கணையாழி – ஒரு கிராமத்தின் உயிர்

Nov 10, 2026,03:36 PM IST

- சு.மலர்விழி, மதுரை


கணையாழி அந்தக் கிராமத்தின் அனைவருக்கும் அவசியமானவள். அவளுடைய உண்மையான பெயர் கலைவாணி. சிறுவர், சிறுமியர் அவளை மழலை மொழியில் கணையாழி என்று அழைத்தனர். நாளடைவில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. 


ஏழு வயதில் தாயை இழந்த பின் அவளது தந்தை வேறு ஊருக்கு சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கணையாழியின் பள்ளி செல்லும் கனவு தடைபட்டது.அவளது தந்தை கணையாழியைப் பற்றி நினைப்பது இல்லை என்பதால் அவள், ஊர் மக்கள் அளித்த ஆதரவால் வளர்ந்தாள். அவர்கள் கொடுத்த வேலைகளைச் செய்து, வழங்கிய உணவை உண்டு வாழ்ந்து வந்தாள். பணத்தை  எதிர்பார்க்காமல், அன்பிற்காக மட்டுமே உழைத்ததால் அவ்வூர் மக்கள் அனைவரும் அவளை அன்புடன் கவனித்துக் கொண்டனர்.


கணையாழியின் வாழ்க்கை எளிமையானது. காலையில் எழுந்தவுடன் யாராவது வீட்டிற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அழைத்தால், உடனே சென்று உதவுவாள். வயலில் களை எடுப்பது, வீட்டில் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, முதியவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என அவளுடைய நாட்கள் கழிந்தன. அவள் உழைப்புக்குப் பதிலாகக் கிடைக்கும் உணவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாள்.




ஊரிலுள்ள குழந்தைகள் அவளை மிகவும் விரும்பினர். அவர்களுடன் விளையாடுவதும், கதைகள் சொல்லுவதும், அவர்களுக்குச் சிறிய உதவிகள் செய்வதும் அவளுக்குப் பிடித்தமானவை. யாராவது பசியுடன் இருந்தால், தன்னிடம் இருக்கும் உணவைக்கூடப் பகிர்ந்து கொடுப்பாள். ஒருநாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பணம் நிறைந்த பை ஒன்றைக் கண்டாள். அதை உரியவரிடம் ஒப்படைத்தபோது, அவளுடைய நேர்மையைக் கண்டு ஊர் மக்கள் வியந்தனர்.


கணையாழி மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்ந்தாலும், அவளுடைய வாழ்க்கையைப் பற்றி யாரும் அதிகமாகச் சிந்தித்ததில்லை. ஒருநாள் ஊருக்கு வந்த புதிய ஆசிரியர் அவளுடைய வாழ்க்கையை அறிந்தார். அவளுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதையும் தெரிந்துகொண்டார். மாலை நேரங்களில் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். கணையாழியின் மனதில் மறைந்திருந்த படிக்க வேண்டும் என்ற கனவு மீண்டும் மலர்ந்தது.


(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்