பெங்களூரு: தேர்தல் சமயத்தில் அங்கிருந்து இங்கு தாவுவதும், இங்கிருந்து அங்கு போவதும் சகம்ஜான். அந்த வகையில், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பாவின் மகள்தான் கீதா. இவர் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமாரை மணந்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து வந்தார் கீதா ராஜ்குமார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இவரது சகோதரர்கள் மது பங்காரப்பா, குமார் பங்காரப்பா ஆகியோரும் கூட அரசியலில் உள்ளனர்.
மது பங்காரப்பா ஜேடிஎஸ் கட்சியில் இருந்தார். அதிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சொரபா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல இன்னொரு சகோதரரான குமார் பங்காரப்பா அதே சொரபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது கீதாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு சிவராஜ்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது மனைவியின் முடிவை மதிப்பதாகவும் ,அவரை ஆதரிப்பதாகவும் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். தனது மைத்துனர் மது பங்காரப்பாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
அரசியல் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காதவர் ராஜ்குமார். ஆனால் அவர் ஒன்று சொன்னால் கேட்காத கர்நாடக அரசியல் தலைவரே கிடையாது. அந்த அளவுக்கு கர்நாடக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஜ்குமார். மிகப் பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்தவர். இன்று அவரது குடும்பம் காங்கிரஸ் பக்கம் சாய்ந்திருப்பது பாஜகவுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
{{comments.comment}}