நிழல் கூட உன்னை நேசிக்கும்!

Jul 01, 2026,03:08 PM IST

- முனைவர் கோ.லதா


உலகமே வெறுத்தாலும் உள்ளமே துறந்தாலும்,  

நிலவினைப் போலவே நிழல்கூட தொடர்ந்திடும்!  

கலங்கியே நின்றாலும் கண்ணீரைச் சிந்தினாலும்,  

விலகிடா அன்புடன் விழித்துனைக் காத்திடும்!  


இரவினில் தனித்தாலும் இருளினில் நடந்தாலும்,  

வரமென உன்னுடன் வளர்ந்துடன் வந்திடும்!  

சரணென நீவிழ சாய்ந்திடா துணையாகி,  

நிழல்கூட உன்னையே நேசிக்கும் நித்தமே!  


--


ஜூன் மாதம் கடந்தது ஞாலத்தில் மறைந்தது,  

கானலாய்க் கனவுகள் கரைந்ததோ என்றெண்ணி!  

வான்மழை பொழிந்ததும் வாடிய பயிர்களும்,  

தான்மலர் தூவியே தலைநிமிர்ந் தெழுந்தன!  


ஜூன் தந்த பாடங்கள் ஜீவனின் ஏடுகள்,  

வீணென வீழ்ந்தவை விதையென முளைக்குமாம்!  

நாணமாய்த் தோல்விகள் நாளுமே தந்தாலும்,  

காணுமோர் வெற்றிக்கு காலடி அவையன்றோ!  




வெயிலினில் வெந்ததும் வெம்மையில் நொந்ததும்,  

புயலினில் சாய்ந்ததும் புலம்பிடச் செய்ததும்,  

மயிலென ஆடிட மழைமுகம் காட்டவே,  

உயிரினில் ஜூலையும் ஒளியெனப் பிறந்ததே!  


ஜூன் மாதம் சொன்னது ஜெயமெனும் மந்திரம்,  

தான்துவள் வேளையில் தாங்கிடும் சொந்தமே!  

வான்தொடும் ஆசைகள் வளர்ந்திட வேண்டுமெனில்,  

தேன்துளி துன்பமும் தேவையே வாழ்விலே!  


கடந்தநாள் கவலைகள் கரைந்திடக் காண்போம்,  

தொடர்ந்திடும் ஜூலையில் துயரெலாம் தீர்ப்போம்!  

அடர்ந்திடும் இருளிலும் அகல்விளக் கேற்றியே,  

படர்ந்திடும் வாழ்க்கையைப் பாதையில் சேர்ப்போம்!  


ஜூன்மழை நனைத்தது ஜீவனின் வேரினை,  

தேன்மழை போலவே தேகத்தைத் தழுவவே!  

வான்மழை தந்திடும் வளமையைப் போலவே,  

நான்மறை வாக்குகள் நலமெலாம் தந்திடும்!  


இழந்ததை எண்ணியே இருந்திடல் வேண்டாம்,  

உழைத்திடும் கரங்களில் உலகமே உண்டாம்!  

பழமையைக் களைந்திடு புதுமையைப் புனைந்திடு,  

கழனியில் விதைத்திடு கனவுகள் விளைந்திடும்!  


ஜூன்தந்த வலிகளும் ஜெயத்தின் படிகளாம்,  

நான்தந்த ஜெபமும் நாளையின் விடியலாம்!  

வான்தந்த மேகமும் வற்றிடா கருணையாம்,  

தான்தந்த வாழ்வினைத் தழைத்திடச் செய்வோம்!  


அரைகுறைக் கனவினை அகற்றிய ஜூன்மாதம்,  

நிறைவுடன் வாழவே நிமிர்த்திய மாதம்!  

குறைகளைக் களைந்திட குருவென வந்தது,  

நிறைமதி போலவே நிம்மதி தந்தது!  


ஜூலையே வருகவே ஜெயமுடன் வருகவே,  

ஆலய மணியென அருள்மழை தருகவே!  

