- வே.தங்கப்பிரியா
அருப்புக்கோட்டை: மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் கோவில் வரலாறு தெரியுமா உங்களுக்கு.. கேட்டாலே மெய் சிலிர்த்துப் போகும் வரலாறு இந்த கிராமத்து தேவதையுடையது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மாந்தை எனும் சிற்றூரில் வீற்றிருக்கும் மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் ஆலயம் தொன்மையான வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில், குறிப்பாக கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தினரின் முக்கிய குலதெய்வமாகப் போற்றப்படுகிறது.
பெத்தனாட்சியின் பிறப்பிடம் திருச்செந்தூர் பகுதி என அறியப்படுகிறது. அவர் மேல்மாந்தைப் பகுதியில் வளர்க்கப்பட்டார். பண்டைக்காலத்தில், 'மாந்தை' என்பது ஆடுகளை அடைத்து வைக்கும் கொட்டகையைக் குறித்தது. 'மேல்மாந்தை' என்னும் சொல், ஆட்டு மந்தைகளைக் குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டது. பெத்தனாட்சி கம்பளத்து நாயக்கர் குலத்தைச் சேர்ந்தவர்.
கொடூர மன்னன் வேலாயுதம்

கி.பி. 11-ஆம் நூற்றாண்டில், வேலாயுதம் என்னும் மன்னன் திருநெல்வேலி ஜில்லாவை (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) ஆட்சி செய்தான். சூரங்குடி, குளத்தூர், எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை, வேம்பார், மேல்மாந்தை, சண்முகபுரம் ஆகிய நிலப்பரப்புகள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. வேலாயுதம் சிறந்த போர்வீரனாக இருந்தபோதிலும், அவன் காம வெறி கொண்ட கொடூர ஆட்சியாளனாக இருந்தான்.
அவனது ஆட்சியின் கீழ், கம்பளத்து நாயக்கர்கள் அடக்கப்பட்ட சமூகமாகத் துன்புறுத்தப்பட்டனர். வேலாயுதம் நாயக்கர் இன ஆண்களை சித்திரவதை செய்ததுடன், பருவமடைந்த இளம் பெண்களைப் பிடித்து வந்து தனது அந்தப்புரத்தில் வைத்து பாலியல் இச்சைக்காகப் பயன்படுத்தி கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த பெத்தனாட்சி, குடும்ப வறுமையின் காரணமாக மன்னனின் ஆட்டுக் கொட்டகையில் பணிபுரிந்து வந்தார். இளமை முதலே அழகும் வனப்பும் நிறைந்திருந்த பெத்தனாட்சி, திருமால் தெய்வத்தின் தீவிர பக்தையாகவும், நெற்றியில் நாமம் தரிக்கும் வழக்கமுடையவராகவும் இருந்தார்.
பெத்தனாட்சி பருவமெய்திய செய்தி அறிந்த கொடுங்கோல் அரசன், வழக்கம்போல அவளையும் பிடித்து வருமாறு ஆட்களை அனுப்பினான். தன்னுடைய கற்பையும் மானத்தையும் பெரிதாக மதித்த பெத்தனாட்சி, அரசனுக்கு அடிபணிய மறுத்து, தன் உயிரை மாய்த்துத் தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாளே, பெத்தனாட்சி தெய்வ அம்சத்துடன் மாறிவிட்டாள் என்னும் செய்தி ஊர் முழுவதும் பரவியது. இதை அறிந்த அரசன், தான் ஒரு தெய்வத் தவறு இழைத்துவிட்டதை உணர்ந்து மனமுடைந்து, தானும் மரணமடைந்தான்.
தெய்வத்தன்மை மற்றும் கோயில் தோற்றம்

அதன் பிறகு, அந்த கிராமத்தில் மக்கள் பலவிதமான நோய்களால் அவதிப்பட்டனர். கிராம மக்கள் ஒன்று கூடி, கருப்பசாமியிடம் அருள்வாக்கு கேட்டனர். அப்போது கருப்பசாமி, "தென் எல்லையில் உக்கிர வடிவத்துடன் இருக்கும் பெத்தனாட்சியைச் சாந்தப்படுத்த, வசந்த காலமான மாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் திருவிழா எடுத்து வழிபட்டால், அவள் ஊர் மக்களைக் காப்பார்" என்று அருள்வாக்கு அளித்தார்.
அதன்படி, கிராம மக்கள் இணைந்து பெத்தனாட்சிக்குக் கோயில் கட்டி, அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் திருவிழா கொண்டாடி வருகின்றனர். தற்போது பெத்தனாட்சி, மேல்மாந்தையின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
வழிபாட்டு முறைகள் மற்றும் விழா சிறப்புகள்

தற்போது மாசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று பிரதான திருவிழா கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலின் மூலமண்ணை (பிடிமண்) எடுத்து அருகிலேயே புதிய பெத்தனாட்சி கோவில் எழுப்பப்பட்டது. அதனால், முதலில் கட்டப்பட்ட பழைய பெத்தனாட்சிக் கோயிலில் மாசி நான்காம் வெள்ளியன்று அக்கிராம மக்களின் சார்பாகத் திருவிழா நடத்தப்படுகிறது. மற்ற கிராமங்களில் உள்ள பங்காளிகள் அனைவரும் புதிய பெத்தனாட்சிக் கோயிலில் மாசி இரண்டாம் வெள்ளியன்று வழிபடுகின்றனர்.
திருவிழாவின் மிகச் சிறப்பான நிகழ்வு பூக்குழி இறங்குதல் (தீ மிதித்தல்) ஆகும். இந்தக் கடுமையான விரத நிகழ்வை, கோயில் பரம்பரை உறுப்பினர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாவை விளக்கு ஏந்துதல் ஒரு முக்கியமான நேர்த்திக்கடனாகச் செய்யப்படுகிறது. கன்னிப் பெண்கள் அனைவரும் கைகளில் விளக்குகளை ஏந்தி கோயிலைச் சுற்றி வந்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேண்டுவது நிறைவேறும்

மேலும், கருப்பசாமியின் முன்பு சாமியாடுபவர், ஆட்டின் இரத்தத்தைக் தன் வாயால் கடித்துக் குடித்து அருள்வாக்கு கூறுவார். அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.
பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்வதால், விழாவுக்காகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் திரைகள் (டிவி) மூலம் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்த ஆலயத்தில் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். பெத்தனாட்சி தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்த பெண் தெய்வமாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!
{{comments.comment}}