2 மாசம்தான் டைம்.. காலி பண்ணிட்டுக் கிளம்புங்க .. வாடகை வீட்டு துயரங்கள்!

Jul 09, 2026,10:43 AM IST

- எழுத்தாளர் சுசரிதா


வாடகை வீட்டில் வாழ்பவர்களின் கஷ்டங்களும் வேதனைகளும் ஏராளம். நிலையில்லாத வாழ்க்கையில், நிலை இல்லாத இருப்பிடம் வேறு! 


நம் வசிப்பிடம் நம் கையில் இல்லை, வீட்டு உரிமையாளரின் வாக்கில் இருக்கிறது! என்பதாகத் தான் பலரின் நிலைமை. ஒரு மாதமோ இரண்டு மாதமோ அறிவிப்பு கொடுத்து (notice period) 'அதற்குள் கிளம்பு' என்றால், வேறு வீடு பார்த்துக்கொண்டு கிளம்ப வேண்டியது தான்.


இப்படியொரு இறுக்கமான சூழலில், ஆனியில் அடியெடுத்து வைக்கக் கூடாது, ஆடியில் வீடு மாறக் கூடாது! போன்ற மரபு சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. 


அலைந்து  திரிந்து, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத, மழைக்காலத்தில் படகு சர்வீஸ் தேவைப்படாத ஏரியாவாகப் பிடித்து,  இது சரியாக இருக்கும்! என்ற அனுமானத்தில் வேறு வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்கும் போது, வாடகைக்கு ஏதோ அரண்மனையைப் பிடித்துவிட்ட தெனாவெட்டில் மிதக்கலாம், தவறில்லை! 


பெயிண்டிங் சார்ஜ், ரிப்பேர் சார்ஜ், இன்னும் விதவிதமாய்ப் பணத்தைக் கழித்துக்கொண்டு காலி செய்யும் வீட்டுக்காரர் கொடுக்கும் மிச்ச அட்வான்ஸ் பணத்தை  அமைதியாக வாங்கிக் கொண்டால் மிஞ்சியதை நினைத்து மகிழலாம். 




மாறப்போகும் வீட்டில், டியூப் லைட் மின்விசிறி எல்லாம் நீங்களே போட்டுக்கணும் என்ற கறார் அனைத்தையும் சமாளித்தால், பாதிக்கிணறு தாண்டிவிட்டதற்கு ''சபாஷ்" சொல்லிக் கொள்ளலாம்.  வீட்டு சாமான்களைப் பேக்கிங் செய்து லாரியில் ஏற்றி வீடு மாறும் அவஸ்தை அனுபவிக்காதவர்கள் பாவிகள்!  ஆனவை ஆகாதவை, நேற்றைய பொக்கிஷம், நாளைக்குத் தேவைப்படும், இப்போதைக்கு இருக்கட்டும், பரிசாய் வந்தது, ஆசையாய் வாங்கியது என்று வித விதமாய் இன்றைக்கு வீடுகளில் நிறைந்திருப்பது பொருட்கள் தான், மனிதர்கள் அல்ல!


வீட்டை காலி செய்யத் துவங்கும் போது தான் பல வீடுகளில், ஒளிந்திருக்கும் பூதங்கள் வெளியே வரும்.  ஆன்லைனில் வாங்கிக் குவித்த உருப்படாத, உடுத்தப்படாத துணிமணிகள்..  மூலையில் போட்டு வைத்திருந்த பழைய செல்போன்கள் லேப்டாப்கள் கேமராக்கள் போன்ற எலக்ட்ரானிக் இத்யாதிகள்..  துரு ஏறிய பாட்டி காலத்துச் சமையல் பாத்திரங்கள்.. தூக்கி வீசப்படாத உடைந்த தட்டு முட்டு சாமான்கள். .  என்றைக்கோ புதைக்கப்பட்டு மறந்து போன பொக்கிஷங்கள் இவை! 