காலமே கனிந்திட காற்றினில் தேன்பொழி,  

ஞாலமே செழித்திட நல்வரம் அருள்வாயே!  


புதியதோர் எண்ணமும் புதியதோர் வண்ணமும்,  

புதியதோர் வாழ்வினைப் படைத்திட வந்ததே!  

பதியமாய் நம்பிக்கை பாரினில் விதைத்திட,  

விதியையும் வென்றிடும் விவேகம் தந்ததே!  


ஜூன்மாதம் போனது ஜீவனின் பாடமாய்,  

ஜூலைமாதம் வந்தது ஜோதியின் கோலமாய்!  

வான்மாதம் போலவே வாழ்வினில் ஒளிவீச,  

நான்மாதம் வாழ்த்தியே நன்றியைக் கூறுவோம்!


--


தேசிய மருத்துவர் தினம்


வெண்ணிற ஆடையில் விண்ணவர் போலவே,  

கண்ணிற் கருணையைக் காட்டிடும் தேவரே!  

எண்ணிலா உயிர்களை இமைபோல் காத்திடும்,  

புண்ணிய மூர்த்தியே புகழ்ந்துனைப் போற்றுவோம்!  


நோயெனும் இருளினை நொடியினில் களைந்திடும்,  

தாயெனும் அன்பினைத் தாரணி க்கீந்திடும்!  

வாய்மொழி மருந்தென வாழ்வினை மீட்டிடும்,  

தூயதோர் கரங்களைத் தொழுதுனை ஏத்துவோம்!  


இரவெனும் வேளையில் இமைக்கா விழிகளும்,  

உறவெனும் பந்தத்தை உதறிய தியாகமும்,  

உறக்கமும் மறந்துனை உயிர்களைக் காத்திடும்,  

அறத்தின் வடிவமே அருமருந் தீவாயே!  


பச்சிளம் குழந்தையின் பசுமையைக் காத்திடும்,  

முத்தெனும் மூப்பினை முதுமையில் தாங்கிடும்!  

இச்சையாய் இளைஞரை இன்னலில் மீட்டிடும்,  

நச்செனும் நோயினை நசுக்கிடும் வீரரே!  


கொடுந்தொற்று காலத்தில் குடும்பத்தை மறந்தவர்,  

நடுங்கிடும் உயிர்களை நாடியே அணைத்தவர்!  

கடுந்துயர் தாங்கியும் கண்ணீரைத் துடைத்தவர்,  

தொடும்மருந் தாகியே தொல்லைகள் தீர்த்தவர்!  


ஊசியும் மருந்துமே உன்னுடை ஆயுதம்,  

நேசமும் இரக்கமும் நெஞ்சினில் தூயகம்!  

பேசிடும் வார்த்தையும் பிணிதீர்க்கும் மந்திரம்,  

வீசிடும் பார்வையும் வேதனை தீர்க்குமே!  


கற்றதைக் கொடுத்திடும் கருணையின் ஊற்றுநீ,  

பெற்றவர் போலவே பேணிடும் தோற்றம்நீ!  

உற்றதோர் துணையென உலகினில் நின்றவன்,  

மற்றவர் வாழ்வினை மலர்ந்திடச் செய்தவன்!  


படிப்பினில் உயர்ந்தவர் பண்பினில் சிறந்தவர்,  

மடிப்பிலா மனத்துடன் மக்களைக் காப்பவர்!  

துடிப்புடன் ஓடியே துயரினைத் தீர்ப்பவர்,  

வடித்திடும் வியர்வையில் வாழ்வினைச் சேர்ப்பவர்!  


கிராமமும் நகரமும் கிளர்ந்தெழக் காத்தவர்,  

சிரமமும் பாராமல் சேவையே செய்தவர்!  

பரமனின் கரமெனப் பாரினில் திகழ்பவர்,  

தரமுடன் பணியினைத் தாரணிக் கீந்தவர்!


பிணியெனும் பகையினைப் பிளந்திடும் வாளிவர்,  

மணியெனும் உயிர்களை மகிழ்வுடன் காப்பவர்!  

