அழகர் கள்ளழகர்!

May 02, 2026,03:17 PM IST

- எம்.கே. திருப்பதி


அது

சொக்கநாதன் மீனாட்சி

சொக்கிக் கிடக்கும் 

மதுரையம்பதி! 

வண்ண நகரில்

வழிந்தோடும் 

வைகை நதி!


இங்கிருந்து

இருப்பது கல்தொலைவில் 

இருக்கிறது

திருமாலிருஞ்சோலை!

அதுதான்

பீதக ஆடையனின் பெருமாளிருஞ்சோலை!




முனிவர் மண்டூகர்- ஒரு 

மகா தவசி!

புண்மைக் குணங்கள் 

புத்தியில் 

புகா  தவசி!


அவர் ஒரு நாள் - வைகை

ஆற்றங்கரையில் 

அருந்தவம் ஆற்றினார்!


நாளும் பொழுதும் 

நல்லவன் நாமத்தை 

நாவில் ஏற்றினார்!


நீண்ட நிஷ்டையில் 

நெடியோன் நிலைத்திருக்க...

கருத்தும் கவனமும் 

கடவுளர் பால் 

குவிந்திருக்க...


அவ்வமயம் 

அங்கு வந்தார் 

துர்வாசம் போக்கும் 

துர்வாச முனி!

பார்ப்பவர் பார்வையில் 

பலாக்கனி!


மாமுனி வந்ததை 

மண்டூகர் அறியவில்லை!

மண்டூகருக்கு 

மாதவம் இன்றி 

மற்றெதும் தெரியவில்லை!


இகழப்பட்டதாய்

இருடி எண்ணினான் 

தந்த சாபத்தால்- மண்டூகரை 

தவளையாய் பண்ணினான்! 


தவம் களைத்த தவசி 

தவறுக்கு வருந்தினான் 

விமோசனம் கேட்டு

விசும்பினான்!


'அழகர் மலைக்கள்ளன் 

ஆற்றுக்கு வருவான் 

தீர்த்தம் பார்க்க!

தீர்ந்து போகும்- உன்

தீவினையும் - தெய்வ

மூர்த்தம் பார்க்க!'


தூயவன் துர்வாசன் 

இப்படி விளம்பினான்!


மண்டூக முனிவரின் 

மா பாவம் போக்கவே 

மாயவன் ஆண்டுதோறும் 

ஆற்றில் குளிக்கிறான்!

ஆனந்தத்தை விதைக்கிறான்!


தங்கப் புரவியில் 

தனித்து வருகிறான்

இருடி கேசன்!

வாரி வாரி 

வழங்குகிறான் வரத்தை 

வைகுந்த வாசன்!


அந்த நாள் ஆகும் 

வைகை ஆறு - மனித

பொய்கை என!

ஒவ்வொரு குரலும் 

ஓங்கி ஒலிக்கும் 

உலகெல்லாம் 

"உய்க" என!


பச்சைப் பட்டுடுத்தி

பாங்காய் இறங்கினான்  

பார்த்தசாரதி!

காணும் கண்களில் 

காணலாம் 

கணக்கற்ற பரிதி!


நகர் -  எங்கும்

நகராது!

பீதாம்பரத்தின்  

பீடுதவிர வேறெதுவும்

பகராது! 


அது

உலகளந்தோனின் 

உற்சாக விழா!

ஊரும் உலகமும் 

உயிரோடிருக்கும் - அங்கு

உற்சாகம் விழா!


நன்மக்கள்

நற்பண் இசைத்து 

நாராயண நாமத்தை 

நாவில் அசைத்து 


நாட்டியப் பேரொளிகள்

கூட்டிய பக்தியில்

மூட்டிய ஆட்டம் 

மும்முரமாய் அமைத்து


யாழில் வல்லவர் 

ஏழில் வல்லவர்  

நாலில் வல்லவர்

நூலில் வல்லவர் என...


பக்தித் துறையின் 

பல் திறனாளர் 

நல்திறம் காட்ட...


நன்கு நடந்தேறியது 

நாயகன் திருவிழா!

மறுபக்கம்

மீனாட்சியின் மணவிழா!


இருபெரும் நிகழ்வும்

இருக்கும் கண்களில் 

இனிக்கும் காட்சியாய்!


இனிவரும் பொழுதும்

இமை மூடியிருந்தும்

இளமையாய் இருக்கும் 

இனிய நீட்சியாய்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்