அனைவரும் திரையரங்கிற்குச் சென்று காண வேண்டிய படம் டூரிஸ்ட் ஃபேமிலி. மனிதம் வாழ வேண்டும்; மனிதன் அனைவரிடம் வர வேண்டும் என்பதை மிக அழகாக எடுத்துக் காண்பித்துள்ளனர் என தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியுள்ளார்.
குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில், சசிகுமார் நாயகனாகவும், சிம்ரன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த மே 1-ந் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அனைவரின் பாராட்டை பெற்ற படமாக வலம் வருகிறது. அந்த வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் பற்றி ஒரு அருமையான விமர்சனத்தை எழுதியுள்ளார். அந்த விமர்சனம்:
தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்கு பிறகு வெட்டு, குத்து, கொலை, துப்பாக்கி சூடு ,சண்டை காட்சிகளே இல்லாமல் இப்படம் உள்ளதால் குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
டூரிஸ்ட் பேமிலி படம் பார்த்தேன். ஒருவரை ஒருவர் பார்த்தால் கூட பார்க்காதது போல் திரும்பிகொண்டு செல்வது, பார்த்தும் பார்க்காதது போல் செல்வது, பழகாமல் இருப்பது, நமக்கு ஏன் அவருடன் பழகினால் வம்பு என்று எண்ணுவது, இதனையெல்லாம் இந்தப்படத்தில் கழட்டி தூர வைத்துவிடுங்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டனர்.
படம் ஆரம்பம் முதலே மிகத் தெளிவாக நல்ல விளக்கத்துடன் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாய் தானே என்று நாம் நினைக்காமல் அந்த நாயை மூலமாக மிக அருமையான கருத்துக்களை எடுத்துக்கூறியதுடன் அந்த நாயின் மூலமாக ஒரு குடும்பம் காப்பாற்றப்படுவதையும் , அந்த நாயை படத்தின் முக்கியமான திருப்புமுனையாக மாற்றியுள்ளனர். போலீஸ்காரர் முதலில் உதவி செய்வதும், பிறகு அவரையே அவர் நொந்து கொள்வதும், பிறகு அனைவருடைய கருத்துக்களையும் பார்த்தபிறகு உடனடியாக சிறிதுநேரத்தில் முடிவெடுத்து படத்தின் கதை அமைப்பையே மாற்றி சிந்திக்கும் வகையில் நேரலையாக அமைத்துள்ளனர். ஒரு குடியிருப்பில் உள்ளே மக்கள் எப்படி எல்லாம் இருக்கின்றார்கள் என்ற தகவலை மிகத் தெளிவாக எடுத்துக் காண்பித்துள்ளனர்.
படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் நம்மை உயிரோட்டம் உள்ளதாக தொடர்ந்து வைத்துக் கொண்டே வருகின்றது. திருடன் வந்துவிட்டால் பொதுவாக போலீசை கூப்பிடு, போலீசை கூப்பிடு என்று வரிசையாக கூறும்பொழுது போலீஸ் இன்ஸ்பெக்டரே போலீசை கூப்பிடு என்று கூறுவது இயல்பான விஷயம். அத்தனை தத்ரூபமாக எடுத்துள்ளனர்.
மிகவும் மன வருத்தமான நிலையில் தனது தாயை இழந்த ஒரு மகன் சோகத்தில் குடித்துக் கொண்டே இருப்பதும், பிறகு படத்தின் ஹீரோவால் அவர் அன்பாக கவனிக்கப்படுவதும் மனிதத்தை நிலைநிறுத்துகிறது. படத்தின் ஆரம்பத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் ஏன் இந்த நபருக்கு நாம் உதவி செய்ய வேண்டும், குடித்துவிட்டு தானே கிடக்கிறார் என்று எண்ணுவோம். ஆனால் படத்தின் ஹீரோவை அவரை காப்பாற்றுகின்றார். காப்பாற்றக்கூடிய நபர் பின்னர்தான் அந்த காலனியில் உள்ள உள்ளவர் என்பது தெரியவருகின்றது என்பது நமக்கு மிகப்பெரிய ஆச்சரியம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் முன்பகுதியில் வரும் காட்சிகளை பின்பகுதியில் வரும் காட்சிகளுடன் ஒருங்கிணைத்து உள்ளனர் என்பது மிகப் பெரிய வியப்பான விஷயம்.