அணியென வந்திடும் அவலங்கள் தீர்த்திடும்,  

மணிமுடி மன்னராய் மருத்துவர் வாழியே!  


தேசமே போற்றிடும் தெய்வீகப் பணிசெய்வாய்,  

நேசமே வடிவென நித்தமும் வாழ்வாய்!  

வாசமாம் மலரென வையகம் மணந்திட,  

நேசத்தின் திருவுரு நீடூழி வாழ்கவே!


--


விழுந்து விழுந்து சிரிப்போம்


சிரிப்பெனும் மருந்தினைச் சிந்தையில் விதைத்திட,  

வரிப்புனல் போலவே வந்தது ஜோக்தினம்!  

பரிதவித் திருந்தவர் பல்லிளித் தெழுந்திட,  

கரிசனம் கொண்டதோர் களிப்புடைத் திருநாளே!  


கவலையின் மேகங்கள் கலைந்திடச் செய்திடும்,  

உவகையின் தூறலாய் உள்ளத்தில் பொழிந்திடும்!  

அவலமாம் நெஞ்சிலும் அமுதெனப் பாய்ந்திடும்,  

நகைச்சுவைப் பூக்களை நாளுமே தூவிடும்!  


வேலையின் பாரமும் வேதனைத் தீயினும்,  

பாலையாம் வாழ்வினைப் பசுமையாய் மாற்றிடும்!  

சாலையில் செல்லவே சலிப்பினைப் போக்கிடும்,  

ஆலய மணியென அகமதை மலர்த்திடும்!  


நண்பர்கள் கூடியே நகைத்திடும் வேளையில்,  

துன்பங்கள் தூரமாய்த் தொலைந்திடக் காண்பமே!  

இன்பத்தின் ஊற்றென இதழ்களில் பூத்திடும்,  

அன்பினைப் பெருக்கிடும் அருமருந் தாகுமே!  


ஜோக்குகள் சொல்லியே ஜொலிக்கிற உள்ளமும்,  

தாக்கிடும் துன்பத்தைத் தகர்த்திடும் வல்லமை!  

நோக்கிடும் விழிகளில் நூறுமின் னல்களை,  

ஊக்கிடும் சிரிப்பினில் உலகமே மயங்குமே!  


சிரிப்பது நல்லதாம் சீரிய மருந்தாம்,  

உரிப்பது கவலையை உடனடி விருந்தாம்!  

பெரிதெனும் நோய்களும் பிணிகளும் தீர்ந்திட,  

சிறியதோர் ஜோக்கினால் சீர்பெறும் வாழ்விது!  


வாய்விட்டுச் சிரித்திடு வாழ்வினை ரசித்திடு,  

நோய்விட்டுப் போய்விடும் நோக்கமே நிறைந்திடும்!  

தேய்ந்திடும் உள்ளமும் தெளிவுடன் துளிர்த்திடும்,  

சாய்ந்திடும் வாழ்விலும் சாரலாய்ச் சிரிப்புமே!


--


உலக விளையாட்டு பத்திரிக்கையாளர் தினம்


மைதானக் காற்றினில் மனமதைக் கலந்தவர்,  

செய்தியைச் சேகரித் துலகுக்கு ஈந்தவர்!  

எய்திடும் வெற்றியை எழுத்தினில் வடித்தவர்,  

வையகம் போற்றிடும் விளையாட்டுப் பத்திரிகையாளரே!  


வியர்வையின் வாசத்தை விறுவிறுப் பாக்கியே,  

துயர்வெல்லும் வீரத்தைத் துணிவுடன் சொல்லியே,  

உயர்பறக் கின்றவர் உள்ளத்தைத் தொட்டவர்,  

பயமறி யாதவர் பணிசெயும் தூதரே!  


இரவுபகல் பாராமல் இடரினைத் தாங்கியே,  

அரங்கினில் ஓடியே அற்புதம் கண்டவர்!  

