திருவாரூர்: திருவாரூர் திமுக ஆட்சியில் காய்ந்து போய்க் கிடக்கிறது. விவசாயிகளிடம் நெல் கொள்முதலில் கமிஷன் வாங்கி அவர்களது வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது திமுக ஆட்சி என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நாகப்பட்டனத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அனல் கக்க பேசிய
தவெக தலைவர் விஜய் அதே அனலோடு திருவாரூரிலும் இன்று மாலை பேசினார். திருவாரூர் கூட்டத்தில் திமுக ஆட்சி மீது கமிஷன் வாங்கும் ஆட்சி என்ற குற்றச்சாட்டை விஜய் வைத்தார்.
விஜய் பேச்சிலிருந்து:
திருவாரூர் என்றதுமே நினைவுக்கு வருவது தியாகராஜர் கோவில் ஆழித் தேர்தான். அது திருவாரூரின் அடையாளம். அந்தத் தேரை ஓட வைத்தவர் நான் என்று மார் தட்டிக் கொண்டார் ஒரு தலைவர். அவருடைய மகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்ற தேரை சிறப்பாக ஓட வைக்காமல் நாலாபுறமும் கட்டையை வைத்து நிறுத்தி வைத்து விட்டார்.
தனது சொந்த மாவட்டம் என்று திருவாரூரைக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் திருவாரூர் எப்படி இருக்கிறது. கருவாடாக காய்கிறது. கண்டுக்காமல் இருக்கிறார். அவங்க அப்பா பெயரில் பேனா சிலை வைக்கச் சொல்றாங்க. எல்லா இடத்திலும் அப்பா பெயரை வைக்கறீங்க.. உங்க அப்பா பெயரை வைக்கறீங்க. உங்க அப்பா பிறந்த இந்த திருவாரூர் மாவட்டத்துல அடிப்படை வசதி கூட சரியா இல்லையே சார்.
நாகப்பட்டனம் மாதிரியே திருவாரூரிலும் அதிகமாக குடிசைப் பகுதிகள் அதிகமாக இருக்கு. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் அனைத்து துறையும் இருக்காது. இங்குள்ள மெடிக்கல் காலஜையே வைத்தியம் பார்ப்பது போலத்தான் இருக்கு. இங்குள்ள மெடிக்கல் காலேஜில் எல்லா கருவியும் வேலை செய்யுதா.. செய்யாதே. திருவாரூர், ஒரு மாவட்டத் தலைநகர். இங்குள்ள பஸ் ஸ்டாண்ட்டுக்கு சரியா ஒரு ரோடு கூட இல்லை.
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். சிஎம் குடும்பத்துக்கு சேவை செய்வதுதான் அவரது வேலை. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம தெரிய வைக்கணும். உங்களுடன் ஸ்டாலின் என்று உங்க குடும்பத்துக்கு மட்டும்தான் சொல்லிக்கணும். மக்களிடம் சொல்ல முடியாது. மக்களிடம்தான் நீங்க இல்லையே.
டெல்டா பகுதி விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவிச்சிட்டிருக்காங்க. இந்த மாவட்டத்தில் இருக்கிற கொள்முதல் மையங்களில் நெல்லை ஏத்தி இறக்குவதற்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகிறார்களாம். அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்கிறீங்க. அதுக்கு மேல 40 ரூபாய் கமிஷன். ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். நாலு நாலரை வருடத்தில் பல கோடிகள் டெல்டா விவசாயிகளிடமிருந்து கமிஷனாகவே பிடுங்கியிருக்கிறார்க்கள்.
வேற யார் சொன்னாலும் இதை நான் நம்பியிருக்க மாட்டேன். என்னிடம் இதைச் சொன்னதே விவசாயிகள்தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டாங்க. சிஎம் சார்.. உங்க ஆட்சியில் இது நடந்திருக்கு. உங்களுக்கு வேண்டுமானால் 40க்கு 40 தேர்தல் முடிவாக இருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு அது அவங்க வயிற்றில் நீங்க அடிச்சு வாங்கின கமிஷன். இது உங்க ஆட்சியில் நடந்திருக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க என்றார் விஜய்.
பேச்சை முடிக்கும்போது விஜய் கூட்டத்தினரைப் பார்த்து, நண்பா ஒரு டவுட்டு.. போற இடமெல்லாம் இது சும்மா கூட்டம்.. ஓட்டுப் போடாதுன்னு சொல்றாங்க.. இது என்ன சும்மா கூட்டமா.. என்று கேட்க கூட்டம் ஆர்ப்பரித்ததைக் கேட்டு திருவாரூரே திகைத்துப் போயிருக்கும்.
திருச்சி, அரியலூரில்
பிரமிப்பை ஏற்படுத்திய விஜய், தனது நாகை, திருவாரூர் கூட்டங்களில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இனி அடுத்தடுத்து அவர் போகப் போகிற ஊர்களுக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதையும் இப்போதே கணிக்கலாம்.
{{comments.comment}}