பொதுவாக பல திரைப்படங்களில் நாம் என்னும் தகவல்களை அதுவே முடிவாக வரும். ஆனால் இப்படத்தில் நாம் சிந்திப்பது போல் இல்லாமல் நேரலையாக பாசிட்டிவாக பல காட்சிகளை வடிவமைத்து உள்ளனர்.
பொதுவாக நடிகர் சசிகுமார் அவர்களின் கதாபாத்திரம் வெட்டு, குத்து என்று தான் இருக்கும். ஆனால் இந்தப்படத்தில் அது போன்று எதுவுமே இல்லை. குடும்பத்துடன் அனைவரும் திரையரங்கில் அமர்ந்து இயல்பாக சிரித்து மீண்டும், மீண்டும் வீட்டிலும் எண்ணிப் பார்த்து சிரித்து பார்க்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளனர். உண்மையை பேசினால் வேலை என்கிற கருத்தில் சசிகுமாரின் முதலாளி இருக்கின்றார். அது பாராட்டப்பட வேண்டிய ஒரு நல்ல இயல்பான தகவல். இவ்வாறு படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் நாம் மிக அழகாக எடுத்துக் கொள்ளலாம். படத்தின் அனைத்து நடிகர்களும் அவர்களுடைய கதாபாத்திரங்களில் மிக இயல்பாக மிக அழகாக நடித்துள்ளனர்.
காட்சிகளின் அமைப்பு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை அனாதை என்பதையும், அகதி என்பதையும் எடுத்துவிடுங்கள் என்பதை என்று மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றனர். சாதாரணமாக ஹீரோயின் சிம்ரனை பக்கத்து வீட்டு அம்மாள் மங்கையற்கரசி மிக எளிதாக சந்தித்து பேசி விடுகின்றார். கேசவ் குடியிருப்பில் மற்ற யாரும், யாருடனும் பேசுவதில்லை. ஹீரோ சென்ற பிறகுதான் அனைவரையும் ஒன்று சேர்ப்பது போன்ற கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டியது.
நாம் பழகும், வசிக்கும் பல இடங்களில் இந்த படத்தில் வருவது போன்று யாரும்,யாருடனும் பேசாத இயல்பு நிலை தான் இன்றும் தொடர்கின்றது. அதனை மாற்ற கூடிய விதத்தில் இந்தப் படம் அமைந்துள்ளது. நாம் எவ்வளவோ டிவி வந்துவிட்டது, ஹாட்ஸ்டார் வந்துவிட்டது. அதில் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணிக் கொள்கிறோம்.
நாங்கள் நேற்று தியேட்டரில் தான் இந்தப்படத்தை எங்களது குடும்பத்துடன் சென்று கண்டு களித்தோம். தியேட்டர் நிரம்பி வழிந்தது. எந்த விதமான அதிகமான விளம்பரங்களும் இல்லாமல் வாய்வழியாக படம் நன்றாக இருக்கின்றது என்று அனைவரும் கூறுவதன் மூலமாகவே படம் பிரமாண்டமாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
படத்தை எடுத்த இயக்குனர் அவர்களுக்கும், நடிகர்கள் அனைவருக்கும், இயக்குனராகவே இருந்து நடிகராக இருப்பதால் கூடுதலாக தனது நேர்த்தியை காண்பித்துள்ள சசிகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த படம் நன்றாக இருப்பதாக முகநூலில் தோழர் ஆறுமுகம் அவர்கள் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தான் இந்த படத்தை நான் சென்று பார்த்தேன். தோழருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் பார்த்த பல நல்ல படங்களில் இது மிக மிக நல்ல படமாக அமைந்துள்ளது. இதற்காக எனது வாழ்த்துக்கள். மங்கையர்க்கரசியும் அவரது கணவரும் யாரிடமும் பேசாமல் இருந்தாலும், ஹீரோவும் ஹீரோயினும் மிக இயல்பாக அவர்களுடன் கலந்து பேசி அப்பா , அம்மா என்று பாசத்தின் மூலமாக அவர்களை தங்கள் நட்பு வட்டத்துக்குள் கொண்டு வருவது மிகவும் பிடித்திருந்தது.