கரங்களில் பேனாவும் கண்களில் கனவுமாய்,  

சிரமத்தை ஏற்றவர் சிறப்புடைச் சீரியர்!  


ஓடியே வென்றவன் ஓய்வினில் அமர்ந்திட,  

ஓடியே சென்றவர் உண்மையைத் திரட்டுவர்!  

கூடியே நின்றவர் கூறிய கதைகளை,  

நாடியே தந்தவர் நல்லறம் காப்பவர்!  


பந்தயக் களத்தினில் பறந்திடும் பந்தென,  

சிந்தனை ஓட்டத்தில் சிறகடித் தேகுவர்!  

வெந்தணல் வெயிலிலும் வெள்ளமாம் மழையிலும்,  

சொந்தமாம் உறவினைத் துறந்தவர் பத்திரிகையாளரே!  


வெற்றியின் களிப்பினை விளக்கிடும் கலையவர்,  

தோல்வியின் பாடத்தைத் தொகுத்திடும் வலையவர்!  

வேர்வையைப் போற்றியே வீரரை உயர்த்துவர்,  

பார்முழு துணரவே பாதையை அமைப்பவர்!  


கால்பந்து மைதானம் கபடியின் களமென,  

ஓலிம்பிக் கோதாவும் உலகக்கோப் பையுமே,  

நாலுதிக் கெல்லையும் நடந்ததை எழுதியே,  

சாலவே உலகுக்குச் சாட்சியாய் நின்றவர்!  


எல்லையில் நின்றவர் இலக்கினைப் படம்பிடித்து,  

தொல்லையைப் பொருட்படுத் தாமலே தொடர்பவர்!  

வல்லமை வீரரின் வரலாற்றைப் பதித்தவர்,  

நல்லவை நாட்டினில் நடந்திடச் செய்தவர்!  


உண்மையை உரைத்திடும் உள்ளமே இவர்துணை,  

திண்மையைத் தேடியே திரிந்திடும் கால்களே!  

வண்மையைப் போற்றியே வாழ்வினை எழுதுவர்,  

எண்ணமே ஏடாக எழுத்தினைப் படைப்பவர்!  


கோப்பையைத் தூக்கிடும் கோமகன் கதைமட்டும்,  

காப்பிய மாகாது களத்தினில் வியர்த்தவர்,  

தோப்பென வளர்த்தவர் தொண்டரின் கதையினை,  

நாப்பறை சாற்றியே நாளுமே வாழ்பவர்!  


விளையாட்டு வீரரின் விழிநீரைத் துடைத்திடும்,  

களைப்பினைப் போக்கியே கனவினை வளர்த்திடும்!  

துளைத்திடும் கேள்வியால் துணிவினை விதைத்திடும்,  

வளைந்திடா நெஞ்சுடன் வாய்மையைக் காப்பவர்!  


நொடிப்பொழு தாயினும் நூறுவித சேதிகள்,  

கடிகார முள்ளெனக் கடமையில் சுழன்றவர்!  

படிப்படி யாகவே பாரினை அளந்தவர்,  

முடிவிலா ஆர்வத்தால் முழுமையைக் கண்டவர்!  


உலகமே உற்றிட உணர்வினைத் தந்தவர்,  

பலமுறை வீழ்ந்தவர் பார்த்துமே எழுந்தவர்!  

நலமுறச் செய்திகள் நாளுமே தந்தவர்,  

குலமுற வாழிய கூற்றினில் சிறந்தவர்!  


விளையாட்டுத் தூதராய் விண்ணளவு புகழ்பெற்ற,  

தளராத பத்திரிகைத் தலைமக்கள் வாழ்கவே!  

உளமாரப் போற்றியே உயர்வினை வாழ்த்தியே,  

தளமமைத் தோர்க்கிந்தத் தனிநாளில் வணக்கமே!


--


விழிப்புணர்வு




கண்ணினைத் திறந்திடு 

காலத்தை உணர்ந்திடு,

விண்ணினை அளந்திட 

விழிப்புடன் நடந்திடு!

