- சே. ஷீபா
அது ஒரு மதிய வேளை, வெயில் சுட்டெரித்த யாருமில்லா அவ்வூரின் சாலையின் இருபுறமும் வீடுகள். அனைத்தும் பெரிய மாடி வீடுகள். அப்பொழுது அங்கு அனைவருக்கும் பரிட்சயமான பொம்மை விற்கும் பட்டம்மா பாட்டியின் குரல் ஒலித்தது.
பொம்மையம்மா……. பொம்மை……
பொம்மை வாங்கலையோ………… பொம்மை………..
என்று சத்தமிட்டு கொண்டே வந்தாள். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. புழுதிக்காற்றின் வேகம் வெப்பத்தின் உச்சத்தை உணர்த்தியது. எங்கேயோ விளையாடும் சிறுவர்களின் கூச்சல், ஏதோ ஒரு வீட்டின் தொலைக்காட்சியின் சிணுங்கல், பசியோடு நின்ற கன்றின் கதறல், இதை தவிர வேறு அசைவில்லை.
பொம்மைகளை விற்றாக வேண்டுமே, பாவம்! பட்டம்மா, அவருக்கு தான் யார் இருக்கிறார்?... தன் மகளை அசலூருக்கு திருமணம் முடித்து கொடுக்க, இருந்த ஒரு மகன் ஏதோ நோய்வாய்ப்பட்டு இறந்தும் போனான். இந்த தள்ளாத வயதிலும் வயிற்று பிழைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டுமே… மீண்டும் சத்தமிட்டாள்…..
பொம்மை வாங்கலையோ……… பொம்மை
பட்டம்மா பாட்டிக்கு வயது எழுபது இருக்கும். அந்த கிராமத்து சிறுவர்களுக்கு பாசக்காரப் பாட்டி.. சில நேரங்களில் காசு கொடுத்து பொம்மை வாங்க இயலாத பிள்ளைகளுக்கு இலவசமாகவே பொம்மைகளை தருவார். அவ்வளவு இளகிய மனது அவளுக்கு.

அந்த தள்ளாத வயதிலும் களிமண்ணால் அழகிய பொம்மைகள் செய்து, பல வண்ணங்களால் வண்ணம் தீட்டி, அவற்றை அழகுற அடுக்கி, கூடையில் வைத்து விற்று வருவாள். விதவிதமான சாமி பொம்மைகள், லெட்சுமி, முருகன், ஏசுநாதர், விநாயகர், மரியன்னை, தேசத்தலைவர்கள் காந்தி, காமராஜர், அண்ணா மற்றும் விலங்குகள், பறவைகள் என பாட்டியின் பொம்மைக் கூடையே சமத்துவத்தைப் பேசியது. மீண்டும் சத்தமிட்டுக் கொண்டே நடந்தாள்.
அன்று வெகுதூரம் நடந்தாள். ஏனோ பொம்மைகள் விற்கப்படவில்லை. சற்று அசதியாகவும் இருந்தது.
பாட்டிக்கு அவ்வூரை பற்றி நன்றாக தெரியும். இளைப்பாற இடமே இல்லை என்றாலும் பெரிய வீட்டின் முன் நிற்க மாட்டார். அவ்வூரிலேயே அதுதான் பெரிய வீடு, அரண்மனை போன்ற வீடு, சொகுசு கார், அத்தனை வேலை ஆட்கள் என அதற்கான பெயர் காரணத்தை அதன் இருப்பே சொல்லும்.
ஆம், பெரிய வீடு என்றாலே ‘நாச்சியப்பன்’ நினைவுக்கு வருவார். அவ்வூரில் அவர் வைத்தது தான் சட்டம். மிகவும் கடுமையானவர். மற்ற மத, சமூக மக்களை சற்றும் மதிக்காத மனிதர். அவருக்கு பொம்மை விற்கும் கிழவியின் சத்தம் கேட்டாலே பிடிக்காது. பாட்டியும் அந்த வீட்டின் முன் நிற்பதும் இல்லை, சத்தமிடுவதும் இல்லை.
