அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

Sep 14, 2026,01:51 PM IST

- நவீன் ஸ்ரீதர்.வி


உலகில் பல்வேறு தேசங்களும் இனங்களும் இருப்பினும் அதில் தொன்று தொட்டு சிறப்பாக திகழ்ந்து வருவது பாரத தேசமும் தமிழினமுமே! 


பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களுள் மட்டுமல்லாது உலகின் மிகவும் தொன்மையான அரச குடியாகவும்  பாண்டியர் குலமே திகழ்கிறது. 


"பாண்டிய நாடே பழம்பதியாகவும்" என்று மாணிக்கவாசகர் இதையே கூறுகிறார். பாண்டியர்களுக்கு பல்வேறு சிறப்புகள் இருப்பினும் அவற்றுள் முத்தாய்ப்பான  மணிமகுடம் போல் திகழ்பவர்கள்  அன்னை "தடாதகை" எனப்படும் மீனாட்சி அம்பிகையும், அவளை கரம் பிடித்து பாண்டிய நாட்டை ஆண்ட சுந்தரேசரான, சொக்கநாதப் பெருமானுமே ஆவர். 


சகல புவனங்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் ஆதிபராசக்தி தான் ஒரு மானிட பெண்ணாக சில இடங்களில் அவதரித்தாலும் அவற்றுள் மிகவும் சிறப்பானது அவள் தடாதகை என்ற திருநாமம் கொண்டு அவதரித்த மதுரை திருத்தலமே!  மதுரைக்கு இருக்கும் சிறப்புகள்  வேறு எந்த நகரத்திற்கும் இல்லை. அரசு, ஆன்மீகம், தமிழ்,பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, வரலாற்று சிறப்பு,வீரம் முதல் விருந்து வரை இந்நகரில் தழைத்தோங்காதது எதுவும் இல்லை. 




அம்பிகை ஒரு பெண் இளவரசியாக அக்கினியிலே அவதரித்து அவணி (உலகம்) ஆளும் பேரரசியாக முடிசூடி தேவர்கள் முதல் சகலரையும் வென்றும் ஈசனின் மனதையும் வென்றும் அவள் பாதம் பதிய நடந்த ஊர் மதுரை ஆகும்.  சிவபெருமானும் சுயம்பு லிங்கமாக, மாப்பிள்ளையாக , அரசராக, விறகு சுமப்பவராக , போர் வீரராக, வளையல் வியாபாரியாக, கூலி தொழிலாளியாக, எல்லாம் வல்ல சித்தராக, சாட்சிசொல்பவராக, குதிரை வியாபாரியாக, பாடகராக என பல வடிவங்களில் வந்து தன் பாதங்களால் புனிதப்படுத்தியது இந்த மதுரை மாநகரத்தைத்  தான்.


திருமாலும்,பிரம்மனும் காண முடியாத ஈசனின் அடியையும் முடியையும் கண்டது இந்த மதுரை மண் தான். ஆம்! இதே மண்ணில் தான் ஈசன் தன் பாதங்கள் பதிய நடக்கிறார், இதே மண்ணை தான் தன் தலையிலும் சுமக்கிறார். இப்படியாக இறைவனால் பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற நகரம் மதுரை. மேலும் முன் தோன்றிய மூத்த சுயம்புலிங்கமாக சொக்கநாதர் திகழ்வதும், 64 திருவிளையாடல்கள் (சொக்கநாதரின் அருளாடல்கள் அளவற்றவை!) நிகழ்த்தி சங்கம் வைத்து தமிழ் வளர்க்க காரணமாகவும், எம்பெருமான் தானே புலவராக வந்த பெருமையும் என மதுரை தலத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். 


ஒரே தலத்தில் சிவபெருமானும் அம்பிகையும் சுயம்புவாய் எழுந்தருளி இன்றும்  சாதி,மத பேதங்களைக் கடந்து மக்கள் மனதில் ஆட்சி புரிகின்றனர் என்றால் அது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மட்டுமே! உலகின் முதல் சுயம்பு லிங்கமாக மதுரை சொக்கலிங்கத்தை போற்றுகிறது  "ஹாலாஸ்ய மகாத்மியம்", மேலும் அப்பர் பாடிய தேவாரத்திலும் கூட  "முளைத்தானே எல்லோர்க்கும் முன்னே தோன்றி" என்று இத்தல இறைவனான சோம சுந்தரரே முதலில் தோன்றிய சுயம்பு மூர்த்தி எனப்பாடுகிறார்.


