அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

Sep 15, 2026,10:43 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள், 

அள்ளிப் பருகிட இதமானவள், 


கிள்ளிப்போட்டால் அள்ளிக் கொடுப்பாள், 

தள்ளி நின்றாலும் மணத்தால் கவருவாள்,


இதழை சுவைக்கும் இன்பமவள்,

நாணலாக தென்றலுடன் நடனமாடுபவள்,


நடுத்தர குடும்பங்களின் சொந்தமவள்,

நாடு விட்டு நாடு செல்பவள்,




நயவஞ்சகமற்றவள் நாணயமானவள் நாவில் நிற்பவள், 


காலையும் மாலையும் முத்தமிட மறக்க மாட்டாள்,

கொஞ்சி பேசிட விஞ்சி உயிருக்குள் உறவாடுவாள்,


உணர்வினை உதிரத்தில் தூண்டுவாள், 

உதிரத்தில் உறைந்து உற்சாகமும் தருவாள்,


உவமையென்று யாருடனும் ஒப்பிட முடியாது, 

அவளின் உன்னத செயலுக்கு இணையேது,


வளைந்தாடும் நளினக்காரி,

 வானம் பார்க்கும் மாயக்காரி, 


மேகமழைக் கொட்ட மெய்சிலிர்க்க வைக்கும் மோகக்காரி, 

தேகத்தை உருக்கி தேவையற்றதை நீக்கும் வித்தைக்காரி, 


தாகம் என்று சொல்ல வேகத்தைக் கூட்டும் மூளைக்காரி, 

பச்சையத்தில் உருமாறிய தேயிலையெனும் இச்சையான நாமக்காரி,


விடியலில் கண் தேடும் கயல்விழி,

அவளை ருசித்திட மாயமாய் போகும் உடல் வலி, 


இன்னும் சொல்லவா இவளை அல்லவா 

மலையகமும் வாழ்ந்திடும் வாழ்க்கையும் இவள் தந்தது அல்லவா......

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்