சென்னை: அனுமதி தராவிட்டால் அதில் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை:
கரூர் சம்பவத்தில் தமிழ்நாடே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அரசியல் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. பேரிடரிலுமா செய்ய வேண்டும்?
’முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு, காவல்துறை தந்திருக்க வேண்டும்’ என்கிறார் பழனிசாமி. முந்தைய கூட்டங்களிலிருந்து ஆய்வு செய்த பிறகுதான் அதற்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் காவல் துறை போட்டது. உடனே நீதிமன்றத்திற்குச் சென்று தவெகவினர் முறையிட்டார்கள்.
திருச்சி பிரச்சாரத்துக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். த.வெ.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ’’எந்த வழியாக சென்னை திரும்ப வேண்டும். எத்தனை வாகனங்கள் வர வேண்டும் என்றெல்லாம் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் த.வெ.க.வுக்கு விதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என நாங்கள் எப்படிச் சொல்ல முடியும்?’’ எனக் கேள்வி எழுப்பினார். விஜய் பிரசாரத்திற்கு வருபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு எப்படியெல்லாம் முயன்றது என இதில் இருந்தே பழனிசாமி தெரிந்து கொள்ளலாம்.
இந்த விஷயங்கள் எதையும் அறிந்து கொள்ளாமல் எதிர்க் கட்சித் தலைவர் உளறிக் கொட்டியிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதனையும் தவெக பிரசாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க் கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டது.
சாலைகளில் பிரசார வேனில் நடக்கும் கூட்டங்களில் இதுவரை தமிழ்நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்த வரலாறு இல்லை. நடுரோட்டில் பஸ்ஸை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்திற்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டர்களை மட்டுமல்ல.. ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான். ’’ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார்’’ என பழனிசாமி சொன்ன பிறகுதான் அவருடைய கூட்டங்களில் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர்.
பழனிசாமி போட்ட புதிய அரசியல் எண்ணத்திற்கு ஆட்பட்டுத்தான், தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது அதை அனுமதிக்க மறுத்து, தாக்குதல் நடத்தினார்கள் தவெக தொண்டர்கள். தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய பழனிசாமியும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர்தான்.
காவல்துறை விதித்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவம் இது. சம்பவம் நடந்த உடனேயே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துரிதமாகக் களத்தில் இறங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அமைச்சர்களை கரூருக்கு அனுப்பினார்; உடனடியாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து நிவாரண உதவிகளையும் விசாரணை ஆணையத்தையும் அமைத்தார். நள்ளிரவிலும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் உடன் இருக்கிறார். திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. துபாயிலிருந்து துணை முதல்வர் உதயநிதி அவசரமாகத் தமிழ்நாடு திரும்புகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த பழனிசாமியை போல் இல்லாமல், உடனே களத்தில் இறங்கிச் செயல்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், பழனிசாமியோ சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் முதலமைச்சர் மீதும் காவல்துறை மீதும் பழி போடுகிறார்.
அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது. நகருக்கு வெளியே பிரசாரத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்று காவல்துறை கேட்டுக் கொண்டால், முடியாது நாங்கள் கூட்டத்தைக் காட்டுவதற்கு முட்டுச் சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி போன்றவர்களின் கேவலமான அரசியலாக இருக்கிறது.
தவெக கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு காவல்துறையால் வழங்கப்பட்டது. அதனை தவெக தலைவர் விஜய்யே பிரசாரத்தில் ஒப்புக்கொண்டு பேசும் காட்சியை எல்லாம், வழக்கம் போலவே டிவியில் பார்க்கும் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா?
ஆளுங்கட்சியின் மீது பழி போடவும் அரசியல் செய்யவும் எந்தக் காரணமும் இல்லை என்றால் மக்களுடன் நின்று மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலைச் செய்யுங்கள். அதை விடுத்து இதுபோன்ற மோசமான நாடகங்களை அரங்கேற்றி அவற்றுக்கு ஆளுங்கட்சியின் மீது பழி போட்டு அரசியல் செய்வது மனசாட்சியே கிஞ்சித்தும் இல்லாதவர்கள் செய்யும் செயல். மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிராதது. எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும் , கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம் என்று கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. நாளை மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை
கரூர் துயரம்.. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
கரூர் துயரத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம்.. விஜய் அறிவிப்பு
Karur Stampede: புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. உள்பட 4 பேர் மீது வழக்கு!
Karur Tragedy: கரூர் கண்ணீருக்கு யார் காரணம்? .. இந்தக் கொடுமையெல்லாம் இனியாவது மாறுமா?
கரூர் துயரம்.. விஜய்க்கு இது பெரும் பாடம்.. இனியும் சுதாரிக்காவிட்டால் எல்லாமே கஷ்டம்!
விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்.. கூட்டத்துக்கு டைமுக்கு அவர் வர வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்
கரூர் துயரம்.. அரசும், காவல்துறையும் கடமையிலிருந்து தவறி விட்டன.. எடப்பாடி பழனிச்சாமி
மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது தவெக.. அதனை அதிமுக ஆதரிக்கிறது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்
{{comments.comment}}