கருப்பு.. ஒரு மனதின் குமுறல்!

Oct 22, 2026,01:31 PM IST

- கே. பிரியங்கா


கருப்பு தான் என் நிறம்... அதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? அதுவே என் பலம்!*


நான் பிரியங்கா.


சிறு வயதில் இருந்தே நான் கேட்டு வளர்ந்த ஒரே வார்த்தை "கருப்பு".


"ஏன் இவ்வளவு கருப்பா இருக்க?"

"கலரா இருந்தா தான் அழகு"

"கருப்பா இருந்தாலும் களையா இருக்க" 


என்னை பொறுத்தவரை அந்த கடைசி வார்த்தை தான் என்னை அதிகமாக காயப்படுத்தியது. கருப்பாக இருந்தால் களையாக இருக்க கூடாதா? கருப்பே ஒரு களை இல்லையா?


இதை கேட்டு கேட்டு கண்ணாடி முன் நின்று, "நான் கருப்பாக இருப்பது தப்பா?" என்று என்னை நானே வெறுத்து, தனியாக அழுத நாட்கள் நிறைய உண்டு.




என்னை தாங்கி பிடித்த இரண்டு தூண்கள் - என் அப்பா அம்மா


உலகமே என்னை நிறத்தை வைத்து எடை போட்ட போது, என்னை தங்கம் என்று சொன்னவர்கள் என் அப்பா அம்மா தான்.


என் அப்பா காளிமுத்து, என் அம்மா சாரதா. என்னை படிக்க வைத்தlg கூட பலருக்கு பிடிக்கவில்லை...


என் அப்பா காளிமுத்து, அம்மா சாரதா என்னை எம்.எஸ்.சி., எம்.எட் வரை படிக்க வைத்தார்கள் என்றால் அது அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை.


"பொம்பள புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு படிப்பு?" கல்யாணம் பண்ணி அனுப்புங்க" என்று சொந்தக்காரர்களே என் அம்மா அப்பாவிடம் சொன்னார்கள்.


ஆனால் என் அம்மா அப்பா யார் பேச்சையும் கேட்கவில்லை.


அவர்கள் ஒரு சிறிய ஹோட்டல் வைத்து, தங்கள் சொந்த உழைப்பில், காலையில் இருந்து இரவு வரை வியர்வை சிந்தி, ஊரார் பேச்சை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, என்னை படிக்க வைத்தார்கள்.


அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது தான் - "யார் என்ன பேசினாலும், உன் நல்ல எண்ணத்தை மட்டும் விட்டு விடாதே. உன் மனதை யார் துன்புறுத்தினாலும், நீ யார் மனதையும் துன்புறுத்தாதே"


அவர்கள் எனக்கு படிப்பை மட்டும் கொடுக்கவில்லை. என் வாழ்க்கைக்கான மிகப்பெரிய பாடத்தை கொடுத்தார்கள்.  அந்த நல்ல எண்ணம் தான் இன்று வரை என்னை வழி நடத்துகிறது.


என் வாழ்க்கையை முழுமையாக்கியவர்கள்


என் அப்பா அம்மா காட்டிய வழியில் தான் என் வாழ்க்கை துணை வந்தார் 


என் கணவர் பிரசாந்த்.


அவர் என் நிறத்தை பார்க்கவில்லை. என் அப்பா அம்மா வளர்த்த நல்ல மனதை பார்த்தார். என்னை ஒரு ராணி போல பார்த்துக் கொள்கிறார். அவர் கண்களுக்கு நான் தான் பேரழகி.


என் மகள் ஸகபிரத்யுஷா.


என் அழகு தேவதை. அவளை பார்க்கும் போது தான் அழகின் உண்மையான அர்த்தமே புரிந்தது.


இன்று நான் உரக்க சொல்வேன்...


வானம் கருத்தால் தான் நிலவு அழகாக தெரியும். 

இரவு கருப்பானால் தான் நட்சத்திரங்கள் ஜொலிக்கும்.

கண்ணின் கருவிழி கருப்பாக இருந்தால் தான் இந்த உலகையே பார்க்க முடியும்.


அப்படி இருக்கும் போது கருப்பு எப்படி அசிங்கமாகும்? கருப்பு தானே சக்தி!


இன்று என்னை பார்த்து அன்று கருப்பு என்று சொன்னவர்கள், என்னை பார்த்து "நீ கொடுத்து வைத்தவள்" என்கிறார்கள்


ஆம், நான் கொடுத்து வைத்தவள் தான். ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு அப்பா, அம்மா, கணவர், மகள் கிடைத்திருக்கிறார்கள்


ஆம், நான் கருப்பு தான். அதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?


கருப்பு தான் என் நிறம், அதுவே என் பலம்!


இனி யாரும் என்னை பார்த்து "கருப்பு" என்று சொன்னால், நான் தலை குனிய மாட்டேன். தலை நிமிர்ந்து சொல்வேன், "ஆம், நான் கருப்பு தான், நான் தான் அழகு!" என்று.


என்னை போன்ற பெண்களுக்கு...


இந்த கதை எனக்காக மட்டும் இல்லை..


என்னைப் போல நிறத்திற்காக அழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது தான் பதில்.


நீங்கள் கருப்பு இல்லை, நீங்கள் தங்கம்! உங்களை மட்டமா பேசுறவங்க கண்ணுக்கு தெரியாதது, உங்களுக்குள்  இருப்பது ஒளி என்று!


(கே.பிரியங்கா, M.Sc., M.Ed. படித்தவர். 2019ல் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தின் "சமூகப் பிரச்சினைகளும் தீர்வுகளும்" தொடர் சொற்பொழிவு. 2019ல் ஜெயா தொலைக்காட்சியின் "உன்னை அறிந்தால்" நிகழ்ச்சியில் பங்கேற்பு. 2019ல் சென்னை விமான நிலைய ஆணையத்தின் "மெகா சுவர் ஓவியப் போட்டியில் பங்கேற்பாளர். 2021ம் ஆண்டு, அசிஸ்ட் உலக சாதனையின் "ஆசிரியர்களின் பங்கு" இணையவழி கருத்தரங்கில் பங்கேற்பாளர். அதே ஆண்டில் அகில இந்திய சாதனை புத்தகத்தின் "145 மணி நேரத் தமிழ் இணையவழி விவாதத்தில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்