- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
பனி கொட்டும் ஒரு மார்கழி மாதத்தின் வைகறையில் தான் மனைவி அவளை பார்த்திருந்தாள்!
பனியும் குளிரும் படுத்திய பாட்டில், ' வீங்...வீங்...' என்று அவள் கேட்டுக்கு வெளியே கத்திய கத்தலில், மனம் இரக்கப்பட்ட மனைவி வந்து பார்க்கும்போது, அவள் சேரும் சகதியுமாய் குளிரில் வெட வெடத்துக் கொண்டிருந்தாள்!
ஆணா பெண்ணா என்று தூக்கிப் பார்க்க, பெண் என்றதும் மனைவிக்கு போனஸ் உற்சாகம். தாய்மையை தாய்மை தானே அறியும்!
அள்ளிக் கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து, ராஜ உபச்சாரம் பண்ணி விட்டாள்.
கூட்டத்தைப் பிரிந்து, வழி தெரியாமல் வந்து விட்டதோ இல்லை, பராமரிக்க இயலாதவர்கள் வீதியில் வீசி விட்டார்களோ? தெரியவில்லை! செவலையும் வெள்ளை நிறமும் கலந்த கலவை. சற்று குள்ளி! பார்ப்பதற்கு கொஞ்சம் விசித்திரமாய் இருந்தாள்.அது தான் எனக்கு டக்கென்று பிடித்துப் போனது. அன்றிலிருந்து வீடு மேலும் கலகலப்பாகியது. நாய்க்கும் எனக்கும் ரொம்ப தூரம்.
பிடிக்காது என்று சொல்வதற்கு இல்லை... பெரிதாக நெருக்கம் காட்ட மாட்டேன். ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்வது மாதிரி, ஒட்டியும் ஒட்டாததுமான ஒரு உறவு. நண்பர்கள் சிலரும் டாக் லவ்வர்ஸ் தான். எப்போதாவது செல்லும்போது ஏதாவது வாங்கி போய் கொடுப்பது வழக்கம். எனக்கும் நாய்க்குமான வரலாறு புவியியல் எல்லாம் அவ்வளவுதான். குள்ளி வந்த பிறகு நிறைய மாற்றம் நிகழ்ந்தது.

கடைக்கு சென்று திரும்பும்போது, பேண்ட் சட்டை என்று தன் அழுக்கு கால்களால் அழுக்கு பண்ணி விடுவாள். அதட்டினால் முகம் சுருங்கி போய்விடும்.ரொம்பவும் சென்சிடிவ் டைப். ஆனால் கெட்டிகாரி! மெமரி பவர் ஜாஸ்தி. ஒரு முறை பார்த்து விட்டால் அடுத்த முறை வால் தானாகவே ஆடும்! சிறு சலசலப்பு என்றாலும் காதுகள் விறைத்து,கவனத்துக்கு வந்து விடுவாள்!
மனைவியின் நெளிவு சுளிவான கோலத்தையும், மனைவியின் நெளிவு சுளிவையும் ரசித்துக்கொண்டிருந்த நான்... மனைவியைப் பார்த்து கேட்டேன்.
" ஏன்டிம்மா... போன வருஷம் இதே மார்கழி மாசத்துல தானே குள்ளி நம்ம வீட்டுக்கு வந்தா? "
" ஆமாங்க... எனக்கும் நினைவே இல்லை. ஒரு வருஷம் ஓடிப்போச்சு பாருங்க.. "
" இந்த சினை பிடிக்கிற சமாச்சாரம் எல்லாம் எப்ப நடக்கும்? "
" அவளுக்குத்தான் இப்ப ஒரு வயசு ஆயிடுச்சே...இந்த நேரம் குட்டி போட்டு இருக்கணும். அவ என்னமோ இப்படி இருக்குறா... கொஞ்ச நாள் பார்க்கலாம் இல்லன்னா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம்.. "
மனைவி சொல்லிக் கொண்டே கோலமிட்டு முடித்து, மாவுக் கிண்ணத்தோடு நிமிர்ந்து, இடுப்பு முறித்தாள்!
" நீ போடுற கோலத்துக்கு எறும்பு கூட்டம் வருமா?இல்ல கல்லு மாவா ? "
"ம்ம்ம்... கல்லுமா கோலம் போடுறதுக்கு நான் என்ன கல்லு மனசு காரியா?"
குறும்புக்காரி ஒரு குறும்பு கோபம் காட்டினாள்.
