ஜன்னல் வழியே நிலவுடன் ஒரு மௌன உரையாடல்

Jun 19, 2026,02:43 PM IST

- ஆனந்தி சத்தியராஜ்


​மாலைப் பொழுதில் வீசும் அந்த மெல்லிய குளிர் காற்றுக்கு ஏங்கி என் ஜன்னல் திரையை சற்றே விலக்கினேன். தன் வெப்ப கதிர்களால் நாள் முழுவதும் ஆடி அடங்கிய கதிரவன் அஸ்தமனம் ஆகி சற்று நேரமே ஆனதால் இருள் கவிழ தொடங்கியது. குழந்தையின் பிஞ்சு பாதங்களின் இளம்சிவப்பு நிறத்தை அங்கும் இங்கும் பூசிய ஓவியமாய் காட்சியளித்தது வானம். அந்தி சிவந்த மேகங்களின் விளிம்பில் இருந்து ஏதோ என்னை எட்டி பார்க்க, அது என்னவென்று உற்றுப் பார்த்தேன்.


​ஒரு பெரிய கரும்பலகையின் மேல் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்மினுக்க, அதற்கு நடுவில் முற்று பெறாத கோலமாய் அழகிய சிரிப்பு குறி போல பளீரென மின்னியது பிறைநிலா!

 

உன் ஈர்ப்பில் வியந்து  உன்னை புகழ்ந்து எழுத வார்த்தைகள் என்னுள் முட்டி மோத தொடங்கின. உன்னை கவிதையாக வடிக்கவும், ஓவியமாக தீட்டவும் பெரும் புலவர்கள் பலர் இருக்க, நான் என்ன பெரிதாக செய்து விடப் போகிறேன்? இருந்தாலும், என்னைப் பார்க்க ஓடோடி வந்த உன்னை எப்படி வெறும் பார்வையால் கடந்து செல்வது? உன்னை அழகாக வர்ணிப்போர் பலர் இருக்கட்டும்; ஆனால், உன்னுள் ஊடுருவி உன் ஒளிக்குப் பின்னால் இருக்கும் ஆயிரம் வலிகளையும், தடைகளையும் உணர்ந்து கொள்ளும் சிலருள் நானும் ஒருவள்!


ஆகாயத்தின் வெள்ளை மச்சமாய் நீ ஜொலித்தாலும்,  உன்னுள் சாம்பல் நிறப் பாறைகளும், தூசி படிந்த இருண்ட பள்ளங்களையும் மட்டும் தான் நீ சுமந்திருக்கிறாய்.


​உலகை ஆளும் சூரியனிடம் இருந்து வேறும் பத்திலிருந்து பன்னிரெண்டு விழுக்காடு ஒளியைக் மட்டுமே கடனாகப் பெற்று, அதையும் பூமி மீது அழகாய் வீசும் பெருங்குணம் கொண்டவன்.




​தட்சனின் சாபத்தாலும், விநாயகப் பெருமானின் கோபத்தாலும் உன் வனப்பு தேய்ந்து போகும் என்ற சாபத்தை பெற்றாய். ஒருவழியாக இந்த அண்டத்தை ஆளும் ஈசனின் திருவடியில் வீழ்ந்து, அவன் சடாமுடியின் மேலேயே ஒய்யாரமாய் அமர்ந்து விட்ட தந்திரக்காரன் நீ !  


உன் பக்தி கண்டு மகிழ்ந்த பெருமான்,  மீண்டும் வளரும் வரம் தந்து, இந்த பதினைந்து நாள் சுழற்சியை ஒரு வரமாக்கினான். இவ்வளவு அழகும் அறிவும் நிறைந்த நீ,  வெறும் ஒளியை மட்டுமா தருகிறாய்? அதற்கும் மேல் ஒரு மருந்தாகவும் விளங்குகிறாய்; உன் குளிர்ந்த நிலவொளியில்தான் மருத்துவ மூலிகைகள் உயிர் பெறுகின்றன, கனிகள் தன் சுவையை கூட்டுகின்றன, பூக்கள் தம் வண்ணங்களை பெறுகின்றன. இருளை நீக்கி, இயற்கைக்கு விருந்தளிக்கும் உன்னை, வெறும் கோள்களில் ஒன்றாக என்னால் பார்க்க முடியவில்லை.


​முழு நிலவோ அல்லது பிறை நிலவோ - நீ எந்த கோலத்தில் இருந்தாலும், உன்னைப் பார்க்கும் போதெல்லாம் அனைவரின் முகத்தில் ஒரு மென்மையான சிரிப்பும், இனம் புரியா அமைதியும் தவழ்கிறது. 


அகத்தே எவ்வளவு இருள் இருந்தாலும், புறத்தே ஒளியைச் சுமந்து கொண்டு, புன்னகையுடன் உலகுக்கு முன்னால் நிற்பதே வாழ்வின் உண்மையான அழகு என்பதை உன்னைப் பார்த்து  கற்றுக்கொள்கிறேன். வானில் தனித்து நின்றாலும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனித இதயங்களுக்கு கவிதைப் பாடமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்