கேஷாவின் சிறகடித்த தருணம்!

Oct 20, 2026,11:11 AM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி 


கேஷா தன் அப்பா தனக்காக வாங்கி கொடுத்துள்ள அந்த சைக்கிளை பிரமிப்புடன் பார்த்தாள். அது அவளை விட மிக உயரமாக  தெரிந்தது. ஐந்தாவது படிக்கும் கேஷா இனி தினமும் இந்த சைக்கிளில் தான் பள்ளிக்குச் செல்ல வேண்டுமாம். அப்பா கூறியிருந்தார். 


இப்போது பள்ளி விடுமுறை. அடுத்த வாரம் பள்ளி திறந்து விடும். அதற்குள் அவள் இந்த சைக்கிளை பழகியாக வேண்டும். எப்படியாவது அதை ஓட்டிவிட வேண்டும் என  கேஷாவிற்கு அவ்வளவு ஆசை. இருந்தாலும் ஒரு பயம் மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது.


அப்பா அவளை சைக்கிள் பழக மைதானத்திற்கு  அழைத்துச் சென்றார். "பயப்படாதே, ஓட்டு. நான் பிடித்துக் கொள்கிறேன் ," என்று அப்பா அவளை ஊக்கப்படுத்தினார். 




அவள் தயக்கத்துடன் சைக்கிளில் ஏறினாள், அவளது கால்கள் நடுங்கின. அப்பா பின்னால் இருந்து பிடித்துக்கொண்டே, "பெடலை அழுத்து, நேராகப் பார்," என்றார். 


முதல் சில நிமிடங்கள் அவள் தடுமாறினாள். விழுந்து விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்கொண்டது. இருந்தாலும் விடாமல் முயற்சி செய்தாள். அப்பா பின்னாடியே ஓடி வந்தார். சற்றுத் தூரம் சென்றதும், அப்பா அவளுக்குத் தெரியாமல் பிடியை மெதுவாக விட்டார். 


சற்று நேரத்தில் கேஷா உணர்ந்தாள். அப்பா நம்மை பிடிக்கவில்லை. நாமே ஓட்டுகிறோம் என. அதை அவள் உணர்ந்த அந்த தருணத்தில் அவள் மனம் சிறகடித்தது. அவள் இன்னும் வேகமாக ஓட்டத் தொடங்கினாள். வானத்தில் சிறகடித்து பறப்பது போல் உணர்ந்தாள். பயம் மறைந்து, அவளுக்குள் ஒரு புது விதமான நம்பிக்கை பிறந்தது. அவள் சைக்கிளைச் சமநிலைப்படுத்தக் கற்றுக்கொண்டாள்.  வேகத்தை குறைத்து மெதுவாக இறங்கவும் கற்றுக் கொண்டாள்.


"அப்பா! நான் நன்றாக ஓட்டுகிறேன்!" என்று கத்தினாள், அவள் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. ஒரு வாரமாக தினமும் காலை மாலை என  இரு வேளையும் ஓட்டி பழகினாள். நல்ல நம்பிக்கை வந்திருந்தது.


ஒவ்வொரு முறை பெடலை அழுத்தும்போது,  புதிய உயரங்களை அடைவது போல , எதையோ சாதித்து விட்டதை போல , அவள் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.


முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை அவள் மனதிற்குள் வலுவாக இறங்கியது. அவளின் அந்த நம்பிக்கை அவள் வாழ்க்கையின்  அடுத்தடுத்த முயற்சிகளுக்கு  அடித்தளமாய் அமைந்தது. 


இந்த அனுபவத்தை விதையாக ஊன்றி, அவள் வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் , விடாமுயற்சி செய்து இன்று  மாநில அளவில் முதல் இடத்தை பெற்ற மாணவியாக திகழ்கிறாள்  கேஷா.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்