அது ஒரு கோவில் கோலம். அது எப்படித்தான் இந்தப் பெண்கள் எந்தவித பயிற்சியும் இல்லாமல் இப்படி விதவிதமாக கோலமிடுகிறார்களோ?!
தண்ணீர் குடத்தை மடக்கென்று தூக்கி இடுப்பில் வைப்பது கூட ஒரு கலை நயம் தான்!
" நல்லா இருக்கு" என்றேன்.
" கோலமா? " என்றாள்.
" எல்லாம் தான்.." என்றேன்.
" காலையிலேயே கிளுகிளுப்பு கேக்குதா? "
சொல்லிக்கொண்டே 'நங்'கென்று செல்லமாய் ஒரு குட்டு. வீட்டுக்குள் ஓடிப் போனாள்!
மென்மையா வன்மையா? இந்த வலி வலிக்கிறது...!
ஒரு வாரம் ஓடிப்போய் இருந்தது. ஒரு அரசியல் இஸ்ஸுக்காக இன்று முழு கடையடைப்பு போராட்டம். வீட்டில் நான் மட்டும் விச்சிராந்தியாய் உட்கார்ந்து வீதியை வெறித்துக் கொண்டிருந்தேன். மனைவி அம்மா வீட்டுக்கு போயிருந்தாள்.
போர் அடித்தது. குள்ளச்சியை தேடினேன். கொஞ்சிக் கொண்டாவது பொழுதைப் போக்கலாம்...! ஆனால் அவள் ஆளையே காணோம். அவளுக்கு ஊர் சுற்றுவது பிடிக்காது. அவள் ஒரு தொட்டில் குழந்தைமாதிரி ---வீட்டு குழந்தை! அப்படிப்பட்டவள் இப்போது எங்கு போய்விட்டாள்?
" குள்ளி... குள்ளி... "
வாசல் இறங்கி வந்து ஓங்கி குரல் கொடுத்தேன். வீட்டின் இடது புறம், ஜாதிமல்லி பூச்செடி, ஒரு காய்ந்து போன மரத்தைச் சுற்றி, பெரிய குத்து செடியை போல், நான்கு புறமும் நெருக்கி அடித்து இடைவெளி இல்லாமல் படர்ந்து இருந்தது! அதற்குள் ஒரு அசைவு.
" குள்ளி..!"
என்று நான் மீண்டும் குரல் உயர்த்த, செடியை விலக்கி வாலை ஆட்டிக் கொண்டு வந்தாள் குள்ளி!
ஆனால் முகத்தில் வழக்கமான அந்த உற்சாகமில்லை. ஆனாலும் ஒரு தேஜஸ் தெரிந்தது. எனக்கு பக் என்று இருந்தது.
'சரி, மனைவி வந்ததும் கேட்டுக்கலாம்.... இல்லனா மெடிக்கல் போய் மாத்திரை மருந்து வாங்கி போடலாம் '
எண்ணமிட்டவாறே திண்ணையில் அமர்ந்தேன்.அவளும் என் காலடியில் வந்து படுத்துக்கொண்டாள்.
வணிகர் சங்க அவசர மீட்டிங் க்கு சென்று விட்டதால் அன்று முழுவதும் குள்ளியை மறந்தே விட்டேன். அடுத்த நாள் காலையில் தான் குள்ளி நினைப்பே வந்தது.
" ஏன்டி அம்மு... மறந்தே போயிட்டேன்... குள்ளி சாப்பிட்டாளா ? என்னன்னே தெரியல சோகமா கிடக்குறா. மனசுக்கு சரியில்ல...!"
" அச்சச்சோ... ஆமாங்க நானும் சொல்ல மறந்தே போயிட்டேன். குள்ளி இப்போ ஜெஸ்டேஷன் ல இருக்கிறாங்க. உங்க வாய்க்கு நாய் பிஸ்கட் தான் போடணும்...!"
" என்னது நாய் பிஸ்கட்டா? நான் என்ன கேட்கிறேன்? நீ என்ன பேசுற!"
" போங்க மக்கு மாமா... உங்களுக்கு ஒண்ணுமே தெரியல. அவ இப்போ மாசமா இருக்கா. மொத தடவை இல்லையா...அதான் முகத்துல சின்ன களைப்பு தெரியுது. அவ நார்மலா தான் இருக்குறா. நீங்க ஒன்னும் அலட்டிக்க வேண்டாம்... "
" அப்படியா! இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?நீ பயங்கரமான ஆளா இருக்கிறே..!"
