Operation Sindoor.. 1971 போருக்குப் பின்னர்.. பாகிஸ்தானுக்குள் புகுந்து வெளுத்த இந்திய ராணுவம்!

May 07, 2025,09:52 AM IST

டெல்லி: 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போருக்குப் பின்னர் முதல் முறையாக பாகிஸ்தானின் உட்புறத்திற்குள் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி அதிர வைத்துள்ளது. இந்தியா நடத்திய இந்த அதிரடித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


மொத்தம் 9 நிலைகளை குறி வைத்து இந்திய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அதில் 5 தீவிரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. மற்ற 4 இடங்கள் பாகிஸ்தானுக்குள் உள்ளது. இந்தியாவுக்கு நீண்ட காலமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


நமது படையினரின் தாக்குதல் தீவிரவாதிகளையும், அவர்களது முகாம்களையும் குறி வைத்து மட்டுமே நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தையும், பாகிஸ்தான் மக்களையும் இலக்காக வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.


ஆபரேஷன் சிந்தூர்




ஆபரேஷன் சிந்தூர் (சிந்தூர் என்றால் குங்குமம் என்று பொருள் - பஹல்கம் தாக்குதலில் 25 அப்பாவிப் பெண்களின் நெற்றிக் குங்குமம் பறிக்கப்பட்டதை சிம்பாலிக்காக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது) என்ற பெயரில் இந்தியப் படைகள் இந்த அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன. மிகவும் துல்லியமாக, இலக்கை குறி வைத்து சூப்பராக தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைமையகமும் சேதமடைந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதாவது பகவல்பூர் என்ற இடத்தில்தான் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைமையகம் உள்ளது. அங்கிருந்துதான் முன்பு புலவாமா தாக்குதலுக்குத் திட்டமிட்டு அதை நிறைவேற்றினர். அந்த இடத்தைத்தான் இந்தியப் படைகள் தற்போது தாக்கி துவம்சம் செய்துள்ளன. அந்த இடத்தில் மட்டும் 30 பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.


இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த 4 நிலைகள், லஷ்கர் இ தொய்பாவின் 3 நிலைகள், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் 2 நிலைகள் சேதமடைந்துள்ளன.


இந்தியா தாக்குதல் நடத்திய இடங்களின் விவரம்:




Markaz Subhan Allah, Bahawalpur (ஜெய்ஷ் இ முகம்மது)

Syedna Bilal Camp, Muzaffarabad (ஜெய்ஷ் இ முகம்மது)

Sarjal, Tehra Kalan (ஜெய்ஷ் இ முகம்மது)

Markaz Abbas, Kotli (ஜெய்ஷ் இ முகம்மது)

Shawai Nalla Camp, Muzaffarabad (லஷ்கர் இ தொய்பா)

Markaz Taiba, Muridke (லஷ்கர் இ தொய்பா)

Markaz Ahle Hadith, Barnala (லஷ்கர் இ தொய்பா)

Mehmoona Joya, Sialkot (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

Maskar Raheel Shahid, Kotli (ஹிஸ்புல் முஜாஹிதீன்)


இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.44 மணிக்கு இந்தியா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக எங்கிருந்து தங்களது தீவிரவாதிகளை ஏவு தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த இடங்கள் குறி வைத்து தாக்கப்பட்டன என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. எங்களது தாக்குதல் நடவடிக்கை துல்லியமாகவும், சரியான முறையில் திட்டமிடப்பட்டும் இருந்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் எந்த நிலையையும் நாங்கள் குறி வைக்கவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன?




நீண்ட தூரம் பாயும் SCALP ஏவுகணைகளை இந்தியா இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியுள்ளது. மேலும் ஹேமர் வகை குண்டுகளையும் அது பயன்படுத்தியுள்ளது. SCALP  ஏவுகணைகளுக்கு ஸ்டோர்ம் ஷேடோ என்றும் பெயர் உண்டு. இதை விமானத்திலிருந்து ஏவி தாக்குதல் நடத்த முடியும்.  250 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை இது துல்லியமாக தாக்கக் கூடிய வல்லமை படைத்தது. மேலும் உள்ளுக்குள் ஊடுறுவி துல்லியமாகவும் இது இலக்கைத் தாக்கக் கூடியது. 


அதேபோல HAMMER (Highly Agile Modular Munition Extended Range) என்று சொல்லப்படும் குண்டானது, கடினமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கட்டப்பட்ட கட்டடங்களையும் தகர்க்கும் சக்தி படைத்தது.  பங்கர்கள் என்று சொல்லப்படும் பாதாள கட்டடங்கள், பல மாடிக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை இதைக் கொண்டு தகர்க்க முடியும். தீவிரவாத முகாம்கள் எப்போதும் இதுபோலத்தான் இருக்கும் என்பதால் இந்த வகை குண்டை இந்தியா கையில் எடுத்துள்ளது. 50 முதல் 70 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்கை இந்த குண்டை வைத்து தாக்க முடியும்.


அதேபோல இந்தியா இன்றைய தாக்குதலில் கமிக்ஷே டிரோன்களை பயன்படுத்தியுள்ளது. இது கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும் ஆள் இல்லாத விமானமாகும். தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்ட இலக்குகளில் ஆட்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை இதை வைத்துக் கண்காணித்து அதன் பிறகே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. இதை ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


வட மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு


இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளன. இந்திய படையின் இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. தாக்குதல் மேலும் தீவிரமடையும் வாய்ப்புகள் உள்ளன. 


பாகிஸ்தான் தரப்பில் பதிலடி நடவடிக்கைகள் இருக்கலாம் என்பதால் வட மாநிலங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வான்வெளி கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


1971 போருக்குப் பின்னர் முதல் முறை




1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே முழு அளவிலான போர் மூண்டது. அப்போதுதான் இந்தியப் படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. அதன் பிறகு பலமுறை இரு நாட்டுப் படையினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் வெடித்துள்ளன. அதில் மிகப் பெரியது கார்கில் போர்தான்.


இருப்பினும் 1971க்குப் பிறகு ஒரு முறை கூட இந்திய ராணுவம், பாகிஸ்தானின் உட் பகுதியில் எந்தத் தாக்குதலும் நடத்தியதில்லை. அடிக்குப் பதிலடி என்ற வகையில்தான் இருந்து வந்தது. மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகுதான் தீவிரவாதிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவது என்ற உத்தி கையாளப்பட்டது. அப்போதும் கூட பாகிஸ்தானுக்குள் போய் தாக்குதல் நடத்தியதில்லை.


இந்த நிலையில் தற்போது சியால்கோட் வரை போய் இந்திய ராணுவத்தின் அடி விழுந்துள்ளதால் பாகிஸ்தான் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர்ந்து 2வது நாளாக அமித்ஷாவை சந்தித்த வேலுமணி...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்

news

ஆளுநரின் தேநீர் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!

news

ஐபிஎல் ஒளிபரப்பிற்கு வங்கதேச அரசு அதிரடித் தடை

news

தை பிறந்தால் வழி பிறக்கும்... கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன: பிரேமலதா விஜயகாந்த்

news

தமிழகத்திலும், மேற்குவங்கத்திலும் ஆட்சியை பிடிப்போம்...அமித்ஷா நம்பிக்கை

news

ஓய்வூதிய திட்டம்...போர்கொடி உயர்த்தும் போக்குவரத்து தொழிலாளர்கள்

news

2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடல்

news

2025ம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் 12 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்