எண்ணமும் செயலுமே ஏற்றமாய் அமைந்திட, 

மண்ணிலே மாண்புடன் மாற்றத்தைப் படைத்திடு!


--

மக்களின் குரலாக மன்றத்தில் ஒலித்திடும்,  

தக்கதோர் அவையினைத் தலைவணங்கிப் போற்றிடு!  

எக்குடி மக்களும் எழுச்சியாய் வாழ்ந்திட,  

மிக்கதோர் சட்டங்கள் விளைந்திடும் மன்றமே!  


நாட்டின் நலனுக்கு நாள்தோறும் உழைத்திடும்,  

கோட்டையாய் மக்களின் கோரிக்கை காத்திடும்!  

வீட்டுக்கு வீடுமே விளக்காகச் சட்டமும்,  

நாட்டுக்கு வழியாக நாடாளு மன்றமே!  


உரிமைகள் காத்திடும் உயர்ந்ததோர் சபையிது,  

அறிவுடைச் சான்றோர் அமர்ந்திடும் அவையிது!  

நெறிமுறை வகுத்திடும் நேர்மையின் களமிது,  

குறைகளைக் களைந்திடும் குடியரசின் தளமிது!  


வாக்கினால் தேர்ந்தெடும் மாந்தர்கள் கூடிட,  

நோக்குடன் நாட்டினை நோக்கியே ஆய்ந்திட,  

தேக்கமாம் துயர்களைத் தீர்த்திட வழிசொலும்,  

ஊக்கமாம் திட்டங்கள் உருவாக்கும் மன்றமே!  


ஆள்பவர் மக்களே அரசெனும் தத்துவம்,  

கேட்பவர் குரலாகக் கிளர்ந்தெழும் சத்தியம்!  

மாட்சிமை குடியரசின் மாண்பினைக் காத்திட,  

ஆட்சியின் அச்சாணி ஆகிடும் மன்றமே!  


கருத்தினால் மோதியும் கருத்தொருமித் தேறிடும்,  

திருத்தமாம் சட்டங்கள் திருந்தியே செய்திடும்!  

வருத்தமாம் ஏழையின் வாழ்வினை உயர்த்திட,  

திருத்தமாய்த் திட்டங்கள் தீட்டிடும் மன்றமே!  


சாதிமத பேதமும் சாய்ந்திட வேண்டுமென,  

நீதிநெறி காத்திட நித்தமும் பாடுபடும்!  

ஆதிமுதல் இன்றுவரை அறத்தினை நாட்டிட,  

சோதியாய்ச் சட்டங்கள் சுடர்விடும் மன்றமே!  


உலகினில் எங்கணும் உறுப்பினர் கூடியே,  

பலவித மாந்தரின் பண்பாடு பேசியே,  

நலமுற நாடுகள் நல்லுறவு கொள்ளவே,  

பலமுறை கூடிடும் பாராளு மன்றமே!  


அமைதியை நிலைநாட்டி அனைவரும் வாழ்ந்திட,  

சமத்துவம் மலர்ந்திடச் சபதங்கள் ஏற்றிடும்!  

இமையெனக் காத்திடும் இறையாண்மை என்றுமே,  

சமரசம் செய்திடும் சர்வதேச மன்றமே!  


ஜனநாயகத் தூண்களில் தலையாய தூணிது,  

மனமகிழ் மக்களின் மகத்தான பேணிது!  

கனவுகள் மெய்ப்படக் கருத்தினைச் செயலாக்கும்,  

தினமிதைப் போற்றியே திறம்பட வாழ்ந்திடு!  


ஊழலை ஒழித்திடும் உறுதியை ஏற்றிடு,  

வாழ்வினை வளமாக்கும் வழிவகை கூறிடு!  

தாழ்விலா நாடெனத் தரணியில் ஓங்கிட,  

வாழ்வியல் சட்டங்கள் வகுத்திடும் மன்றமே!  


நாளைய தலைமுறை நலமுடன் வாழ்ந்திட,  

காலமும் காத்திடும் காவலாய் நின்றிடும்!  

