- நவீன் ஸ்ரீதர்.வி
கடந்த தொடரில் பாண்டிய பேரரசியான தடாதகை, தேவலோகத்தை வென்றதைப் பற்றிப் பார்த்தோம்.
தொடர்ந்து பிரபஞ்சத்தின் அதிபதியாய் தானே சர்வமுமாய் திகழும் சிவபெருமானையும் வெற்றி கொண்டுவிட்டால் இனி தன்னை எதிர்க்க யாரும் இல்லை என்று அடுத்த போருக்கு தயாரானாள் தடாதகை.
அது வரை வரலாறு கண்டிராத ஒரு நிகழ்வு. சிவபெருமானை எதிர்த்து போர் என்ற சொல் அன்று தான் முதன்முதலில் பேசப்பட்டது. அட்டமாசித்திகள் கைவரப்பெற்ற தனது படையுடன் தேவலோகத்தையே கைப்பற்றிய வெற்றிக்களிப்புடனும் கயிலையை நோக்கி அடி எடுத்து வைத்தாள் தடாதகை. படைகள் கயிலையை அடைய, அந்த பனிமலையில் பாதம் பதித்தாள்.
கயிலையின் பனியானது நீராய் உருகி அவள் பாதத்தை நனைத்தது. "பஞ்சினும் மெல் அடியாள்" என்று திருவாசகம் போற்றுவதற்கேற்ப பஞ்சை விட மெல்லிய அந்த மென்மையான பாதங்கள் கயிலையில் நடந்து வெகுநாட்களாகிவிட்டதே! உமையவளாய் கயிலையில் நடமாடிய அன்னை, மதுரையை தன் இருப்பிடமாக்கிக் கொண்டு ஆண்டுகள் பல கடந்து மீண்டும் பனிமலையில் பாதம் பதிக்கிறாளே! எனவே கயிலை பனி உருகி அவள் பாதம் பற்றியது. தடாதகைக்கோ அவ்விடம் புதிதாக இல்லாமல் நன்கு பழக்கப்பட்ட இடமாகவே இருந்தது.
கயிலையை நோக்கி பெரும்படை வருவதை கண்ட கயிலையின் காவலரான நந்திதேவர் , பூத கணப்படையுடன் பாண்டிய படையை எதிர்த்து களம் கண்டார். எம்பெருமானை சுமந்து "ஈஸ்வர" பட்டம் பெற்ற நந்தியும் கூட தடாதகையை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். ஒருகட்டத்தில் தடாதகை நந்தியை கடந்து ஈசனின் இருப்பிடம் நோக்கி முன்னேறினாள். தன் கையில் இருந்த வில்லை எடுத்து சிவபெருமான் இருக்கும் இடம் நோக்கி போருக்கு அறைகூவல் விடுக்கும் விதத்தில் அம்பெய்தாள். சிவபெருமானும் தடாதகையை எதிர்க்க வருகிறார்.

போர் கோலத்தில் வில்லம்புடன் சிவபெருமான் தடாதகையை எதிர்கொள்ள வருகிறார். என்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் அனைவரையும் சூழ்ந்தது. தாங்கள் வழிபடும் இறைவனான ஈசனை எதிர்ப்பதா என்று பாண்டிய படைகளும், சிவபெருமான் என்ன செய்யப்போகிறார் என்ற அச்சத்தில் நந்தி முதலாய பூத கணங்களும் திகைத்து நிற்க, நீங்காத வீரத்தோடு சற்றும் சலனமின்றி இருந்தாள் தடாதகை. சிவபெருமானை தடாதகை நேருக்கு நேர் எதிர் கொள்கிறாள். ஆயுதங்கள் மோதி போரிடுவதற்கு முன்பே தடாதகை மற்றும் சிவபெருமானின் பார்வைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
அதன் விளைவு... தடாதகை தன் கரத்தில் இருந்த வில்லும் அம்பும் நழுவி கீழே விழுந்தது.தடாதகையின் மூன்றாவது தனமானது மறைந்தது.(தடாதகை நெருப்பிலிருந்து தோன்றிய போது மூன்று தனங்களுடன்(மார்புகள்) வந்தாள், தன் உரிய மணாளனை சந்திக்கும் போது நடுவில் உள்ள மூன்றாவது தனம் மறையும் என்று அசரீரி என்னும் இறைவாக்கு அன்று சொல்லப்பட்டது) அதன்படி தற்போது சிவபெருமானை நேருக்கு நேர் சந்தித்ததும் தடாதகையின் மூன்றாவது தனம் மறைந்தது. அதுவரை வீரம் விழுங்கிய விழியாளாய், எதற்கும் தலை குனியாத பாண்டிய பேரரசி தடாதகை முதல்முறையாக அன்று நாணத்தால் தலை குனிந்தாள். அதுவரை தங்கள் அரசியை அப்படி யாரும் பார்த்ததில்லை. போர்க்களத்தில் பார்வையாலேயே அழகான தெய்வீக காதல் மலர்ந்தது. நாணத்தால் குனிந்த தடாதகையின் பார்வை சிவபெருமானின் பாதத்தை விட்டு நீங்காதிருந்தது.
தங்கள் பேரரசியை திருமணம் செய்யவிருக்கும் மணாளன் தாங்கள் நித்தம் வழிபடும் ஈசனா என்று திகைத்து மகிழ்ச்சியில் திளைத்தனர் பாண்டிய படைகள். மந்திரி சுமதி பிராட்டிக்கோ அளவற்ற மகிழ்ச்சி, விரைவில் மதுரை சென்று இத்தகவலை தாயார் காஞ்சனமாலையிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவலும் கூடியது. சிவபெருமானும் தடாதகையே உமையவள் என்பதை அனைவருக்கும் உணர்த்தி, பங்குனி திங்களில் உரிய நேரத்தில் மதுரை வந்து தடாதகையை திருமணம் செய்வதாக உறுதியளித்தார். ஆக சிவபெருமானின் மனதையும் வெற்றி கொண்டாள் தடாதகை!
பெருத்த ஆரவாரத்துடன் மதுரையை அடைந்தது பாண்டியப்படை. ஒவ்வொருவரும் நடந்த விஷயத்தை தங்கள் மக்களிடம் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சிக்கடலில் திழைத்தது மதுரை. தாயார் காஞ்சனமாலைக்கோ மிகப்பெரிய அதிர்ச்சி, தன் மகள் தடாதகை நாணத்தால் தலை குனிந்தாள் என்றதை கேட்டவுடன். கயிலையில் தடாதகை நாணமுற்ற திருக்கோலத்தை ஓவியமாக வரைந்து தாயார் காஞ்சனமாலையிடம் காட்டினார் மந்திரி சுமதி பிராட்டியார்.
தான் வணங்கும் சிவபெருமானே தனக்கு மருமகனாக வருகிறாரே என்று மகிழ்ச்சி களிப்பில் ஆழ்ந்தார் காஞ்சனமாலை. தடாதகையின் திருமணத்தை பாண்டிய நாடே சிறப்பாக நடத்த காத்திருந்தது. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுத் திருமணம் போல் எல்லா வேலைகளையும் செய்தனர். அந்த நாளும் வந்தது..என்ன நடந்தது அடுத்த தொடரில் சிந்திப்போம் சிறப்பாக...
மீனாக்ஷீம்!!!
நீயும் நானும்!
M. Visvesvaraya.. beacon of engineering light.. Happy Engineer's day!
Listen to Who Said and What Is Said!!!!
Butterflies weren't born with wings
Think Less, Live More
I AM THE HERO
WHERE TRUST LIVES....
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
{{comments.comment}}