இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!

May 07, 2025,01:11 PM IST

டெல்லி: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மே 7-ம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வரை "ஆபரேஷன் சிந்துர்" என்ற பெயரில் நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினர். 


இந்த திடீர் தாக்குதலின்போது, இந்தியா 24 ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


புது டெல்லியில் இன்று இதுதொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோருடன் இணைந்து இதுகுறித்து விளக்கினார். இந்திய படைகள் நடத்திய தாக்குதல் குறித்து முதல் முறையாக இரு பெண் அதிகாரிகள் செய்தியாளர்களிடம்  விளக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




செய்தியாளர் சந்திப்பின்போது மிஸ்ரி கூறுகையில், இந்த நடவடிக்கை நிதானமான மற்றும் சரியாக திட்டமிடப்பட்ட ஒரு பதிலடி. இந்தத் தாக்குதலை அதிகரிக்கும் திட்டம் நம்மிடம் இல்லை. இந்தியாவிற்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடக்கவிருப்பதாக எங்கள் உளவுத்துறை தெரிவித்தது. எனவே, தடுக்கவும், முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று காலை இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க பதிலடி கொடுத்தது... எங்கள் நடவடிக்கைகள் நிதானமானவை, மேலும் தீவிரமடையாதவை, விகிதாசாரமானவை மற்றும் பொறுப்பானவை. அவை பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை அகற்றுவதில் கவனம் செலுத்தின என்றார்.


கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், கடந்த 30 வருடங்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் ஆட்சேர்ப்பு மையங்கள், பயிற்சி பகுதிகள் மற்றும் ஏவுதளங்கள் உட்பட பயங்கரவாத உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த நடவடிக்கையானது அவற்றை நிர்மூலமாக்கி எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் இருந்தது.


இந்த ஏவுகணை தாக்குதல்கள் முசாபராபாத், கோட்லி, பகவல்பூர், ரவாலாகோட், சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜேலம் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் உள்ள இலக்குகளை குறிவைத்து நடத்தப்பட்டன. இந்த பகுதிகள் அனைத்தும் பயங்கரவாத முகாம்களைக் கொண்டிருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் நீண்ட காலமாக சந்தேகித்து வந்தன. இந்த இடங்கள் லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவை என்று நம்பப்பட்டது. இந்த குழுக்கள் பல ஆண்டுகளாக இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளன.




தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்களில் ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் இருந்தன. பகவல்பூர் JeM அமைப்பின் முக்கிய இடமாக அறியப்படுகிறது. முசாபராபாத் மற்றும் பிம்பர் ஆகியவை காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கான போக்குவரத்து மற்றும் தளவாட புள்ளிகளாக இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் முன்பு அடையாளம் காணப்பட்டன என்றார்.


UAV மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள், கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் தற்காலிக கூடாரங்கள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தின. இந்த நடவடிக்கை பெரிய அளவில் நடந்தாலும், எந்த பாகிஸ்தானிய ராணுவ தளங்களும் குறிவைக்கப்படவில்லை. இந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


தரை மற்றும் வான்வழி ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துல்லியமான தாக்குதலை உறுதி செய்வதற்கும், பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும் லேசர் மூலம் இயக்கப்படும் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டும் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. வான் மற்றும் தரை தளங்களில் இருந்து ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்

news

Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?

news

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

news

79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!

news

சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்