ஆளுமை மிக்கதோர் அவையினைப் போற்றியே,  

நாளுமன்றத் தினத்தினை நன்றியோடு கொண்டாடு!


--

ஊர்தோறும் உலகினை உள்ளங்கை தன்னிலே,  

சீர்தூக்கி வைத்திடும் சீரிய ஊடகமே!  

நேர்த்தியாய் செய்திகள் நிமிடத்தில் தாவிடும்,  

பார்த்திடும் விழிகளைப் பரவசம் ஆக்கிடும்!  


கடல்தாண்டிச் சென்றவர் கருத்தினைக் கேட்டிட,  

உடல்விட்டுப் பிரிந்தவர் உளம்விட்டுப் பேசிட,  

தடமின்றித் தொடர்புகள் தழைத்திடச் செய்திடும்,  

திடமான பாலமாய் திகழ்ந்திடும் ஊடகம்!  


கல்வியைக் கொடுத்திடும் கருவியாய் மாறிடும்,  

செல்வமாம் அறிவினைச் சேகரித் தீந்திடும்!  

அல்லல்கள் வந்திடின் அனைவரும் ஒன்றிட,  

நல்லதோர் கரமாக நாள்தோறும் நின்றிடும்!  


கலைகளை வளர்த்திடும் களமாகத் திகழ்ந்திடும்,  

திறமைகள் வெளிவரத் திரையாக அமைந்திடும்!  

நிலையான நட்புகள் நிறைந்திட வழிசெயும்,  

மலையான தூரத்தை மறைத்திடும் மாயமே!  


வியாபாரம் பெருகிட விரைவான வழிதரும்,  

தயாரித்த பொருள்களைத் தரணிக்கு அறிவிக்கும்!  

முயற்சிகள் வென்றிட முகநூலாய் உதவிடும்,  

பயிராக எண்ணங்கள் படர்ந்திட வைத்திடும்!  


நாட்டுக்கு நல்லதை நாள்தோறும் உரைத்திடும்,  

கேட்டினைக் களைந்திடக் குரலாக ஒலித்திடும்!  

வீட்டுக்குள் இருந்தபடி வெளிநாடு கண்டிட,  

பாட்டுக்குள் உலகினைப் பதிவாக்கும் ஊடகம்!  


அறிவியல் வளர்ச்சியின் அற்புத விளைவிது,  

செறிவான சிந்தனைச் செயல்களின் களமிது!  

நெறியுடன் பயன்படின் நிலவுக்கு ஏணியாம்,  

குறையுடன் பயன்படின் கொடுமையின் தூணியாம்!  


பொய்ச்செய்தி பரப்பிடும் புன்மையைத் தவிர்த்திடு,  

மெய்ச்செய்தி ஆய்ந்தபின் மேல்நிலைக்கு அனுப்பிடு!  

நச்செண்ணம் விதைத்திடும் நண்பரை விலக்கிடு,  

இச்சமூக வலையினை இனிமையாய் ஆக்கிடு!  


நேரத்தை வீணினில் நீக்கிடச் செய்யாதே,  

சீர்த்திடும் பணிகளைச் சிதைத்திடச் செய்யாதே!  

ஊர்த்துயர் களைந்திட உழைத்திடும் கருவியாய்,  

பார்த்திடும் பயன்களைப் படைத்திடும் உறவியாய்!  


இளைஞரின் ஆற்றலை இணைத்திடும் சக்தியே,  

வளைகுடா தாண்டியும் வாழ்த்திடும் பக்தியே!  

துளையிலா உலகினைத் தொடுத்திடும் நூலிது,  

களைக் களைந்திடும் கனவினை நாளிது!  


அன்பினை விதைத்திடும் அரியதோர் களமிது,  

துன்பினைப் பகிர்ந்திடும் துணையதோர் நலமிது!  

இன்றைய நாளினை எண்ணியே போற்றிடு,  

நன்றியோடு ஊடக நலன்களை ஏற்றிடு!


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்