99% பாட்டாளி மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ்

Dec 24, 2025,05:07 PM IST

சென்னை:  100க்கு 99 சதவீத பாட்டளி மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அதனால், இந்த பொய்யும் பொருட்டும் எடுபடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


பாமகவில் பல நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப் போர் நடந்து வருகிறது. அதன்படி தற்போது, ராமதாஸ் தலைமையில் சேலத்தில் வரும் 29ம் தேதி நடப்பது பாமக பொதுக்குழு அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29ம் தேதி சேலம் ஐந்து சாலை ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்த கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.




சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது. எனவே, சேலத்தில் 29ம் தேதி நடைபெற உள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்திருந்தார். 


இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பாமக நிறுவர் ராமதாஸ் கூறுகையில், 100க்கு 99 சதவீத பாட்டளி மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அதனால், இந்த பொய்யும் பொருட்டும் எடுபடாது. அவர் கட்சியிலேயே இல்லை. அன்புமணியை நான் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். விலக்கப்பட்டு விட்டார். அவர் செல்வதற்கு ஒன்றும் இல்லை. ஏதே வழிப்போக்கர் சொல்வது போல சொல்லிக்கொண்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்