டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது மத்திய அரசு. முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நாடே பாராட்டி வருகிறது. குறிப்பாக திரை பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பதே தீவிரவாதிகளின் நோக்கம்.பஹல்காமில் தாக்குதல் நடந்து 15 நாட்கள் ஆகியும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தவர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தீவிரவாதிகளை தண்டிக்கவே இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. தீவிரவாத முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டுள்ளன. அவர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோதலை அதிகப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை என வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். எல்லைப் பகுதி மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினர் முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நாளை (மே 8ம்) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
{{comments.comment}}