்ரீம் கோர்ட்டே அவரைப் பாராட்டியுள்ளது. 




இப்படி 2 தேர்தல் ஆணையர்கள், ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் என்று இதுவரை சுமூகமாக இயங்கி வந்த தேர்தல் ஆணையம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ஒரே ஒரு தலைமைத் தேர்தல் ஆணையருடன் தனித்து விடப்பட்டுள்ள சூழல் உருவாகியுள்ளது. 2 தேர்தல் ஆணையர்கள் பதவி தற்போது காலியாக உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பணியில் உள்ளார். பொதுத் தேர்தல் வேறு நெருங்கி விட்டது. இந்த சமயத்தில் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.


மத்திய அரசிடம் 3 ஆப்ஷன்கள் உள்ளன. முதல் ஆப்ஷன்.. உடனடியாக ஒன்று அல்லது 2 தேர்தல் ஆணையர்களை நியமித்து நிலைமையை சரி செய்வது. 2வது ஆப்ஷன் தலைமைத் தேர்தல் ஆணையரை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தலை நடத்துவது, இதற்காக அவசரச் சட்டம் கொண்டு வருவது. 3வது ஆப்ஷன், புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமிக்கும் வரை தேர்தலை சற்று தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பது.




இதில் எது நடக்கும் என்று தெரியில்லை. பலரும் சொல்வது மற்றும் எதிர்பார்ப்பது தலைமைத் தேர்தல் ஆணையரை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தலை நடத்த மத்திய அரசு முயலும் என்று சொல்கிறார்கள். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும். தேர்தல் முறைகேடு புகார் எழும். சட்டப் போராட்டங்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. தேர்தல் தள்ளிப் போனால் சட்ட ரீதியில் பல பிரச்சினைகள் எழும்.


ஆக, மொத்தத்தில் அருண் கோயலின் ராஜினாமா முடிவால் பல குழப்பங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து இதுவரை மத்திய அரசு கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் தேர்தல் ஆணையர் விலகல் விவகாரத்தில் பாஜகவை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றன எதிர்க்கட்சிகள்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்