- காயத்ரி கிருஷாந்த்
கடந்த சில நாட்களாகவே கனத்த இதயத்துடனும் மனமுடைந்தும் நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். தோல்வியை கூட ஏற்றுக் கொண்ட மனம் இன்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து உடல் எடை காரணத்தினால் "தகுதியற்றவர்" என்ற ஒற்றை சொல்லில் முடங்கி சிந்தையில் நிறுத்தி இழந்ததை எண்ணி வருத்தப்படுகிறோம். இதிலிருந்து வெளியேற சில விஷயங்களை நாம் அறிந்து கொண்டு ஆக வேண்டும்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாடிபில்டரும், Masters strength and fitness gym பயிற்சியாளருமான ஏ.நாகராஜனிடம் கேட்டோம். அப்போது அவர் இதுகுறித்து விரிவாக விளக்கிக் கூறியதாவது:
விளையாட்டுப் போட்டிகளை பொருத்தவரை விதிமுறைகள் என்பது தவிர்க்க முடியாதது. விதிமுறைக்கு கட்டுப்பட்டு தான் ஒவ்வொரு போட்டியாளரும் கடின உழைப்பை கொடுக்கின்றனர். சில நேரங்களில் கடின உழைப்பு கூட வெற்றி வாய்ப்பை இழக்க காரணமாகும் என்பதன் எடுத்துக்காட்டே வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தகுதி நீக்கம்.
எடை மேலாண்மை முக்கியம்

விளையாட்டுப் போட்டிகளில் எடை மேலாண்மை என்பது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு எடைக்கும் ஏற்றார் போல் அந்த எடையை ஒத்த போட்டியாளர்களுக்கு இடையே தான் போட்டி நடத்தப்படுகிறது. அதில் எடை அதிகரிப்பு 100 கிராம் என்றாலும் அதுவும் விதிமுறை மீறல் என்பதையே சாரும். இப்படித்தான் ஒலிம்பிக் விதியை வைத்துள்ளனர்.
சாதாரண மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் கூட எடை கணக்கிடப்படுகிறது. எடையை பொறுத்துதான் எந்த எடை பிரிவில் விளையாட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அதில் கூட எடை கிராம் அளவில் கூடினால் கூட வெளியேற்றப்படுகின்றனர். அடுத்து நமக்கு வரும் மிகப்பெரிய வியப்பான விஷயம் என்னவென்றால் ஒரே நாளில் வினேஷ் போகத், எவ்வாறு எடை கூடினார் என்பதுதான்.
ஒரே நாளில் 2 டூ 5 கிலோ வரை எடை கூடும்

ஒரே நாளில் இரண்டு கிலோவிலிருந்து 5 கிலோகிராம் வரை கூடுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. கடுமையான உடற்பயிற்சியை தொடர்ந்து உடல் எடுத்துக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து இடைவிடாமல் விளையாடிக் கொண்டிருந்ததன் விளைவாக உடலில் வியர்வையாக நீர் இழப்பு ஏற்பட்டு உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம், கிளைக்கோஜன், அளவுகள் குறைந்து உடல் சோர்வில் இருக்கும் பொழுது போட்டியாளர் குறைந்த அளவு உணவு எடுத்துக் கொண்டால் கூட உணவானது உடலால் வேகமாக உறிஞ்சப்படுகிறது.
தசைகளானது சோடியம் பொட்டாசியத்தை அதிகமாக உறிஞ்சுகிறது. சோடியத்தின் தன்மை தண்ணீரை தக்க வைத்துக் கொள்வதால் தசைகளில் தண்ணீரை தேக்கி வைப்பதால் ஒரே நாளில் கூட இரண்டிலிருந்து 5 கிலோ எடை கூட வாய்ப்புள்ளது இதனை "வாட்டர் வெயிட்" என்று கூறுவார்கள்.
பெண்களுக்கு எடைக் குறைப்பு சிரமம்

உடல் எடை குறைப்பு என்பது பெண்களுக்கு மிக எளிதான ஒன்று இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் மிக சோர்வாக இருப்பதனால் குறிப்பிட்ட எடை இலக்கை அடைவதில் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பெண் போட்டியாளர்களுக்கு எடை குறைப்பு என்பது சற்று கடினமான விஷயமாகவே தெரிகிறது. மன சோர்வு ஏற்படும் பொழுது எடை குறைப்பு என்பது சாத்தியமற்றது.
கடைசி நேரத்தில் வினேஷ் போகத்துக்கு கடுமையான உடற்பயிற்சி கொடுக்கப்பட்டு உடலாலும் மனதாலும் சோர்வில் தான் இருந்திருப்பார். அப்பொழுது கடைசி நேர எடை குறைப்பு என்பது சாத்தியமல்ல. இரவு எடுத்துக்கொண்ட உணவு முழுவதுமாக கிரகிக்கப்பட்டு எடை அதிகரித்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற காரணமாக அமைந்துவிட்டது.
கடைசி நேர எடை குறைப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத. ஒன்று கடுமையான பயிற்சியால் தசையின் இலகுத்தன்மை நீரிழப்பால் இறுகிப்போவதால் தசை இறுக்கம் ஏற்பட்டு கால்களில் நடுக்கம் ஏற்பட காரணமாக அமையும். மேலும் நீர் இழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் கூட ஏற்படும்.
பயிற்சியாளர் கவனமாக இருக்க வேண்டும்

போட்டியாளர் கவனக்குறைவாக இருந்தாலும் கூட, பயிற்சியாளர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடைசி நேர உடற்பயிற்சி போட்டியாளரை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்து போட்டியாளரின் இலக்கான பதக்கம் வெல்வது, போட்டிகளில் யுத்திகளை கையாள்வது போன்றவற்றிலிருந்து கவனம் சிதற காரணமாக அமைகிறது. எடை மேலாண்மை என்பது பொதுவாகவே பயிற்ச்சியாளர்களின் பொறுப்பில் தான் இருக்க வேண்டும்.
எடை குறைவோ கூடுதலோ, அதனை போட்டியாளர்களுக்கு பயிற்சியாளர் தொடர்ந்து சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரே நாளில் எடை இழப்பு என்பது ஆபத்தே. எடை இழப்பு என்பது ஒரே நாள் இரவில் நிகழ்வதில்லை சரிவிகித உணவு மற்றும் நடைப்பயிற்சியை போட்டியாளர்களும் சரி சாதாரண சக மனிதர்களும் சரி, சரியாக நிர்வகித்து வாழ்ந்தால் எடையை சீராக வைத்துக் கொள்ளலாம்.
உடலில் கார்போஹைட்ரேட் அளவை தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு புரோட்டின் , போன்ற உணவுகளை சரிவர எடுத்து வந்தால் எடையை பராமரிக்கலாம். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இழந்ததைக் கடக்க பழகிக் கொள்வோம் நடப்பது நன்மையே என்ற நம்பிக்கையில்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}