மங்கையர்க்கரசி என் கணவர் இறந்து விட்டார் என்று எண்ணி மங்கையர்கரசி அம்மா இறந்து விடுவது தான் படத்தின் ட்விஸ்ட். ஆனால் அதுதான் இயல்பு என்பதை யதார்த்தமாக எடுத்துக் கூறியுள்ளனர். குட்டிப் பையனாக வரும் நடிகர் மிக அருமையாக நடித்துள்ளார். பல இடங்களில் அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
யோகிபாபு அதிகமான நேரம் படத்தில் வரவில்லை என்றாலும் சில முக்கிய இடங்களில் வந்து சரியான தகவல்களை எடுத்துச் சொல்லி செல்கிறார். உண்மையில் எப்பொழுதுமே நாம் உண்மையை பேசுவதும் அதனுடன் இயல்பாக அனைவருடனும் அன்பாக மனிதநேயத்துடன் பழகுவதும் மிக மிக முக்கியம் என்பதை இந்தப்படம் வலியுறுத்தி செல்கின்றது.
மகன், அப்பாவை பார்த்து வருத்தப்படுவதும், அப்பா மகனுக்குள் உள்ள பூசல்களை இயல்பாக மனம் விட்டு பேசி தீர்த்து கொள்வதும், ஆங்காங்கே ஜாலியாக பேசி கொள்வதும் மிக அருமை.படம் முழுவதுமே நல்ல முறையில் கருத்துடனும், நகைச்சுவை உணர்வுடனும் நகர்த்தி செல்கின்றனர். சண்டை காட்சிகளே இல்லாமல் எடுத்துள்ளது பாராட்டப்படவேண்டியது.
அனைவருடனும் அன்புடனும் பண்பாக பழகினால் மட்டுமே நாம் இயல்பாக இருக்க முடியும். நீண்டகாலம் நம்முடைய வாழ்க்கையும் இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். அனாதை என்ற ஒருவர் கிடையாது. நாம் பழகும் விதத்தில் தான் அவை அனைத்தும் இருக்கின்றது என்பதையும் எடுத்துச் சொல்கின்றனர். குடிகாரராக வரும் கதா பாத்திரம் மிக இயல்பாக அந்த தகவல்களை நமக்கு எடுத்துச் சொல்லிவிடுகிறது.
போலீஸ்காரர்கள் நல்லவரும் உள்ளார்கள், கெட்டவர்களும் உள்ளார்கள் என்பதையும் மிக அழுத்தமாக திருத்தமாக இந்தப்படத்தில் எடுத்து காண்பித்துள்ளனர்.மொத்தத்தில் படத்தின் வாயிலாக பல்வேறு விதமான மனித நேய தகவல்களை இந்த சமுதாயத்திற்கு சொல்லி செல்கின்றனர்.
மனிதம் வாழ வேண்டும், மனிதம் அனைவரிடமும் வர வேண்டும் ,நாம் எதிர்பார்க்கும் நபர்களையும் நண்பர்களாக பழகி நாம் நமது நட்பு வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை மிக அழகாக கதை முழுவதுமாக காட்சிகளை வைத்து நகர்த்தி உள்ளார்கள். மீண்டும் ஒருமுறை படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!
மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்!
{{comments.comment}}