அன்றும் எப்போதும் போல் பெரிய வீட்டை சத்தமின்றி கடந்து சென்றார். ஆனால் எப்படியோ கண்மணி, பட்டம்மா பாட்டியைப் பார்த்து விட்டாள். பெரிய வீட்டிலிருந்து கண்மணி ஓடி வந்தாள். கண்மணி, நாச்சியப்பனின் ஒரே மகள், செல்ல மகள். மகள் என்றால் தந்தைக்கு சொல்லவா வேண்டும். அவ்வளவு பாசம். ஆனால் கண்மணி தன் தந்தையின் குணத்திற்கும், மனப்பான்மைக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு குழந்தை.
கண்மணி, பாட்டியின் பின்னே “பாட்டி, பாட்டி” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.
“பாட்டி, நில்லுங்க… எனக்கு ஒரு பொம்மை வேணும்” என்றாள் கண்மணி.
பதறி போன பட்டம்மா பாட்டி “கண்மணி, ஏன் ஆயி ! வேணாம்டி செல்லமே ! உங்க அப்பா பாத்தா அவ்வளவு தான்… அதுக்கப்பறம் நான் இந்த ஊர் பக்கமே வரமுடியாது. உங்க அப்பாட்ட சொல்லி டவுன் கடை தெருல வாங்கியாரச் சொல்லு சரியா…. என்று பாட்டி நிற்காமல் செல்ல…..
“நில்லுங்க பாட்டி, அப்பா ஒன்னும் சொல்லமாட்டாங்க” என்று பாட்டியின் முன் மூச்சிறைக்க வந்து நின்றாள், கண்மணி.
“என்ன பெத்த மக்கா உனக்கில்லாத பொம்மையா… உங்க அப்பா தான் நாங்க வேற, நீங்க வேறன்னு யேசுதே” என்று கண்மணியின் கன்னத்தை உருவி முத்தமிட்டார். “எந்த பொம்மை வேணும் சாமி உனக்கு, இந்தா எடுத்துக்க” என்று பொம்மை கூடையை இறக்கினார்.
கண்மணி ஆர்வமாக பொம்மைகளை பார்த்தாள். அவள் கண்ணுக்கு “மரியன்னையின் பொம்மை” தனது தோழி மேரியை நினைவூட்டியது. உடனே அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
பாட்டி எனக்கு இந்த மரியன்னை பொம்மை வேணும். எவ்வளவு காசு?” என்றாள். அந்த பொம்மை இருபத்தைந்து ரூவாதான் கண்ணு. உனக்காக இருபது ரூவாக்கு தர்றேன்.” என்றார். இல்லை பாட்டி நான் இருபத்தைந்து ரூபாவே தர்றேன்” என்று காசு வாங்க வீட்டுக்குள் சென்ற கண்மணி தன் தந்தையுடன் வந்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத பாட்டி, “நாச்சியப்பனை பார்த்ததும் பதறி போய் அங்கிருந்து நகர முயன்றும் முடியாமல் “ஐயா மன்னிக்கனும்! சின்ன பிள்ளை ஆசைப்பட்டுச்சி அதான்… இல்லனா இங்க நிக்ககூட மாட்டேன்” என சொல்ல வந்ததை பாதி விழுங்கி பயந்து நின்றார்.
‘பரவாயில்ல பட்டம்மா…. பொம்மை வாங்க தான் கண்மணி என்னை அழைச்சிட்டு வந்தாள்…” இந்தா காசு என்று இருபத்தைந்து ரூபாய் நீட்டினார்.
கண்ணில் கோபம் தெறிக்க, கடும் வார்த்தைகளுடன் அனைவரையும் உதாசீனப்படுத்தி விரட்டும் பெரிய வீட்டு நாச்சியப்பனா இது? இன்று தன் மகளுக்காக கிழவியிடம் பொம்மை வாங்க வந்திருப்பது?” என்று பட்டம்மா புரியாமல் நிற்கையில்…
அவசர அவசரமாக நாச்சியப்பனும் கண்மணியும் பொம்மையுடன் காரில் ஏறி பட்டம்மாவை கடந்து சென்றனர். ஒன்றும் புரியாமல் பட்டம்மாள் அங்கிருந்து நகர்ந்தாள்.
இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. அதனால் பட்டம்மா பாட்டி கிளம்ப நினைத்து, குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார்..
ஊரின் கடைசியில் ஒரு குடிசைப்பகுதி, அந்த இடம் தான் பட்டம்மா பாட்டியின் கடைசி விற்பனை தளமும் கூட… அப்பகுதியில் நுழைந்த பட்டம்மாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நாச்சியப்பனின் கார் ஒரு குடிசை வீட்டின் முன் நின்றிருந்தது.
“இது மேரி குட்டியோட வீடாச்சே…. அங்க ஏன் இந்த வண்டி நிக்குது, இந்த எடத்துக்கெல்லாம் இந்த பெரிய மனுஷன் வரமாட்டாதே. எதுவும் பிரச்சனையோ?’ என்ற பரபரப்புடன் பாட்டி வீட்டினுள் நுழைந்தாள்.
அங்கு மேரி தலை, கை, கால்களில் சிறு காயங்களுடன் தரையின் ஒரு விரிப்பின் மேல் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அருகில் கண்மணியும், நாச்சியப்பனும் அமர்ந்திருந்தார்கள்.
மேரியைப் பார்த்ததும், “என்னப் பெத்த மக்கா, என்னாச்சி உனக்கு மேரிக்குட்டி” என்று அழுகையும் ஆத்திரமுமாக கேட்டாள்.
பட்டம்மாவை பார்த்ததும் நாச்சியப்பன், “வா பட்டம்மா என்ன ஒரே ஆச்சர்யமா இருக்கா? எல்லாரையும் விட நான் தான் பெரிசுன்னு நெனச்சி, வீட்டு வாசலக் கூட மிதிக்க விடாதவன்…. இன்னிக்கு இங்க வந்து கெடக்குறானேனு…. தோனுதா?
எல்லாத்துக்கும் காரணம் இந்த மேரி பொண்ணுதான். மேரி மட்டும் இல்லன்னா, நம்ம கண்மணி இல்ல. கண்மணிய திட்டிட்டே இருப்பேன், மேரி கூட சேராதனு… ஆனா மேரி தான் கண்மணி உயிர காப்பாத்தி…. இங்க அடிபட்டு படுத்திருக்கு.”
“என்ன எசமா சொல்றிங்க?” என பட்டம்மா திகைக்க.
நேத்து பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வரப்ப ஒரு லாரி வேகமா வந்து கண்மணியை மோத பாத்திருக்கு, மேரி குறுக்க வந்து காப்பாத்த அவ உடம்பெல்லாம் காயம்.
மேரியோட இந்த சுயநலமற்ற அன்பு…. சாதி, மத, ஏழை, பணக்கார வேறுபாடு எதுவும் ஒரு உசுறுக்கு முன்னாடி முக்கியம் இல்லன்னு எனக்கு புரிய வச்சது. இனி மேரியும் எனக்கு கண்மணி போல ஒரு மக தான்” என்ற நாச்சியப்பனின் ஆணவம், சாதி வெறி அத்தனையும் கண்ணீராய் கரைந்தது.
“பாட்டி இன்னைக்கு மேரிக்கு பிறந்த நாள், அதான் அவளுக்கு பிடிச்ச மரியன்னை பொம்மையை வாங்கினேன்.” என்று கண்மணி சிரிக்க, மேரியும் மரியன்னை பொம்மையை இறுக பிடித்துக் கொண்டாள். பட்டம்மாள் தனது பங்கிற்கு ஒரு பொம்மையை எடுத்து மேரிக்கு பரிசாக கொடுத்து விட்டு தன் வழிப்பார்த்து நடக்க தொடங்கினாள்.
இப்பொழுது பாட்டிக்கு தலைபாரம் சற்றும் தெரியவில்லை. பட்டம்மாள் பாட்டியின் சத்தம் ஓங்கி ஒலித்தது…
பொம்மையம்மா……. பொம்மை……………!
(சே.ஷீபா, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை)
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}