அனைத்து கலைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரே சமஷ்டி லிங்கமாக மதுரை சொக்கலிங்கரே திகழ்கிறார். மேலும் இறைவன் தானே சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகப் பாசுரத்தில் "ஆலவாயில் மண்ணிய சிவன்யான்" என்று "ஆலவாய்" எனப்படும் மதுரையில் நிலைத்திருக்கக்  கூடியவன் நான் என்று தானே  கைப்பட எழுதியுள்ளார். மேலும் போகர் சித்தர் எழுதிய "சப்த காண்டம்" எனப்படும் போகர் 7000 நூலில், தான் கயிலையில் சிவபெருமானிடம் அவர் விரும்பி உறையும் மிக உன்னதமான தலம் எது என்று பணிவுடன் கேட்ட போது சிவபெருமானே மதுரையை சொன்னதாக "மானான மகாதேவர் மதுரையைத் தான் மகத்தான தலம் என்று மதிப்பிட்டாரே" என்று குறிப்பிட்டுள்ளார்.




இப்படியாக ஆறு ஆதார தலங்கள், அதற்கும் மேலான சகஸ்ராரத்தின் தலமான கயிலாயத்துக்கும் மேலான துவாத சாந்தத்தின் தலமாக மதுரையை திகழ்கிறது . மதுரை கோவிலிலேயே வரகுண பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் கயிலை காட்சியைத் தருகிறார். அனைத்து சிவாலய மூர்த்திகளும் பள்ளியறை பூஜையில் மதுரை சொக்கநாதருள் அடங்குவதாக ஐதீகம் உண்டு, அதேபோல் எல்லா பழங்கால சிவாலயங்களிலும்  பள்ளியறை மூர்த்தியின் பெயர் "சொக்கர்" என்று விளங்குவதும் இதற்கு சான்று. எனில் மதுரை சொக்கநாதப் பெருமானை வணங்கினாலே கயிலை முதலாய அனைத்து சிவாலய மூர்த்திகளையும் வணங்கியதற்கு சமம்! 


"அளவில்லாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனை தென்கூடல் திருஆலவாய் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே" என்று அளவற்ற பல ஊழிக்காலங்களை கண்டும் நிலைத்திருக்கும் மதுரை சொக்கநாதரின் திருவடிகளை போற்றுகிறது தேவாரம். இதன்மூலமாக இத்தல இறைவன் எத்துனை பழமையானவர் என்று அறிய முடிகிறது! 


அம்பிகையின் ஆலயங்களை பட்டியலிட்டாலே முதலில் தொடங்குவதே மதுரை மீனாட்சியிடமிருந்து தான்! மீனாட்சி அம்பிகை தடாதகை என்ற நாமம் தரித்து யாக அக்கினியில் இருந்து உதித்து இங்கு அவதரிப்பதற்கு முன்பே இங்கே சக்தி பீடமாக அம்பிகை எழுந்தருளி இருந்தாள் என்றும், அதையே தன் முற்பிறவியில் வழிபட்டு தவம் செய்த கந்தர்வப்

பெண்ணான வித்யாவதி மறுபிறவியில் காஞ்சனமாலை என்ற பெயரில், பாண்டிய அரசியாகவும், தடாதகையின் தாயாகவும் திகழ்ந்தார் என்று ஹாலாஸ்ய மகாத்மியம்,கல்லாடம், வேம்புலிபுத்தூரார் திருவிளையாடல் புராணம் முதற்கொண்டு பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் வரை கூறப்பட்டுள்ளது.


எனில் மீனாட்சி இங்கு அவதரிப்பதற்கு முன்பே இங்கே சிவமும் சக்தியும் சுயம்புவாக தோன்றிவிட்டது என்பதை உறுதியாக அறியலாம்! தடாதகை என்ற பெயரில் அம்பிகை அவதரித்து, தவழ்ந்து,விளையாடி மகிழ்ந்து, அரசியாக பட்டம் தரித்து, போர் புரிந்து ,சிவபெருமானை கரம் பற்றி, அரசாட்சி செய்து பின்னர் தானே மரகத திருமேனியாய் நின்று அன்று முதல் இன்று வரை அருள் புரியும் ஒரே திருத்தலம் இந்த கடம்பவனமான மதுரை திருத்தலம் மட்டுமே!

மேலும் சக்தி பீடங்களில் சிறந்த "மனோன்மணி பீடம்" என்றும் "கடம்பவன பீடம்" என்றும் இத்தலம் போற்றப்படுகிறது. 