" நானும் ரெண்டு பிள்ளை பெத்து இருக்கேன். தாய் அறியாத சூலா? "
சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்து, பார்த்தாலே ஒரு பார்வை...அந்தப் பார்வைக்கு கோடிகள் கொடுக்கலாம்..! என் மனைவி என் வரம். என் குறைகளை கூட நிறை ஆக்கும் நிறைகுடம்!
" சரி,அப்போ டெலிவரி டேட்? அதையும் அப்படியே சொல்லிடு.. "
" பொசிஷன் பார்த்தா இன்னும் பத்து நாள் தாண்டாது என்று நினைக்கிறேன்... "
" ஓகே நான் காத்திருக்கிறேன்...!" சொல்லிவிட்டு நான் கடைக்கு கிளம்பி விட்டேன்.
மனைவி சொல் மந்திரம் தான். அன்றிலிருந்து சரியாக ஒன்பதாவது நாள் குட்டி போட்டாள் குள்ளி! முத்தான மூன்று குட்டிகள் முதல் வரவு. இபி பாக்ஸ் சன் ஷேடுக்கு அருகில், கும்பலான செடிகளுக்கு மத்தியில் மிகப் பாதுகாப்போடு குழந்தைகளை குடி வைத்திருந்தாள்!
எனக்கு பார்க்க பார்க்க ஆசையா இருந்தது. குட்டிகளுக்கு பால் சொரிந்து விட்டு குள்ளி எங்கோ பக்கத்தில் போயிருந்தாள். நான் குட்டிகளை தொட்டு தொட்டு, சிறுபிள்ளையாய் விளையாடிக் கொண்டிருந்தேன். சூழல் மறந்து,சுற்றம் மறந்து குட்டிகளுடன் நான் குதுகுலித்துக் கொண்டிருக்கும் போது... பின்னால் இருந்து ஒரு உறுமல் சத்தம் என்னை திடுக்கிட வைத்தது!
சட்டென திரும்பி பார்க்க குள்ளி நின்று இருந்தாள்! ஆனால் உறுமல் நின்றபாடில்லை! அவள் முகத்தில் தெரிந்தது கோபமா? இல்லை விரோதமா? எதுவும் தெரியவில்லை! இதற்கு மேலும் இங்கு நிற்பது சரியில்லை. இடத்தை காலி பண்ணி, வீட்டுக்குள் வந்து மனைவியிடம் பார்த்ததை படபடத்தேன்!
" ப்பூ... இவ்வளவுதானா? பயப்படறதுக்கு எல்லாம் ஒன்னும் இல்லைங்க.அவளுக்கு இதுதான் தல பிரசவம். அப்படித்தான் அவ நெர்வஸா இருப்பா."
"அதாவது நீங்க அவ பிள்ளைகளை தூக்கிட்டு போயிடுவிங்கனு அவளுக்கு பயம். அதான் இந்த பம்மாத்து வேலை எல்லாம் காட்டுறா...! கோபப்படுற மாதிரி...! எல்லாமே நடிப்புதான்...!"
"ஆனால் அறிமுகம் இல்லாத ஆளுங்கன்னா கொஞ்சம் ஆபத்து தான்...!"
நான் ஆச்சரியப்பட்டேன்! 'இட்டவேல்..' என்று தொடங்கி, மெய் துளைத்த நாய் என்று முடியும் தமிழ் இலக்கிய பாடல் ஒன்று!
அதாவது முதலாளி கோபம் கொண்டு எறிந்த வேல், நாயின் உடம்பை துளைத்து சென்றிருந்தாலும்,அது கோபம் கொள்ளாமல் அதற்கு நேர் மாறாக, தன் எஜமானை நோக்கி வால் ஆட்டிக்கொண்டே வருமாம்..!
அப்படி ஒரு நன்றி உள்ள ஜீவன்... இன்று தன் பிள்ளைகளுக்காக சோறிட்ட என்னையே முறைத்து விட்டதே! என்ன ஒரு தாய் பாசம்? அவள் தாய்மை குணம் என்னை மலைக்கச் செய்தது.மறுபுறம் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது!
நேராக மனைவியிடம் சென்றேன்.
" அடியே இனிமே நம்ம வீட்ல அஞ்சு பிள்ளைங்க..! அஞ்சுக்கும் ஆக்கிப்போடு..!" என்றேன்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாக கைவிட வேண்டும்: சீமான்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
குள்ளி -- சிறுகதை
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
Delayed Sleep causes heart attack: தாமதமான தூக்கம் இதயத்தை எப்படி பாதிக்கிறது?.. டாக்டர்கள் அட்வைஸ்!
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
{{comments.comment}}