கலைஞர் நாணயத்தில் ஏன் இந்தி.. என்ன ஆச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு?.. ஆ. ராசா கேட்ட கேள்வி!

Aug 19, 2024,08:54 AM IST

சென்னை: முன்னாள் முதல்வர், மறைந்த கலைஞர் கருணாநிதியைக் கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள 100 ரூபாய் நாணயத்தில் இந்தி இடம் பெற்றுள்ளதே என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ள கேள்விக்கு, என்னாச்சு எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று கேட்டு பதில் அளித்துள்ளார் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா.


இதுதொடர்பாக ஆ. ராசா விடுத்துள்ள அறிக்கை:


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து  கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?




கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்‘ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.  


எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத்  திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?


உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.  


ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின்  தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.


அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம்  அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது என்று கூறியுள்ளார் ஆ.ராசா.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்