சென்னையில் தமிழ் குழந்தைகளுக்கு தாய் மொழிக் கல்வி மறுப்பு.. வேல்முருகன் பரபரப்பு புகார்

Oct 18, 2023,05:54 PM IST

சென்னை: சென்னையில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால் தமிழ் குழந்தைகளுக்கு தாய் மொழி கல்வி மறுக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


மிகை எண்ணிக்கையிலான வெளி இனத்தார் ஒரு தேசிய இனத் தாயகத்தில், நுழைவது என்பது அத்தேசிய இனத்தை ஆக்கிரமிப்புச் செய்வதில்தான் முடியும் என்பதை வரலாறு பலமுறை கண்டிருக்கிறது.


பாலஸ்தீனத்திலும், தமிழர் தீவான இலங்கையிலும் இதுதான் நடைபெற்றது. எனவே தான், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் எவ்வளவு வெளியார் இருக்கலாம், இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கும் உரிமை, அவ்வினத்திற்கென அமைக்கப்பட்டுள்ள நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டதாக உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.


தமக்கென தனித்த அரசுகளைக் கொண்ட நாடுகள், தமது தாயகங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தமக்கென குடியேற்ற சட்டங்களை இயற்றி இதனை கட்டுப்படுத்தி வருகின்றன. இவ்வகையான அரசுரிமை இல்லாததாலேயே, தமிழ்நாட்டுத் தாயகத்தை அயல் இனத்தாரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாமல் நாம் திணறி வருகிறோம்.


குறிப்பாக, சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக நிறுவனங்களில், அதன் உரிமையாளர்களாக, தொழிலாளர்களாக நிரம்பி வழியும் வடமாநிலத்தவர்கள், அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற செய்தி பேரதிர்ச்சியையும், அச்சத்தையையும் ஏற்படுத்துகிறது.




அதாவது, சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் 28க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். இதனால், அப்பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கும் முன்  பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழ்நாட்டு ஆசிரியர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.


தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கி வரும் அப்பள்ளிகளில், தமிழ் பயிற்றுவிப்பது இல்லை;  தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்ற தகவல்கள், நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி தமிழ்வழிப் பள்ளிகளை அம்மாநில அரசு மூடி வரும் நிலையில், தமிழில் சொல்லித்தராத சவுகார்பேட்டையில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் நிதி உதவி அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.


அப்பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வடமாநிலங்களில் இருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணி அமர்த்துகிறார்கள்; அவர்கள் எந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெறவில்லை. சவுகார்பேட்டையில் உள்ள குடியிருப்புகளில் வட நாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர, தமிழ் நாட்டுக்காரர்களுக்கு இடம் அளிப்பதில்லை. வெளிப்படையாகவே மறுக்கவும் செய்கிறார்கள்.


இந்நிலை அன்றாடம் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் மொழி – தமிழர்களின் பண்பாடு என்னவாகும்? தமிழ்நாடு  கலப்பினத் தாயகமாக மாறும். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அயலார்க்குக் கீழ்ப்பட்டு, அவர்களை அண்டிப் பிழைக்கும் நிலை ஏற்படும்.


ஏற்கெனவே, தமிழ் நாட்டின் பொருளாதார ஆதிக்கம் வடமாநிலத்தவர்கள், மார்வாடி, குசராத்தி,  பெரு முதலாளிகள், பெரு வணிகர்கள் கையில் இருக்கிறது.  அவர்களைச் சார்ந்து அவர்களின் தயவில் தொழிலும் வணிகமும் நடத்தும் நிலையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள்.


முக்கியமாக, தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக மாறும் அபாயம் உள்ளது. அவர்கள் எப்போதும் திமுகவிற்கோ, அதிமுகவிற்கோ மறந்தும் கூட வாக்களிக்க மாட்டார்கள். பாஜக, காங்கிரசுக்கும் தான் வாக்களிப்பார்கள்.


இவ்வாறான வெளியார் ஆதிக்கம் அனைத்துப் பிரிவுத் தமிழர்களின் வாழ்வுரிமைகளைத் தமிழ்நாட்டிலேயே பறிக்கிறது. ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியையும் பறிக்கிறது. தமிழ்நாட்டிற்குள் புகும் இந்த வெளியார் வெள்ளம், தமிழர் தாயகக் கட்டமைப்பை உடைத்துக், கலப்பினத் தாயகமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிடுமோ என்ற அச்சம் தமிழர்களில்  நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது.


1956 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மொழி, அம்மொழி பேசும் மக்களின் பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்தான் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.


எனவே, சவுகார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்; அப்பள்ளிகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்க வேண்டும்; பள்ளிகளில் பணியாற்றும் வடமாநிலத்தவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்; பள்ளிகளில் பயின்று வரும் வடமாநிலத்தவர்களின் நலன் கருதி, அவர்களை தங்களது சொந்த மாநிலங்களிலேயே படிக்க வைக்க வேண்டும்.


சவுகார்பேட்டை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நிரம்பி வழியும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய குழுவை உடனடியாக அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.


இக்குழுவின் வாயிலாக, தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து, அவர்களை, சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.


வெளியாரை வெளியேற்றுவது என்பது வெறும், தமிழர்களின் கல்வி -  வேலை - வாழ்வுரிமை சார்ந்த சிக்கல் மட்டுமல்ல, அது தமிழர் தாயகத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை என்பதை புரிந்து கொண்டு, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.


இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எச்சரிக்கையோடு செயல்படவில்லை என்றால், எதிர்காலத்தில் பாலஸ்தீனம் போன்று தமிழ்நாடும் மாறும்; தமிழ்நாட்டு மக்களும் அரசியல் அனாதைகள் ஆவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்