திருச்சியின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர் நந்தலாலா.. தமுஎகச இரங்கல்

Mar 04, 2025,05:20 PM IST

சென்னை: திருச்சி மாவட்டத்தின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமையாக, அனைத்துச் சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களுடனும் இணக்கமான நல்லுறவைப் பேணி, அதை தமுஎகசவின் வளர்ச்சிக்காகத் திறம்படப் பயன்படுத்தியவர். களம் போன்ற பரந்த மேடைகள் பல கருத்தியல் தளத்தில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் என்று மறைந்த கவிஞர் நந்தலாலாவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:


தமுஎகச மாநிலத் துணைத்தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின்  பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா (69) அவர்கள் உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் இன்று காலை காலமாகிவிட்டார். அன்னாருக்கு தமுஎகச தனது அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. 




புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த நெடுஞ்செழியன், நந்தலாலா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத்துவங்கினார். இந்தியன் வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தீவிரமாக இயங்கி வந்தார். நாகப்பட்டினத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் நாகை கலை இரவை மிகப்பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியதில் பெரும்பங்காற்றினார். திருச்சிக்கு மாற்றலாகி வந்த பிறகு திருச்சியிலும் அருகமை மாவட்டங்களிலும் தமுஎகசவை உருவாக்குவதிலும் வழிநடத்துவதிலும் அவரது பங்கு தலையாயது. 


சோலைக்குயில்கள் என்கிற இலக்கிய இதழை திருச்சி தோழர்களுடன் இணைந்து நடத்தி வந்தார். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று திறந்தவெளிக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பேசி வந்தார். அவர் பேசாத மேடை இல்லை, கால் படாத மாவட்டம் இல்லை. அவருடைய அறிவார்ந்த, அங்கதம் மிகுந்த உரைகளுக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் தமிழகத்திலும் உலகின் பலநாடுகளிலும் உண்டு. 


தமிழ்ச்சிறுகதை நூற்றாண்டு விழா, கல்வி உரிமை மாநாடு, மொழியுரிமை மாநாடு, வள்ளலார் 200 வைக்கம் 100 ஆகிய நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர் தோழர் நந்தலாலா. திருச்சியின் சொல்லப்படாத வரலாறுகளை மக்களிடம் எடுத்துச் செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தொகுத்த “நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி” என்கிற நூலும் அவர் விகடன் மின்னிதழில் எழுதி நூலாக்கம் பெற்ற ”ஊறும் வரலாறு” நூலும் அதற்குச் சான்றாக நிற்கின்றன. இன்னும் பழைய வரலாறுகளைத் தேடித் தொகுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். அவை முற்றுப்பெறும் முன்னமே அவரது வாழ்வு முடிந்துவிட்டது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு. 


தொலைக்காட்சி விவாதங்களிலும், நேரலைகளிலும்  சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்று மதச்சார்பற்ற, பகுத்தறிவு சார்ந்த, இடதுசாரி கருத்தியலை வலுவாக முன்னெடுத்தார். பட்டிமன்றங்களின் நடுவராகவும் அவருக்குத் தனித்த இடமும் மரியாதையும் எப்போதும் உண்டு. இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்கப்பணிகளிலும் போராட்டங்களிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். 


திருச்சி மாவட்டத்தின் பண்பாட்டு வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமையாக, அனைத்துச் சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களுடனும் இணக்கமான நல்லுறவைப் பேணி, அதை தமுஎகசவின் வளர்ச்சிக்காகத் திறம்படப் பயன்படுத்தியவர். களம் போன்ற பரந்த மேடைகள் பல கருத்தியல் தளத்தில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர். 

 

இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருந்து தமிழ்ப்பணியாற்றும் அறிவாற்றல் கொண்டிருந்த தோழர் நந்தலாலா இப்படி அகாலத்தில் மரணமடைந்தது தமிழக முற்போக்குக் கலை இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் திருமதி ஜெயந்தி, அன்பு மகள்கள் பாரதி, நிவேதிதா, பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமுஎகச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்