ஜிஎஸ்டி திருவிழா நாளை முதல் தொடங்குகிறது.. நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்.. பிரதமர் மோடி

Sep 21, 2025,05:36 PM IST

டெல்லி:  நவராத்திரியின் முதல் நாளுடன் ஜிஎஸ்டி திருவிழாவும் தொடங்குகிறது. இனி நாடு செழிப்படையும், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


பிரதமர் மோடி இன்று ஜிஎஸ்டி 2.0 குறித்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர் விவரித்தார்.


பிரதமர் மோடி ஆற்றிய உரையிலிருந்து:


நாளை சக்தி வழிபாட்டுக்குரிய நவராத்திரி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நவராத்திரியின் முதல் நாளில், தேசம் தற்சார்பு இந்தியாவை நோக்கி ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறது.


நாளை, அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒரு ஜி.எஸ்.டி. சேமிப்பு விழா தொடங்க இருக்கிறது. உங்கள் சேமிப்பு அதிகரிக்கும், உங்களுக்கு பிடித்த பொருட்களை எளிதாக வாங்கலாம். இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெண்கள், வணிகர்கள் என பலரும் பயனடைவார்கள்.




இந்த சீர்திருத்தங்களுக்காக கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்தும், வர்த்தகத்தை எளிதாக்கும், அதிக முதலீடுகளை ஈர்க்கும், மேலும் ஒவ்வொரு மாநிலமும் நாட்டின் வளர்ச்சியில் சமமான பங்காளியாக இருப்பதை உறுதி செய்யும்.


இந்தியாவின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் 2017-ல் தொடங்கியது. இது ஒரு பழைய வரலாற்றை மாற்றி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவதற்கான தொடக்கமாக அமைந்தது. பல பத்தாண்டுகளாக, நம் நாட்டு மக்களும் வணிகர்களும் பல்வேறு வரிகளால் சிக்கியிருந்தனர். சுங்க வரி, நுழைவு வரி, விற்பனை வரி, கலால் வரி, வாட், சேவை வரி என டஜன் கணக்கில் வரிகள் இருந்தன. ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு பொருட்களை அனுப்ப, எண்ணற்ற சோதனைச் சாவடிகளை கடக்க வேண்டியிருந்தது.


2014-ல், நான் பிரதமராக பொறுப்பேற்றபோது, ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளியானது. அது ஒரு நிறுவனத்தின் சிரமங்களைப் பற்றி விவரித்தது. அந்த நிறுவனம், பெங்களூரிலிருந்து 570 கி.மீ. தொலைவில் உள்ள ஹைதராபாத்திற்கு தங்கள் பொருட்களை அனுப்ப வேண்டியிருந்தால், அது மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறியிருந்தது. அதற்குப் பதிலாக, அந்த பொருட்களை முதலில் பெங்களூரிலிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அனுப்புவதே சிறந்தது என்று அவர்கள் கருதினர்.


நண்பர்களே, வரிகள் மற்றும் சுங்கக் கட்டணங்களின் சிக்கல்களால் அப்போது இப்படிப்பட்ட நிலைமைதான் இருந்தது. பல மில்லியன் நிறுவனங்களும், கோடிக்கணக்கான மக்களும் இந்த வரிப் பிரச்சினைகளால் அன்றாடம் சிரமப்பட்டனர்.


ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல ஏற்படும் கூடுதல் செலவுகள், ஏழைகள் மற்றும் உங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்பட்டன. இந்த சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பது அவசியமாக இருந்தது.

 

இந்த சீர்திருத்தங்களால், நுகர்வோர் சிக்கலான வரிகளிலிருந்து விடுபட்டுள்ளனர். இந்த சீர்திருத்தத்தின் விளைவாக, அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் வரி இல்லாதவையாக அல்லது வெறும் 5% ஜி.எஸ்.டி. வரியுடன் கிடைக்கின்றன. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு "இரட்டை நன்மை"யை ஏற்படுத்தும்.


இந்தியா அதன் செழிப்பின் உச்சத்தில் இருந்தபோது, MSME-கள்தான் அதன் அடித்தளமாக இருந்தன. நாம் மீண்டும் அந்த நிலையை அடைய வேண்டும். நம் தயாரிப்புகளின் தரம் இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும். சுதேசியால் நாட்டின் செழிப்பு அதிகரிக்கும்.


பிரதமர் மோடியின் முந்தைய உரைகள்




பிரதமர் மோடி, 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், முக்கிய அரசு முடிவுகளை அறிவிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். 2019-ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட பாலகோட் வான்வழித் தாக்குதல்களை அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று, கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்று வார கால ஊரடங்கை அறிவித்தார்.


2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று, ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்தார். மே மாதத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்த முடிவை அறிவித்தார். 2025-ஆம் ஆண்டு மே 12 அன்று, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.


இந்த வரிசையில் இன்றைய தொலைக்காட்சி உரையும் இணைந்துள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இருந்து இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறைக்கு வரும். இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறையும். இது பண்டிகை காலத்தில் நுகர்வை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களால் விலை குறையப்போகும் பொருட்களில், நெய், கெட்சப், காபி, பனீர் போன்ற சமையல் பொருட்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் மருந்துகள் அடங்கும். கார்களுக்கான வரி விகிதங்கள் குறைந்துள்ளதால், பல கார் நிறுவனங்கள் ஏற்கனவே விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.


சரக்கு மற்றும் சேவை வரி (GST) தற்போது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விதமான வரியாக உள்ளது. புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இரண்டு விதமான வரிகளைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம். இது பெரும்பாலான பொருட்களை உள்ளடக்கும். எனினும், ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

வாக்காளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.. இணைய வழி திருத்தம்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு

news

காந்தா படம் எப்படி இருக்கு? (திரை விமர்சனம்)

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

பெருவெள்ளமா.. நீங்க வாங்க சந்திக்க நாங்க ரெடி.. கெத்தாக காத்திருக்கும் பள்ளிக்கரணை!

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்