வேறு எந்த தலத்திலும் இல்லாத வகையில் இத்தலத்தில் மட்டுமே அன்னை மீனாட்சியிடம் இருந்து ஒவ்வொரு கால பூஜையிலும் "ஸ்ரீ வித்யை" எனப்படும் அம்பிகை உபாசனை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள ஆதிபராசக்தியின் உயரிய வடிவங்களின் ஆற்றலானது வெளிப்படுகிறது. 


அவை, 


திருவனந்தல்-மகாஷோடசி ;

விளாபூஜை - பாலாம்பிகை;

காலசந்தி - புவனேஸ்வரி;

த்ரிகாலசந்தி - கௌரி;

உச்சிக்காலம் - சியாமளை;

சாயரட்சை - மாதங்கி ;

அர்த்தஜாமம் - பஞ்சதசாக்ஷரி;

பள்ளியறை பூஜை - ஷோடசி  என்பவை ஆகும். 




சங்கப் புலவர்கள், அம்பிகை உபாசகர்கள், ஆதிசங்கரர், அகத்தியர் முதலான முனிவர்கள் என பலரும் இத்தல இறைவியான அன்னை மீனாட்சியை போற்றி வணங்கியுள்ளனர்.  சிலப்பதிகாரத்தில் "நாமகளும் மாமகளும் மாமகிடன் செற்றுகந்த கோமகளைத்  தான்படைத்த கொற்றத்தாள்" என்று கலைமகளான சரஸ்வதி, அலைமகளான மகா லட்சுமி, மகிடன் தலைகொய்த துர்க்கை ஆகியவர்களை படைத்த ஆதிபராசக்தி என்று "மதுராபதி தெய்வம்" எனக்  குறிப்பிட்டு அன்னை மீனாட்சியை போற்றுகிறார் இளங்கோவடிகள்.


மீனாட்சி தன்னிகரற்ற கருணாகரி! தன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய குமரகுருபரர்க்கு நேரில் வந்து முத்துமாலை பரிசு தந்தது, தன்மீது கீர்த்தனைகள் பாடிய சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு முக்தி தந்தது, "மீனாட்சி கலிவெண்பா" பாடிய சிதம்பரம் சுவாமிகளுக்கு காட்சி தந்து வேல் தந்து இன்று திருப்போரூர் முருகன் ஆலயத்தை மீட்டுருவாக்கம் செய்தது முதல் மதுரை கோவில் வடக்கு கோபுரத்தை முழுமையாக கட்டி முடித்த நாகப்பன் செட்டியாருக்கு நேரில் காட்சி தந்து  தன் அர்த்தஜாம பிரசாதத்தை தந்தது வரை என அன்னை மீனாட்சி நிகழ்த்திய அற்புதங்களை பட்டியலில் அடக்க முடியாது! 


இவ்வளவு ஏன் முகலாயர்களும் ஒரு காலகட்டத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அடிபணிந்து "முகலாய கிரீடம்" காணிக்கை தந்துள்ளனர். ஆங்கிலேய கலெக்டர் ரோஸ் பீட்டர் காணிக்கை செலுத்திய, ரத்தினங்கள் இழைத்த தங்க பாத அங்கவடிகளும் இன்றும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட  பெரும் மதிப்பு மிக்க பொருட்களில் சகல மரியாதையுடன் மீண்டும் இந்தியாவிற்கு பிரிட்டன் பேரரசே அனுப்பி வைத்தது மதுரை மீனாட்சி அம்மனின் நீலநாயகப் பதக்கம் மட்டுமே. அதற்கு பிராயச்சித்தம் வேண்டி இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் தங்க காசுமாலையை மீனாட்சி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினார். 


இப்படியாக இந்நாட்டை ஆண்ட பண்டைய  மன்னர்களும்; முகலாயர்களும்; சூரிய அஸ்தமனமே கண்டிராத அப்போதைய பிரிட்டானிய பேரரசும் அடிபணிந்து வணங்கியது மீனாட்சி சுந்தரேஸ்வரிடம் மட்டுமே! இப்படியாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் பெருமை அளவிடற்கரியது! அம்மையும் அப்பனும் விரும்பி உறைந்து தன் பக்தர்களுக்கு அருளும் தன்னிகரற்ற தலமாக மதுரைத் திருத்தலம் திகழ்கிறது. 


மீனாக்ஷீம்!!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்