தமிழை உலகளாவிய அளவுக்கு வளர்த்த மாபெரும் அறிஞர்!

Feb 05, 2026,03:35 PM IST

- மயிலாடுதுறை, த.சுகந்தி,M.Sc,B.Ed


தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்த வெளிநாட்டு அறிஞரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?


யார் அந்த அறிஞர் என்று தெரிகிறதா? அவர்தான் வீரமாமுனிவர்.


வீரமாமுனிவர் தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர். தமிழை ஆழமாகக் கற்றதோடு மட்டுமல்லாமல், தமிழில் சிறந்த இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் எழுதியுள்ளார்.  . 


தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தன்னுயிர் போல் உழைத்த அறிஞர்களில் வீரமாமுனிவர் தனித்த இடம் பெறுகிறார். வெளிநாட்டவர் ஒருவராக இருந்து தமிழைத் தாய் மொழிபோல் கற்று, அதன் இலக்கியம், இலக்கணம், பண்பாடு ஆகிய அனைத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் வீரமாமுனிவர். தமிழின் பெருமையை உலகறியச் செய்த பெருமை இவருக்கே உரியது.




வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) ஆகும். இவர் 1680 ஆம் ஆண்டு   இத்தாலி நாட்டில் பிறந்தார். இளம் வயதிலேயே அறிவிலும் மொழிகளிலும் ஆர்வம் கொண்ட இவர், இயேசு சபையைச் சேர்ந்த கிறித்தவ துறவியாக ஆனார். மதப் பணிக்காக இந்தியாவிற்கு வந்த இவர், தமிழ் நாட்டில் தங்கி தமிழ் மொழியை கற்கத் தொடங்கினார்.


தமிழ் மொழியின் இனிமையும்,செம்மையும் வீரமாமுனிவரை மிகவும் கவர்ந்தது. ஆரம்பத்தில் தமிழ் பேசக் கற்றுக் கொண்ட இவர், பின்னர் தமிழ் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் ஆழமாகக் கற்றார். தமிழின் அமைப்பு, சொல் வளம், கவிதை நயம் ஆகியவற்றைக் கண்டு வியந்த வீரமாமுனிவர், தமிழில் எழுதத் தொடங்கினார். தமிழில் இவர் பெற்ற புலமையைப் பார்த்த தமிழறிஞர்கள் கூட அவரை வியந்து பாராட்டினர்.


வீரமாமுனிவர் தமிழில் பல சிறந்த இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்கியமானது “தேம்பாவணி” ஆகும். தேம்பாவணி ஒரு காப்பியமாகும். இது காப்பிய இலக்கணத்திற்கு ஏற்ப அமைந்தது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டாலும், தமிழ் மரபுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப அமைந்துள்ளது. இந்த நூல் தமிழ் காப்பியங்களுள் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழின் இனிமை, கவிதை அழகு, உவமை, உருவகம் ஆகிய அனைத்தும் இதில் சிறப்பாக வெளிப்படுகின்றன.


தேம்பாவணி மட்டுமின்றி, “திருக்காவலூர் கலம்பகம்”, “அன்னையர் அந்தாதி”, “கண்ணிமை தத்துவம்” போன்ற பல நூல்களையும் வீரமாமுனிவர் இயற்றியுள்ளார். இந்நூல்கள் தமிழின் இலக்கிய வளத்தை மேலும் செழிக்கச் செய்தன. இவரது படைப்புகளில் மொழி எளிமையாகவும் இனிமையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இலக்கியத்துடன் மட்டுமல்லாமல், தமிழ் இலக்கண வளர்ச்சிக்கும் வீரமாமுனிவர் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அவர் எழுதிய “தொன்னூல் விளக்கம்” என்ற இலக்கண நூல் தமிழின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றையும் தெளிவாக விளக்குகிறது. இந்த நூல் தமிழறிஞர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது. தமிழில் இலக்கண நூல்கள் எழுதுவதில் வெளிநாட்டவர் ஒருவரால் இவ்வளவு சிறப்பாக எழுத முடிந்தது என்பது வியப்பிற்குரியது.


மேலும், வீரமாமுனிவர் தமிழில் முதல் அகராதியாகக் கருதப்படும் “சதுரகராதி” என்ற நூலைத் தொகுத்தார். இந்த அகராதி தமிழ் சொற்களின் பொருளை தெளிவாக விளக்குகிறது. தமிழ் மொழி பயிலும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இது மிகுந்த உதவியாக இருந்தது. தமிழ் சொல் வளத்தை அறிய இந்த நூல் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.


வீரமாமுனிவர் தமிழை நேசித்தது அவரது வாழ்க்கை முறையிலேயே தெரிகிறது. அவர் தமிழ் உடை அணிந்தார், தமிழர்களின் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டார், தமிழ் பெயரையும் எடுத்துக் கொண்டார். “பெஸ்கி” என்ற பெயருக்கு பதிலாக “வீரமாமுனிவர்” என்ற தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொண்டார். இது அவர் தமிழின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது.


தமிழ் மொழி மட்டுமல்லாமல், தமிழர் பண்பாடு, மரபு, வாழ்வியல் ஆகியவற்றையும் வீரமாமுனிவர் மதித்தார். தமிழர்கள் வாழ்ந்த சமூகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்குடன் அவர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்.


வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டினால் தமிழ் மொழி உலகளவில் பெரும் மதிப்பைப் பெற்றது. வெளிநாட்டவராக இருந்து தமிழுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்ததால், இவர் “தமிழ் தந்தை”, “தமிழ் வளர்த்த வெளிநாட்டு அறிஞர்” எனப் போற்றப்படுகிறார். தமிழின் இனிமையும் செம்மையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க, வீரமாமுனிவரின் பங்களிப்பு அளவற்றது.


வீரமாமுனிவர் தமிழுக்குச் செய்த சேவைகள் என்றும் மறக்க முடியாதவை. தமிழ் மொழி வளர்ச்சியில் அவர் விட்டுச் சென்ற தடம் மிக ஆழமானது. மொழி எல்லைகளைக் கடந்து, இன எல்லைகளையும் தாண்டி, ஒரு மொழியை உண்மையாக நேசித்தால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு வீரமாமுனிவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகினார்.


நாம் அனைவரும் நம் தாய் மொழியை நேசிப்போம். தாய்மொழியில் பேசுவதை பெருமையாக கருதுவோம். தமிழில் பல நூல்களை இயற்றி தமிழுக்கு பெருமை சேர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம் .


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். 

ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித் தீர்மானம்.. விவாதத்திற்குப் பின் நிறைவேறியது

news

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது பெரும் ஏமாற்றம்: பாமக சௌமியா அன்புமணி பேச்சு!

news

கடன் வரம்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சு - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி!

news

தமிழகத்தில் ஆகஸ்ட் 17 வரை மழைக்கு வாய்ப்பு...சென்னையிலும் மழை தொடரும்

news

நாளை ஆடி அமாவாசை நாளில் வரும் சூரிய கிரகணம் 2026 ஆகஸ்ட்...இதன் முக்கியத்துவம்

news

LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் கவனத்திற்கு: e-KYC சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை அவகாசம்

news

அபுதாபி செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலவச நுழைவு விசா

news

Seenu Ramasamy comments: பட்ஜெட் பற்றிப் பேசுங்கள்.. வாசித்தவரைப் பற்றிய விவாதம் டைம் வேஸ்ட்!

news

அருணின் மாற்றம்.. திருக்குறள் கதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்