நமக்கு மூத்த தலைமுறையினர் பெரும்பாலும் பழைய சாக்குகளில், துணி மூட்டைகளில் வீட்டு சாமான்களைக் கட்டி எடுத்துச் சென்றனர். இன்றைக்கு பேக்கிங் வசதிகளும் நிறைய இருக்கின்றன. 'பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்'  சேவையைப் பரவலாக மக்கள் பயன்படுத்த, அவர்கள் அட்டைப்பெட்டிகளில் சிறிய சாமான்களையும், தொலைக்காட்சி குளிர்சாதன பெட்டி போன்ற பெரிய பொருட்களைக் குமிழி உரை கொண்டு சுற்றி, ஏற்றி இறக்கி விடுகின்றனர்.


காசுக்கு ஏற்றார் போல, பக்காவாக பேக்கிங் செய்து, சிறு கீறல் கூட விழாமல் சாமான்களை இடமாற்றும் கம்பெனிகள் உண்டு. அதே வேளையில், குப்பையைப் போல பெட்டிகளில் அள்ளிக் கொட்டி, எடுத்துவந்து, ஆங்காங்கே வீசிவிட்டு செல்லும் கம்பெனிகளும் உண்டு.  சாமான்களை இறக்கிவிட்டு சுமந்து வந்த லாரிகளை அனுப்பிவிட்டு, வீட்டிற்குள் திரும்பி, குவிந்து கிடக்கும் சாமான் பெட்டிகளையும் மூட்டைகளையும் பார்த்தால். . ஆஹா.. கண்கொள்ளா காட்சி தான்! தலை மட்டும் கொஞ்சம் சுற்றும் அவ்வளவே! 




இதை எங்கே வைக்க, அதை எங்கே வைக்க என்று தலையைப் பிய்த்துக்  கொண்டு.. சீப்பை காணோம், தோசைத் திருப்பியைக் காணோம் என்று கண்ணாமூச்சியில் கண்டுபிடித்து..  காற்றே வரவில்லை,  துணிகளை உலர்த்தப் போதிய இடமில்லை என்று குறைகள் ஒவ்வொன்றாய் வெளியே வர, தலையில் அடித்துக் கொண்டு..   அத்தனை ஆர்ப்பாட்டமும் முடிந்து, ஒரு  வழியாகப் பத்து பதினைந்து நாட்களாக, ஏற கட்டி ஒதுங்க வைப்பதற்குள், வீட்டுக்குள் ஒரே ரணகளம் தான் போங்கள்! 


அக்கம்பக்கத்தில் புதிதாய் பழகுவதும், மளிகைக் கடை, காய்கறி மார்க்கெட் சலூன் என்று அந்த ஏரியாவைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் நல்ல அனுபவங்கள் தான் என்பதை மறுப்பதற்கு இல்லை.  எல்லாம் இயல்பாகி மாலை வேளையில் வராண்டாவில் அமர்ந்து ஒரு கப் காபி குடிக்கையில், இதுவும் நிரந்தரமல்ல,  இந்த வீட்டில் எத்தனை நாட்களோ என்கிற அங்கலாய்ப்பு வாடகை வீட்டு வாசிகளுக்கு வரவே செய்கிறது.


மறுபடியும் முதல்ல இருந்தா.. என்று நினைக்கும்போது, ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்து பெரு..மூச்சு விடலாம்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலைக்கு எதிரான மனு: விசாரிக்க கோர்ட் மீண்டும் மறுப்பு

news

தனுஷின் அரசியல் கட்சிக் கொடி சர்ச்சை : இயக்குநர் சுப்ரமணிய சிவா விளக்கம்

news

2 மாசம்தான் டைம்.. காலி பண்ணிட்டுக் கிளம்புங்க .. வாடகை வீட்டு துயரங்கள்!

news

98% விழுக்காட்டைத் தாண்டியது.. இந்தியாவின் 6-வது ‘முழு எழுத்தறிவு’ பெற்ற மாநிலம் உத்தரகாண்ட்!

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்