தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் உதயநிதி மனு

Nov 26, 2026,12:50 PM IST

சென்னை : தவெக எம்எல்ஏ தொடர்பான விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சர் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனு அளித்துள்ளார். 


ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, இந்த வழக்கை உடனடியாக 'சிபிஐ' வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதோடு தவெக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுக்களையும் அவர் முன் வைத்துள்ளார்.    


தவெக எம்எல்ஏ விவகாரம்: 


ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு அனைத்தும் தெரியும் என்றும், அவர் ஏன் அதனை மூடி மறைத்தார் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்திற்குத் தலைமைச் செயலாளர் கொண்டு சென்றாரா இல்லையா எனக் கேட்ட அவர், கொண்டு செல்லவில்லை என்றால் அது தலைமைச் செயலாளரின் தவறு என்றும், கொண்டு சென்றிருந்தும் முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்தார். அப்படியென்றால் முதல்வரும் உடந்தையாக இருந்திருக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டினார்.  


தலைமை செயலாளர், முதல்வரையும் சேர்க்கணும் : 




தவெக எம்எல்ஏவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தலைமைச் செயலாளர் பேரம் பேசியுள்ளதாகவும், எனவே அவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் (Accused list) சேர்க்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். முதல்வரும் உடந்தையாக இருந்ததால் அவரையும் இந்தக் குற்றத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த ஆட்சி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர், தவெக எம்எல்ஏ மீதான வழக்கை உடனடியாகச் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என ஆளுநரைச் சந்தித்த பின் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.   


கள்ளக்குறிச்சி விவகாரத்தை மூடி மறைக்கத் தலைமைச் செயலாளர் பேரம் பேசியுள்ளதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், எனவே முதலமைச்சர் விஜய் மற்றும் தலைமைச் செயலாளர் பெயரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்காமல் குற்றம் இழைத்தவர் பக்கம் முதலமைச்சர் நிற்பதாகக் குற்றம் சாட்டினார். குற்றம் செய்தவர்களை எச்சரிக்காமல் தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கை உடனடியாகச் சிபிஜ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   


கடந்த மாதத்தில் மட்டும் தவெக ஆட்சியில் 10 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கச் சொன்னால் ஜோதிடம் கேட்டு யாகம் வளர்த்துக் கொண்டிருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், தவெக அரசுக்குத் தனிப் பெரும்பான்மை கிடையாது என்றும், 108, 107, 106 என ஒவ்வொரு நாளும் எம்எல்ஏக்களின் பலம் குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற விசிக, ஐயுஎம்எல் (IUML) உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த விவகாரத்தில் அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்