இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே, முதல்வர் பைரன் சிங் இன்று கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த மேடையை விஷமிகள் தீவைத்து எரித்து விட்டனர்.
சுரசந்த்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் புதிதாக உடற்பயிற்சிக்கூடம் மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அதன் தொடக்க விழாவுக்கு இன்று திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக பெரிய மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அந்த மேடைதீப்பற்றி எரிந்தது. அதில் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விடடன. மேலும் அருகில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்தையும் விஷமிகள் தீவைத்து எரித்து விட்டனர். விளையாட்டுப் பொருட்களும் கூட தீயில் சாம்பலாகி விட்டன.
மணிப்பூரில் பாஜக அரசு நடந்து வருகிறது. பாஜக அரசு காப்புக் காடுகள் கணக்கெடுப்பில் இறங்கியுள்ளது. இதற்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது பழங்குடியினரை காடுகளை விட்டு அப்புறப்படுத்தும் முயற்சி என்று பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் கூறியுள்ளன. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் பல தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதற்கும் பழங்குடியினர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இருப்பினும் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டடங்களைத்தான் அரசு இடித்துள்ளது என்று அரசு விளக்கம் அளித்தது. மணிப்பூர் கோர்ட்டும் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் பழங்குடியினர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் முதல்வர் விழா மேடை எரிக்கப்பட்டுள்ளது.
{{comments.comment}}